வெள்ளிமணி

முழங்கால் வலி நீக்கும் முருகப் பெருமான்

13th Nov 2020 06:00 AM | -சி.வ.சு.ஜெகஜோதி

ADVERTISEMENT

 

அசுரர்களை அழிக்க அன்னை பராசக்தியிடமிருந்து வேலும், பல சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் முருகப்பெருமான் பெற்றாராம். அதில் ஒன்று "மழு' எனும் ஆயுதம். அசுரனை அழிக்க அன்னையிடம் மழு என்ற ஆயுதத்தையும் கேட்டுப் பெற்றார். இது, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள மேலக்கொடுமலூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலின் ஸ்தல புராணம். இதனால், இத்தலத்தின் பெயர் கொடு+மழூர் பின்னர் கொடுமலூர் என மாறியது. இக்கோயிலில் முருகப்பெருமான் சத்ரு சம்ஹார மூர்த்தியாகவும், சுயம்பு மூர்த்தியாகவும் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோயிலும் மேற்கு நோக்கியே இருப்பதால் மேற்கு கொடுமலூர் என்பது மருவி மேலக்கொடுமலூர் என அழைக்கப்படுகிறது. பாம்பன் சுவாமிகள், எமனேசுவரம் ஜவ்வாதுப்புலவர், திருவேகம்பத்தூர் கவிராஜ பண்டிதர் ஆகியோர் இத்தலத்து முருகப் பெருமானைப் போற்றி பல்வேறு பாடல்களைப் பாடியிருக்கின்றனர்.

இரவில் மட்டுமே அபிஷேகம்: மாலை நேரத்தில் மட்டுமே இக்கோயிலில் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமை மா, பலா, வாழை இவை மூன்றும் இணைந்த முக்கனிகளால் ஆன அபிஷேகம் நடைபெறுகிறது. இச்சிறப்பான அபிஷேகத்திற்கு "முப்பழ பூஜை' என்று பெயர். அப்போது, முருகப்பெருமானின் அழகை தரிசிப்பதற்காகவே தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆடி கார்த்திகை, பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்கள் இங்கு விசேஷம்.

அன்ன நைவேத்தியம் இல்லை: இக்கோயிலில் அருள்பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமிக்கு அன்ன நைவேத்தியம் இல்லை. இதனால் பெண்கள் யாரும் இங்கு பொங்கல் வைப்பதில்லை. தேன் கலந்த தினைமாவு, வெல்லம் கலந்த பாசிப்பருப்பு, கைக்குத்தல் அரிசி, பழங்கள் இவையே படைக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

ஸ்தல விருட்சத்தின் சிறப்பு: அசுரனை வதம் செய்து விட்டு திரும்பும் வழியில் முருகப்பெருமான் இங்கு வந்து தங்கியிருந்தாராம். அப்போது அவர் பல் துலக்கிய பிறகு வலது புறமாக வீசப்பட்ட குச்சியே பெரிய அளவில் வளர்ந்து ஸ்தல விருட்சமாக (உடைமரம்) நிற்கிறது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் 48 நாள்கள் விரதமிருந்து ஸ்தல விருட்சமான உடைமரத்து இலையை சாப்பிட்டு குழந்தைப்பேறு கிடைக்கப் பெறுகின்றனர்.

முழங்கால் வலி நீக்குபவர்: தீராத முழங்கால் வலி உடையவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து மஞ்சள் பூசப்பட்டகவட்டை போன்ற வடிவிலான உடைமரக் குச்சிகளில் பூவைச் சுற்றி கோயிலை வலம் வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினால் முழங்கால் வலி நீங்குகிறது. வயிற்றுவலி, நெஞ்சுவலி உள்ளவர்களும் மாவிளக்கு வைத்து வழிபட்டு குணமடைகின்றனர்.

இருப்பிடம்: மேலக்கொடுமலூர் கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சுற்றுப்புற கிராம மக்களால் இக்கோயில் "குமரய்யா கோயில்' என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.  பரமக்குடியிலிருந்து 20 கி.மீ.தூரத்தில் உள்ள இக்கோயிலுக்கு, நகரப் பேருந்துகள் மூலமாக செல்லலாம்.

தொடர்புக்கு: பரம்பரை அறங்காவலர் ஆனந்த நடராஜன்  - 98434 30230.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT