வெள்ளிமணி

தீபாவளியில் திவ்ய தரிசனம்!

13th Nov 2020 06:00 AM

ADVERTISEMENT


அன்னம் என்பது உணவையும், பூரணம் என்பது முழுமையையும் குறிக்கும். அன்னை பார்வதி தேவி உயிர்களுக்கு உணவைத் தந்து காத்தருள மேற்கொண்ட கோலமே அன்னபூரணி ஆகும். காசியின் முதன்மைத் தெய்வமாக காசி விஸ்வநாதர் இருந்தாலும், காசியின் மகாராணி அன்னபூரணியே ஆவாள். இன்றும் பெரும்பாலான வீடுகளில் கங்கா தீர்த்தமும், காசி அன்னபூரணியின் திருவுருவமும் பூஜையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

காசி தல புராணத்தின்படி, ஒரு சமயம் சிவனார் பார்வதியிடம் விளையாட்டாக, "இந்த உலகம் அனைத்தும் மாயை; இம்மாயையில் உணவும் ஒரு பகுதி' என்றார். ஆனால் பார்வதியோ சற்று கோபம் கொண்டு, "நான் உணவு உட்பட, இவ்வுலகிலுள்ள அனைத்து பொருள்களுக்கும் கடவுளாக பார்க்கப்படுபவள்; இவரென்னவென்றால் தம்மிடமே இப்படிக் கூறுகிறாரே' என்று வெகுண்டெழுந்து, தன்னால்தான் இந்த ஆற்றல் இவ்வுலகிற்குக் கிடைக்கிறது என்பதை நிரூபிக்க அப்போதே மறைந்துவிட்டாள். 

அண்ட சராசரம் நின்று, பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பசி பட்டினியால் எங்கும் ஓலம். அனைவரையும் அன்புடன் பார்க்கும் தாயல்லவா பார்வதி! மக்கள் பசியால் வாடுவதை கண்டு தன் பிடிவாதத்தை விட்டு இறங்கி கருணையுடன் வெளிவந்து, காசியில் அன்னக்கூடம் அமைத்தாள். இதுதான் சாக்கு என்று பிட்சாடனர் கோலத்தில் வந்த சிவபெருமான், பார்வதி முன் தோன்றி "இப்போது புரிகிறது, உலகம் பொருள்களால் நிறைந்தது, மாயையல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். "பவதி பிட்ஷாம் தேஹி' என்றார். அன்னையும் மகிழ்ந்து உணவளித்தார். அன்று முதல் அவள் அன்னபூரணியானாள். 

அன்னபூரணி கையில் தங்கக் கரண்டியும் உணவுப் பாத்திரமும் கொண்டுள்ளவராக வர்ணிக்கப்படுகிறார். நிறைய நகைகளை அணிந்து, இவ்வுலகின் நாயகியாய், அரசியாய் அரியணையில் அமர்ந்து தோற்றமளிக்கிறார். சிவபெருமான் உணவு வழங்குமாறு வேண்டி, பாத்திரத்துடன் கையேந்தி நிற்கிறார். உலகாளும் இவள் தன் பக்தர்கள் அனைவரும் உண்ணும்வரை தான் உண்பதில்லை எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதுபோன்று இன்னுமொரு புராணக்கதை உள்ளது. நான்முகன் என்று போற்றப்படும் பிரம்மனுக்கு முன்பு ஐந்து தலைகள் இருந்தனவாம். இதனால் அவருக்கு கர்வம் அதிகமாக இருந்தது. பார்வதி, பரமசிவன், பிரம்மா ஆகிய மூவருக்கும் இடையேயான சிறு பிரச்னையில் பிரம்மனின் ஒரு தலையை சிவனார் தன் கையினால் கிள்ளி எறிந்து விட்டார். இதனால், சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பிரம்மனின் கபாலம் சிவன் கையிலேயே ஒட்டி கொண்டது. இந்த தோஷம் நீங்க பிட்சாடனாராக சிவபெருமான் பல இடங்களில் பிட்சை பெற்றார். ஆயினும் சிவன் கையை விட்டு கபாலம் விழவில்லை. அந்த பாத்திரத்தில் எந்தப் பொருளும் தங்கவில்லை. அதே நேரம் பிரம்மதேவனை ஈசன் என நினைத்து வணங்கிய பார்வதி, பதிக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை மற்றவருக்குக் கொடுப்பது பாவம் எனக்கருதி தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொண்டு, அன்னபூரணியாக அவதரித்து, காசியில் தவம் செய்தாள். இந்த சமயத்தில்தான் பிட்சாடனாராக வந்த சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சை ஏற்றார். அந்த நேரமே பிரம்மனின் கபாலம் ஈசனின் கையை விட்டு நீங்கியது. மகாதேவனின் பசியை தீர்க்க வந்த அன்னபூரணி; உலக பசிப்பிணி தீர்க்க காசியிலேயே தங்கி விட்டாள் என்கிறது இந்த வரலாறு.

நவரத்தின சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அன்னையின் ஒரு கரத்தில் அட்சய பாத்திரமும், மறு கரத்தில் தங்க கரண்டியுடன் கூடிய தங்கத்தில் ஜொலிக்கும் அன்னபூரணியை தீபாவளியின்போது மூன்று நாள்களுக்கு மட்டுமே தரிசிக்க முடியும். அன்னையிடம் பிட்சை கேட்கும்; வெள்ளியால் செய்யப்பட்ட ஆறடி உயர பிட்சாடனார் உருவமும் அருகில் உள்ளது. தீபாவளியன்று அன்னக்கூடம் என்ற நிகழ்வில் பலவித உணவுகள், பலகாரங்கள் வைத்து பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் லட்டு தேரில் அன்னபூரணி ஊர்வலம் வருவாள். எண்ணற்ற லட்டுகளால் உருவான தேரில் உள்ள லட்டுக்களை பக்தர்களுக்கு அப்போது பிரசாதமாக கொடுப்பார்கள். இந்த அபூர்வ தரிசனத்தைக் காண கண்கோடி வேண்டும். தீபாவளி நாளில் லட்சுமி குபேரபூஜை செய்வதுபோல், அன்னபூரணியை விரதமிருந்து பூஜிக்க, செல்வங்களும் உணவும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

காசியைத் தவிர அன்னபூரணி பல திருக்கோயில்களில் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றாள். அதில் முக்கியமாக, கர்நாடக மாநிலம் சிக்மகளூர் வனத்துறை வசமுள்ள " ஹொரநாடு தங்க அன்னபூர்ணேஸ்வரி' ஆலயம் ஆகும். சிருங்கேரியிலிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் பத்ரா நதியின் கரையோரம் அமைந்துள்ள இத்தலம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் ஒரு குறுநில மன்னர் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. இதன் ஐந்தாவது தர்மகர்த்தாவான வெங்கடசுப்பு ஜாய்ஸ் என்பவரால் 1973-ஆம் ஆண்டு அட்சய  திருதியை நன்னாளில் புனராகமனம் செய்யப்பட்டு சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. இங்கு செல்லும் அனைவருக்கும் தினமும் - மதியமும், இரவும் இலைபோட்டு அன்னையின் பிரசாதம் இன்முகத்துடன் 
பரிமாறப்படுகிறது.

பரசுராம க்ஷேஷத்திரம் என்று புராணங்கள் போற்றும் கேரளாவில் அன்னபூரணிக்கான சில ஆலயங்கள் உள்ளன. காஞ்சி காமாட்சியம்மன் கோயில், தஞ்சை மாவட்டம் குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ள திருவீழிமிழலை போன்ற திருத்தலங்களிலும் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றாள். திருவையாற்றை சுற்றியுள்ள, நாயன்மார்களால் தேவாரப் பாடல் பெற்ற சப்தஸ்தான தலங்களில் ஒன்றான திருச்சோற்றுத்துறை சிவன் கோயிலில், அன்னபூரணி அழகுற அருளாட்சி செய்து வருகிறாள். 

பல வாக்யேகக்காரர்களால் பலவாறாகத் துதிக்கப்பட்டுள்ள அன்னபூரணியை, முத்தாய்ப்பாக முத்துசாமி தீக்ஷிதர் சாமா ராகத்தில் பாடிய "அன்னபூர்ணே விசாலாட்சி அஹில புவன சாட்சி கடாட்சி' என்ற பாடல் நாமனைவரும் அறிந்ததே. இதுபோல் விஸ்வநாதர் தானே குருவாகி, விகாரமான தோற்றத்துடன் சண்டாள உரு கொண்டு, உடலுக்கும், உயிருக்கும் உள்ள உறவை ஆதிசங்கரருக்கு விவரிக்கிறார். 

தெளிவு பெற்ற ஆதிசங்கர பகவத்பாதாள், இங்கு அன்னபூர்ணாஷ்டகம், விஸ்வேஸ்வராஷ்டகம், கங்காஷ்டகம் மற்றும் ப்ரமாண கிரந்தங்கள் பலவும் இயற்றினார். 

நாளை தீபாவளி நன்னாளில் (நவ.14) புத்தாடை உடுத்தி, பலகாரங்கள் உண்ணுவதோடு அன்னபூரணியின் ஆசியையும் உலக நன்மைக்காக வேண்டுவோம்; பேரானந்தம் அடைவோம்!

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT