வெள்ளிமணி

காரிய சித்தியும் கந்த சஷ்டி விரதமும்

13th Nov 2020 06:00 AM | -மருத்துவர் கைலாசம் சுப்ரமணியம்

ADVERTISEMENT

 

கடவுள் வழிபாட்டில் விரதமிருப்பதும் ஒரு வகை. வாரந்தோறும் குறிப்பிட்ட கிழமைகளிலும், மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம், சஷ்டி, ஏகாதசி போன்ற திதிகள், சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக் காலங்களிலும் விரதம் அனுஷ்டிக்கின்றனர். விரதம் இருப்பது மனதிற்கும், உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும். ஐப்பசி மாதம் தீபாவளியை ஒட்டி வரும் கந்த சஷ்டி விரதத்தை ஆறு நாள்கள் முழுவதும் கோயிலில் தங்கி முருகப் பெருமானை வழிபடுகின்றனர். 

முருகப் பெருமானுக்கு உள்ள பல பெயர்களில் கந்தன் (ஸ்கந்தன்) என்பதும் ஒன்று. கந்த புராணம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர். மாதந்தோறும் கிருஷ்ண, சுக்ல பட்சத்தில் (வளர்பிறை) வரும் சஷ்டி திதிகளில் சுக்லபட்ச சஷ்டி மிகவும் சிறந்தது. "சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்ற பழமொழிக்கு சஷ்டியில் விரதம் இருந்தால் நன்மக்களைப் பெறுவார்கள் என்று பொருள். காரியசித்தி பெற கந்த சஷ்டி விரதம் உதவும். 

ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் முதல் நாளான பிரதமை முதலாகச் சஷ்டி இறுதியாக ஆறு தினங்கள் விரதமிருந்து, கந்தப் பெருமானை பூஜித்து, திருப்புகழ், திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா, கந்த சஷ்டி கவசம் போன்ற நூல்களைப் பாராயணம் செய்து, ஏழாம் நாள் விரதத்தை முடிக்க வேண்டும். அனைத்து முருகன் திருத்தலங்களிலும் பக்தர்கள் ஆறு நாள்கள் விரதத்தை மேற்கொள்கின்றனர். "சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' என்பது வழக்கு. திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடலில் நீராடி செந்திலாண்டவனை வழிபடுகின்றனர். சூரசம்ஹாரம் முடிந்து திருத்தணியில் வந்து தங்கியதால் திருத்தணி கோயிலில் சூரசம்ஹார நிகழ்வு கிடையாது.

ADVERTISEMENT

இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா  15.11.2020 முதல் 20.11.2020 வரை நடைபெறும். சஷ்டியில் முருகப் பெருமானை வழிபடுவோம். வேலும், மயிலும், சேவலும் துணை..!

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT