வெள்ளிமணி

பன்னிரண்டு ராசிகளிலும் குரு பகவானின் சஞ்சாரம்

13th Nov 2020 06:00 AM | - ஜோதிடர்  கே.சி.எஸ். ஐயர்

ADVERTISEMENT

 

குரு பகவான் லக்னம் முதல் பன்னிரண்டு பாவங்களில் இருந்தால் என்னென்ன பொது பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

குரு பகவான் லக்னத்திலிருந்தால் தீர்க்காயுள் உண்டு. குரு பகவானுக்கு 5, 7, 9 ஆம் பார்வை உள்ளபடியால் ஐந்தாமிடத்தைப் பார்ப்பதால் புத்திர பாக்கியம் நிறைய உண்டு. ஏழாமிடத்தைப் பார்ப்பதால் நல்ல கணவன், மனைவி வாய்க்கும் யோகம் உண்டாகும். ஒன்பதாமிடத்தைப் பார்ப்பதால் வாழ்க்கையின் பிற்பகுதியில் பெரும் செல்வம் சேர்ந்து விடுகிறது. சிறப்பான கல்வி, சாஸ்திர ஞானம், நீதிபதிகளாகவும் உத்தியோகம் அமையும். நல்ல அழகுள்ள குழந்தைகளும் பிறக்கும்.

இரண்டாமிடத்தில் குரு பகவான் இருந்தால் நீதிமானாவார். சொத்து சுதந்திரம் நிறைய உண்டு. வாக்கு பலிதமும் ஏற்படும். நல்ல விஷயங்களை அடிக்கடி பேசுவார்கள், கெட்ட விஷயங்களைத் தன் வாயால் கூற மாட்டார்கள். பரோபகார சிந்தனையும் ஏற்படும். தானும் வாழ வேண்டும் மற்றவர்களும் வாழ வேண்டும் என்ற சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். தீர்க்காயுள் உண்டாகும்.

ADVERTISEMENT

மூன்றாமிடத்தில் குரு பகவானிருந்தால் தன் உடன்பிறந்தவர்களுக்கு கடைசி காலம் வரை தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருவார்கள். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் இவரைப் பாராட்டும் வண்ணம் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் தப்பு செய்பவர்களை உடனுக்குடன் கண்டிப்பதில் தயக்கம் காட்ட மாட்டார்கள். இதனால், குற்றம் செய்தவர்களை வேலையில் இருந்து நீக்கி விடுவார்கள் என்று எண்ணக் கூடாது. "முதுகில் அடிப்பாரேயன்றி வயிற்றிலடிக்க மாட்டார்'. அதாவது வேலையில் மண்ணைப் போட மாட்டார். முதலில் இவரைப் பார்த்து வேறு விதமாக நினைத்தவரெல்லாம் "அடித்த கையே அணைத்தது' என்று உணர்வார்கள்.

நான்காமிடத்தில் குரு பகவான் இருந்தால் சொந்த வீடு, வண்டி, வாகனம், கால்நடைகளை சொந்த இடத்தில் வளர்க்கும் யோகமும் உண்டு. அனாவசிய வீண் செலவுகள் ஏற்படாது, எதிலும் சிக்கன போக்கைக் கடைப்பிடிப்பார். இரண்டொரு அரிசி கீழே சிந்திவிட்டாலும், உடனே அதை எடுத்து மொத்த அரிசியில் சேர்ப்பார். "செலவில் விட்டாலும் சிந்தலில் விடக்கூடாது' என்பது இவருடைய தத்துவமாகும்.

ஐந்தாமிடத்தில் குரு பகவான் இருந்தால் புத்திர பாக்கியம் குறைவாக இருக்கும் (காரகோ பாவநாசாய என்பது ஜோதிட விதி). இருப்பினும் "ஸ்திரி நாம் குரு பலம் ஸ்ரேஷ்டம்' என்பதும் ஒரு ஜோதிட வழக்காக இருப்பதால் ஐந்தாம் இடத்திலுள்ள குரு பகவான் பெண்களுக்கு அனைத்து சிறப்புகளையும் தேடாமலேயே கொடுத்து விடுவார். மாதர் குல மாணிக்கமாகவும் திகழ வைப்பார். அழகிய கண்களை உடையவர். ஒரு கிராமத்தின் தலைவனாகவோ, கீழ்க் கோர்ட்டுக்காவது நீதிபதியாக உத்தியோகம் அமையும். ஆயுள் பாகம் நிறைய உண்டு. அல்லது காவல் துறை, ராணுவத்தில் வேலை அமையும். ஐந்தாமிடத்தில் உள்ள குரு பகவான் ஒன்பதாம் பார்வையாக லக்னத்தைப் பார்வை செய்வதால் தீர்க்காயுள் என்று கூற வேண்டும்.

ஆறாமிடத்தில் குரு பகவான் இருந்தால் வாதப் பிரதிவாதங்களைச் செய்பவராக இருப்பார். தர்க்க வாதத்தில் தேர்ந்தவராவார். எதிரிகளை வெல்லும் சக்தி உண்டாகும். அதேநேரம் கடன் ஏற்பட்டால் அது உடனடியாகத் தீர்ந்து விடாமல், ஒன்பதாவது, பதினொன்றாமதிபதிகளின் தசையிலோ, புத்தியிலோதான் கடன்கள் நிவர்த்தியாகின்றன. சிலருக்கு மூல வியாதி ஏற்படுகிறது.

ஏழாமிடத்தில் குரு பகவான் இருந்தால் புகழுடையவர், தைரியசாலி, வீரதீர பராக்கிரமச் செயல்களால் வெற்றி பெறுவார். நல்ல கணவன் / மனைவி அமைவார். எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணமுடையவர். புத்திர பாக்கியம் நிறைய இருக்கும். செய்தொழிலில் நிறைய லாபம் அடைவார். ஓரிரு முறை வெளிநாடு சென்று வரக் கூடியவராகவும் அல்லது வெளிநாட்டு வர்த்தகம் (ஏற்றுமதி, இறக்குமதி) செய்பவராகவும் இருப்பார். மற்றவர்களுக்குக் கடன் கொடுத்தால் அதை உடனே மறந்து விடக்கூடியவராகவும் இருப்பார். வாங்கியவர், தானே திருப்பிக் கொடுத்தால்தான் உண்டு. "பாத்திரமறிந்து பிச்சையிடு' என்ற பழமொழி இவர்களுக்கு ஒத்து வருகிறது.

எட்டாமிடத்தில் குரு பகவான் இருந்தால் பிறந்த இடத்தில் இருந்து வெகு தூரம் சென்று பணம் சம்பாதிப்பார். வாழ்க்கையின் பெரும் பகுதி வெளிநாடுகளிலேயே கழியும். பணம் சம்பாதிக்கும் திறன் நிறைய உண்டு. அதேபோல் வீண் விரயங்களையும் சில நேரங்களில் செய்வார். இவர் அனுபவிக்காத கஷ்டமும் இல்லை. சுகமும் இல்லை என்று இரு துருவங்களையும் பார்த்து விடுவார். எதிரிகளை கடைசியில் வெல்லும் சக்தியும் உண்டாகும்.

ஒன்பதாமிடத்தில் குரு பகவான் இருந்தால் சாஸ்திர விற்பன்னர், சகலகலா பண்டிதர், வேத புராண இதிகாசங்களைக் கரைத்துக் குடித்தவர். நியம நிஷ்டைகளில் (சடங்கு சம்பிரதாயம்) நம்பிக்கை உடையவர். சிலர் கோயில் பூசாரிகளாகவும் அர்ச்சகர்களாகவும் இருப்பர். பூர்வீகச் சொத்துகளை அடைவர். சொந்த வீடு, நிலம் வாங்குவார்கள். குழந்தை பாக்கியம் நிறைய உண்டு. தீர்க்காயுள் யோகமாகும்.

பத்தாமிடத்தில் குரு பகவான் இருந்தால் உத்தியோகத்தில் நல்ல புகழும் பெயரும் உண்டு. எடுத்த காரியங்களை வைராக்கியத்துடன் முடிக்கும் திறனும் உண்டாகும். நல்ல கல்வியும், வண்டி, வாகனமும் உண்டாகும். சிலருக்கு பெண்களால் சிறு தொல்லைகளும் தோன்றி மறையும்.

பதினொன்றாமிடத்தில் குரு பகவான் இருந்தால் புத்திர பாக்கியம் நிரம்ப உண்டு. குரு பகவான் பொதுவாகவே புத்திர காரகராவார். அவர் லாப ஸ்தானத்திலிருந்தால் இந்த வகையில் அனுகூலங்கள் உண்டாகும். சங்கீதத் துறையிலும் நல்ல பயிற்சி ஏற்படும். அரசாங்க விருதுகள் கிடைக்க வாய்ப்புண்டாகும். இந்த நிலையை "ஏகாதச பிரகஸ்பதி' என்று ஜோதிட சாஸ்திரம் சிலாகித்துக் கூறுகிறது.

பன்னிரண்டாமிடத்தில் குரு பகவான் இருந்தால் அந்த ஜாதகரும் பெரும் பகுதி அந்நிய நாட்டில் வசித்து பணம் சம்பாதிப்பார். ஆனால் எத்தனை வருடங்கள் தூர தேசத்திலிருந்தாலும் கடைசியில் சொந்த நாட்டிற்கே வந்து சேருவார். ஆணாக இருந்தால் மனைவி சொல்லே மந்திரம் என்று இருப்பார். அதனால், இவர்களின் குடும்ப பாரத்தை பெருமளவு மனைவியே ஏற்று நடத்துபவளாக அமைவாள் என்பது நியதி.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT