வெள்ளிமணி

தேவ வாக்கின்படி கிடைத்த பலன்

13th Nov 2020 06:00 AM | -தேவ.சல்மாதாஸ்

ADVERTISEMENT


வேதாகமத்தில் சகரியா, எலிசபெத் குடும்பத்துக்கு தெய்வம் அருள் செய்த வரலாறு உண்டு. 
சகரியா தேவ ஆலயத்தின் ஆசாரியன். அவரின் பணி ஆலயத்தில் தொழுகை நடப்பித்து,  மக்கள் கொடுக்கும் காணிக்கை, விளை பொருள்கள், பலியிட்ட மிருக மாமிசங்கள், திராட்சை, ரசம், மாவு இவைகளை இறைவனுக்குப் படைத்து அவற்றை எல்லா ஆசாரியர்களுக்கும் பங்கிட்டுக் கொடுப்பது ஆகியவையாக இருந்தது. 
சகரியாவும் இவ்வாறு எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். முதிர் வயது வந்தும் அவர்களுக்கு பிள்ளை பாக்கியம் இல்லை. 
சகரியா, எலிசபெத் இருவரும் ""தங்களுக்கு பிள்ளை செல்வம் வேண்டும்'' என்று வேண்டிக்கொண்டு இருந்தனர். வருடக்கணக்காகியும் பலன் இல்லை. 
சகரியா ஆலயத்தில் தொழுகை நடத்த சீட்டு பெற்றார். தொழுகையில் பிரதான தொழுகை ஆலயத்தின் பரிசுத்த காலத்தில் வாசனை தூபம் காட்டுவது.  
அவ்வாறே சகரியா ஆலயத் திரையை விலக்கி தூபம் காட்ட உள்ளே சென்றார். 
அங்கே தேவ தூதன் தோன்றி, ""சகரியாவே பயப்படாதே! உன் வேண்டுதல் கேட்கப்பட்டது! உன் மனைவி கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள். அவனுக்கு "யோவான்' என பெயரிடுவாய்!'' என்று கூறினார். 
சகரியாவோ ""நான் கிழவன், என் மனைவியும் வயது கடந்தவள். எனவே, இது சாத்தியம் இல்லை'' என்றார். 
தேவ தூதன் ""இது கடவுளின் திட்டம்! நிறைவேறும்.  இது நிறைவேறும் வரை நீ ஊமையாக இருப்பாய்'' என்றார்.  
சகரியா தூபம் காட்டி வெளியே வந்த போது ஊமையாகி இருந்தார். 

தேவ தூதன் வாக்கின்படி, அவர் மனைவி கர்ப்பம் தரித்து ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றார். எல்லோருக்கும் ஆச்சரியம்! எட்டாம் நாளிலே பிள்ளைக்குப் பெயர் வைக்க வேண்டும். 
""குடும்பப் பெயர் "சகரியா' என வைக்க வேண்டுமா?'' என கேட்டபோது, சகரியா ஒரு பலகையை எடுத்து அதில் "யோவான் என்று பெயரிடுமாறு' எழுதினார். 
உடனே சகரியா பேசத் தொடங்கினார். தெய்வம் தனக்குச் செய்த அற்புதச் செயலுக்கு வாழ்த்துப் பாடல் பாடினார். (லூக்கா 1: 13)
யோவான், இயேசுவின் பிறப்புக்கு முன் பிறந்த "முன் தூதன்' எனப்பட்டார். யோவான் நசரேயே விரதம் இருந்து வனாந்தரத்தில் வாழ்ந்தார். 
சகரியா, எலிசபெத் இவர்கள் புனித இறைவனுக்கு அர்ப்பணித்த வாழ்க்கை போற்றத்தக்கது. 
சாத்தியமே இல்லையென்றாலும், தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. நாமும் இறைவனிடம் வேண்டுவோம், பெற்றுக் கொள்வோம். இறையருள் நம்மோடு!
 

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT