வெள்ளிமணி

கார்த்திகை தீபத்தின் சிறப்பொளி!

13th Nov 2020 06:00 AM | - முனைவர் விஜயலட்சுமி ராமசாமி

ADVERTISEMENT

 

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கினை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே 
(திருமந்திரம் - 1818)

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் இந்த ஆண்டு நவம்பர் 20 -ஆம் நாள் கொடி ஏற்றத்துடன் தொடங்கி, பத்து நாள்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. மகா தீபம் நவம்பர் 29-ஆம் நாள் நடைபெறும்.

கார்த்திகைத் திருநாளன்று, திருவண்ணாமலையில் அண்ணாமலையார் சந்நிதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன்மூலம் ஐந்து தீபங்கள் ஏற்றி, பூஜைகள் செய்வர். பின் அந்த தீபங்களை ஒன்றாகச் சேர்த்து அண்ணாமலையார் முன்வைத்து விடுவர். "ஏகன் அநேகனாகி, அநேகன் ஏகன் ஆகும்' தத்துவம் இதில் உள்ளதாக நம்புவர்.

ADVERTISEMENT

பரணி தீபம்: கொடியேற்றம் தொடங்கி பத்தாம் நாள்அதிகாலை 4 மணிக்கு மூலவர் கருவறையில் மிகப் பெரிய கற்பூரக்கட்டியில் ஜோதி ஒளியேற்றி, தீபாராதனை காட்டி, அதில் நெய்விளக்கில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். அந்த ஒற்றை நெய் தீபத்தால், நந்தி முன் 5 பெரிய அகல் விளக்குகளை ஏற்றுவார்கள். அதற்குப் பிறகு, உண்ணாமுலை அம்மன் சந்நிதியில் பெரிய 5 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவார்கள். பரணி நட்சத்திரத்தில் அதிகாலை 4 மணிக்கு இந்தத் தீபங்கள் ஏற்றப்படுவதால், பரணி தீபம் என்று கூறப்படுகிறது.
பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுக தீபம் ஏற்றப்படும். பின்னர் பரணி தீபத்தை நிறைவாக, பைரவர் சந்நிதியில் கொண்டுபோய் வைத்து விடுவர்.  

மகா தீபம்: பரணி தீபம் அதிகாலையில் ஏற்றிய அன்று மாலை 6 மணிக்கு கார்த்திகை நட்சத்திரத்தில் அருணாசல மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இம்மலை 2,668 அடி உயரமானது. 

அதற்குமுன், அண்ணாமலையார் கோயிலில் பஞ்சமூர்த்திகள், தீப மண்டபத்தில் எழுந்தருளுவார்கள். அதனைத்தொடர்ந்து, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் காட்சி தருகின்ற, அருள்மிகு அர்த்தநாரீசுவரரை உற்சவக்கோலத்துடன் தீபமண்டபத்திற்கு எழுந்தருளச் செய்வர். அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும். இத்தீபம் ஏற்றப்படும் அதே நேரத்தில் மலை உச்சியின்மீது மகாதீபம் ஏற்றப்படும். இதே நேரத்தில், எல்லா சிவன் திருக்கோயில்களிலும் தீபம் ஏற்றப்படும். 

அக்னித் தலம்: சிவபெருமான் திருக்கோயில் கொண்டுள்ள 1,008 தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை. இந்த மலையைசிவரூபம் என்பர். பஞ்ச பூதத்தலங்களுள் அக்னித் தலமாக விளங்குவதும் இம்மலைதான். பிரம்மனுக்கும் மஹாவிஷ்ணுவுக்கும் ஈசன் ஜோதிப் பிழம்பாகக் காட்சி கொடுத்த சிறப்பிற்குரிய மலையும் திருவண்ணாமலைதான்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி நிலை, காசியில் இறந்தால் மோட்ச நிலை, அண்ணாமலையை நினைத்தாலே முக்தி நிலை என்ற சிறப்பிற்குரியது திருவண்ணாமலை. இதற்கும் மேலாக, அருணாசல மலையைச் சுற்றி கிரிவலம் வருவது தனிச்சிறப்பிற்குரியது. 

"ஆதிநடம் ஆடுமலை அன்றிருவர் தேடுமலை 
சோதிமலை ஆடரவம் சூடுமலை நீதி 
தழைக்கு மலை ஞானத் தபோதனரை வாவென்று 
அழைக்கும் மலை அண்ணாமலை' 

என்பார் குருநமச்சிவாயர்.

இல்லம்தோறும் மகா தீபத்தன்றும், அதற்கு முதல் நாளும், அடுத்த நாளும் என்று மூன்று நாள்கள் தீபங்கள் ஏற்றுவர். நம்மிடம் உள்ள தீய எண்ணங்களை நீக்கி, நல்ல எண்ணங்களை எண்ணுவதற்காகத்தான் இந்த தீப வழிபாடு. தீபங்களை வரிசையாக ஏற்றி வழிபட்டால், நினைத்த காரியம் வெற்றிபெறும். வாழ்வு ஒளிமயமாக அமையும் என்றும் நம்பினர். 

தீபத்தில் கலைமகள், அலைமகள், மலைமகள் குடிகொண்டிருப்பதாகவும், முப்பெருந்தேவியர்களின் அருள்கிடைக்கும் என்றும் கல்வியும் செல்வமும் சக்தியும் கிடைக்கும் என்றும் நம்பி தீபம் ஏற்றி வழிபட்டனர். 

"இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும்காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே'  
(அப்பர் தேவாரம் 4-11-8) 

என்ற பாடலை மக்கள் பக்தியுடன் பாடி விளக்கேற்றி வழிபடுவர்.
கார்த்திகை நோன்பு: பெண்கள் கார்த்திகைத் திருநாளில் வீட்டில் கலசம் வைத்தோ அல்லது கோயிலுக்குச் சென்றோ கார்த்திகை நோன்பு  இருப்பர். ஒருதட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழம் இவைகளில் வகைக்கு 21 வீதம் வைத்து, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோன்புக் கயிறுகளையும் வைத்து நோன்பு நோற்பர். 

பின்னர், தினை மாவில் வெல்லம் சேர்த்துப் பிசைந்து அதை மாவிளக்காக்கி, அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்றியபின், கற்பூரம் காட்டி வழிபட்டு, பின் நோன்புக் கயிறுகளை அணிந்து கொள்வர். படைத்தவற்றை மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள். பெண்கள் தங்கள் குடும்பம் சிறப்பாக விளங்க வேண்டும் என்றும், தாங்கள் தீர்க்கசுமங்கலியாக வாழவேண்டும் என்றும் வழிபட்டு இந்நோன்பினை நோற்பர்.

சொக்கப்பனை: சிவன் கோயில்களில் கோயில் வாசலில், ஒரு மூங்கில் கொம்பை ஊன்றி, அதைச்சுற்றிலும் பனை ஓலைகளைக் கட்டிக் கோபுரம் போல் அமைப்பர். இதை சொக்கப்பனை என்பர். கார்த்திகை தீபம் ஏற்றிப் பூஜை முடிந்த பின், அந்த விளக்கினைக்கொண்டு சொக்கப்பனையை ஏற்றுவர். அகங்காரம், ஆணவம், அஞ்ஞானம் அழிய சொக்கப்பனையை ஏற்றுவதாகக் கூறுவர்.

சூந்து சுற்றல்: சூந்து என்பது, நெல் உமியை ஒரு துணியில் வைத்து சிறிய மூட்டைபோல் கட்டி, நடுவில் கையில் பிடித்துக் கொள்வதற்கு வசதியாக முக்கோணக் குச்சியைச் செருகி, அதனைப் பசுஞ்சாணத்தால் பூசிக் காய வைத்து விடுவர். அதை கார்த்திகைத் தீபத்தன்று, விளக்கேற்றியபின் அந்த சூந்தை நெருப்பில் பற்ற வைத்து, கைகளால் சுற்றுவர். அது மத்தாப்பு சிதறுவதுபோல் ஒளியோடு சுற்றும்போது ஒரு சத்தத்தோடும் வரும். அதைக்கண்டு சிறுவர்கள் மகிழ்ச்சி அடைவர். சொக்கப்பனை
ஏற்றுவதையும், சூந்து சுற்றுவதையும் இன்றும் கிராமங்களில் பார்க்கலாம்.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT