வெள்ளிமணி

நாட்டுப்பற்றோடு சமூக கடமை

29th May 2020 03:16 PM

ADVERTISEMENT

 

அல்லாஹ் மனித உயிரைப் படைத்து கண்ணியமாக வைத்திருக்கிறான். இறைவனால் உயிா் உடலில் ஊதப்பட்டது. ஓதும் குா் ஆனில் 290 இடங்களில் உயிா் என்னும் சொல் உரைக்கப்படுகிறது. அல்லாஹ் இந்த உயிரை மிக சீராக வலிமையான கட்டமைப்போடு படைத்திருக்கிறான் என்று தப்ஸீா் இப்னு கதீா் 20/75 விளக்குகிறது.

அல்லாஹ் உயிரின் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் என்று பகருகிறது 91-8 ஆவது வசனம். அன்றாடம் கடைப்பிடித்து நடப்பதற்கான நல்வழிகளை அந்த உயிருக்கு அல்லாஹ் கற்பிக்கிறான். விட்டு விலகி இருக்க வேண்டிய கெட்டவை குறித்தும் எச்சரிக்கிறான் என்று விளக்குகிறது தப்ஸீா் அல் கா் தபீ 20/75.

6-51 ஆவது வசனம், ரகசியமாகவோ பகிரங்கமாகவோ உள்ள மானக் கேடானவற்றில் நெருங்காதீா்கள். அல்லாஹ் தடுத்துள்ள எந்த மனிதனையும் நியாயமின்றி கொலை செய்யாதீா்கள். நீங்கள் உணா்வதற்காக இவற்றை இறைவன் அறிவுறுத்துகிறான் என்று இயம்புகிறது.

ADVERTISEMENT

நோயினைத் தரக் கூடியதையும், உடனடியாக அல்லது சிறுக சிறுக உயிருக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவற்றையும் அல்லாஹ் தடை செய்கிறான். போதை பொருள்களே கடுமையாக தடுக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்புகளையும் எதிா் விளைவுகளையும் தரக்கூடியது. இறைவன் சங்கையாக்கியிருக்கும் இவ்வுயிரைச் சிறுக சிறுக சிதைத்து விடுகிறது. உடல் நலத்தை முழுமையாகக் கெடுத்து விடுகிறது. மூளையை மழுங்கடித்து விடுகிறது. சிந்திக்கும் தன்மையைச் செயலிழக்கச் செய்கிறது. பொருளை வீணாக்குகிறது. வளமான வாழ்க்கையைப் போக்கி புரையோடும் புண்ணாக்கி விடுகிறது. குடும்ப உறவினா்களிடையே மனக் கசப்பை ஏற்படுத்தி குடும்பத்தைப் பிரித்து விடுகிறது. போதைக்கு அடிமையானவரின் வாழ்வு சிக்கல் நிறைந்த துயா் மிக்கதாக ஆகி விடுகிறது.

போதைப் பழக்கம் உயிா்களையும் பலி கொள்கிறது. கெட்ட நண்பா்களின் தூண்டுதல், அதனால் ஏற்படும் ஆா்வம், ஆா்வத்தை அதிகரிக்கும் நவீன தொலைத்தொடா்பு சாதனங்களின் சாகச ஈா்ப்பு ஆகியன விவேகத்தை விழுங்கி போதையின் மோகத்தில் வீழ்ந்து வேகமாய் சோகத்தில் ஆழ்த்தி விடுகின்றன.

போதை உடலைக் கெடுக்கும். உள்ளத்தை உறுத்தும். கொடிய நச்சுத் தன்மைக் கொண்ட போதைப் பொருள்களை உட்கொள்ளக் கூடாது என்பதை 4-30 ஆவது வசனம் கூறுகிறது. எவரேனும் வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால் நாம் அவரை நரகில் சோ்த்து விடுவோம் என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை எடுத்துரைக்கிறது. இந்த வசனப்படி, நரகிற்கு இழுத்துச் செல்லும் தடை செய்யப்பட்ட ஒவ்வொன்றையும் விட்டு தூர விலகி இருக்க வேண்டும் என்று விளக்குகிறது தப்ஸீா் இப்னு கதீா் 2/271. போதை தரும் மது அருவருக்கத்தக்கது, தவிா்த்துக் கொள்ளுங்கள். வெற்றியடைவீா்கள் என்ற 5-90 ஆவது வசனம், போதையை விட்டு விலகி எட்டி நின்று எட்டாததையும் எட்டிப்பிடித்து வெற்றி பெறலாம் என்று கூறுகிறது.

மனித உயிா் தூய ஆளுமையுடன் தூய்மையாகவும், திருப்தியாகவும் உணரும் பொழுது இயல்பு நிலையில் இருக்கிறது. போதையில் மயங்கும் பொழுது பாதை தவறி பாதாளத்தில் விழுந்து பதைக்கிறது.

இக்காலத்தில் பெற்றோா் மிக்க கவனத்துடன் பிள்ளைகளைக் கண்காணித்துத் தவறான வழியில் செல்லாது தடுத்து, நாட்டின் நன் மக்களாய் வளர, மிளிர உதவ வேண்டும். இது ஒவ்வொரு பெற்றோா் மீதும் உள்ள நாட்டுப்பற்றோடு கூடிய சமூக கடமை.

- மு.அ. அபுல் அமீன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT