வெள்ளிமணி

நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே

8th May 2020 07:56 PM | - முனைவர் தே. பால் பிரேம்குமார்

ADVERTISEMENT


துன்பம் எல்லா உயிரினங்களுக்கும் உண்டு. இத்துன்பம் உடல், உள்ளம் ஆன்மாவை தாக்கி வேதனை, வலி, மனஅழுத்தம், நோய்களை உண்டாக்கும். துன்பம் மனிதனை தம் உயிர் விடும் வரை, கொடுமை படுத்தும். பிறர் துன்பம் காணும்போது நம்மை அறியாமல் நாமும் துன்புறுகிறோம். துன்பத்தின் வெளிப்பாடு கண்ணீர், வலி, வேதனை, அழுகை.
ஆதிதாய் ஏவாள் கர்த்தரிடம் பெற்றுக்கொண்ட சாபம் "அதிக வேதனையோடு பிள்ளை பெறுவாய்' வலி தெய்வத்திடம் பெற்றுக்கொண்ட சாபம் என்பர். வலியும் இறைவன் தந்த வரம் என்பர். துன்பம் தன்நிலை உணரச் செய்து சீர்
திருத்தும். துன்பம் பிறரால் வருவது உண்டு. மனிதன் பிறர்படும் துன்பம் கண்டு மகிழ்வதும் உண்டு. தண்டனையானது துன்புறுத்துவதும் உயிர்போக்குவதும் உண்டு.
மனிதன் பிறரை துன்புறுத்தி தன்நிலை உயர்த்திக் கொள்வதும், பிறரை அடிமை படுத்துவதையும் காண்கிறோம். தெய்வம் இன்ப துன்பத்துக்கு மேலானவர் என்பர். இறைவன் நித்திய ஆனந்தத்துக்குரியவர். தெய்வத்துக்கு துன்பம் இல்லை என்பர். 
மனிதர் தாம் கொண்ட கொள்கையை யாவரும் பின்பற்ற வேண்டும், தான் பின்பற்றும் சமயத்தை மற்றவரும் பின்பற்ற வேண்டும், அவ்வாறு இல்லையெனில் துன்புறுத்தி கொலை செய்து மதமாற்றம் செய்வர். வரலாற்றில் மதம் மாற்ற பயன்படுத்திய வன்கொடுமை, பயங்கரவாதம், கொலைகள் ஏராளம்.
சவுல் என்பவர் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த வாலிபர். இவர் தீவிர யூத மதத்தில் பற்றுக் கொண்டவர். யூத மதத்தின் தோரா எனப்பட்ட மத சட்ட திட்டங்களை தீவிரமாக கற்று நடந்தவர். தம்மை மதத் தீவிரவாதியாகவே கருதினார். யூத மதத்திற்கு எதிரானவர்களை கல்லெறிந்து கொன்று போட்டு யூத மதத்தின் பாதுகாவலராகவே கருதினார். தம்மையொத்த வாலிபர்களை இணைத்துக்கொண்டு தீவிர மதவாதியானார். 
ஆண்டவராகிய இயேசு போதித்த காலத்தில் சவுல் வாழ்ந்தாலும் இயேசுவை அவர் பார்த்திலர். யூத மதம் அதன் சட்டதிட்டங்களை நிறைவேறிற்று.  அன்புதான் புதிய மதம், இறைவனிடம் அன்பு கூறு, தன் சக மனிதனிடம் அன்பு கூறு என இயேசு போதித்தார். இயேசுவுக்கு பின்பு இயேசுவின் சீடர்கள் புதிய ஏற்பாடு என்கிற கிறிஸ்துவத்தைப் போதித்தனர். சவுல் இக்கருத்துக்கு எதிராக எழும்பி கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்பவர்கள் மற்றும் போதிப்பவர்களை கல்லெறிந்து கொன்றார். இயேசுவின் சீடர் ஸ்தேவானை கல்லெறிந்து கொன்றார்.
சவுல் தம்முடைய செயலுக்கு ஆதரவாக உத்தரவு கடிதம் வாங்கிக்கொண்டு, தமஸ்கு என்னும் பட்டணத்தில் உள்ள கிறிஸ்துவர்களை கொல்லும்படி தம் சக மத தீவிரவாதிகளுடன் குதிரையின் மேல் சென்றார். வானத்திலிருந்து ஓர் ஒளி சுற்றி சூழ்ந்தது. சவுல் தரையில் வீழ்ந்தார். மற்றவர்களை கண்கள் காண முடியாததாயிற்று. சவுல் வானத்திலிருந்து தன்னுடன் பேசுகின்ற அன்பின் குரலைக் கேட்டார். ""சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்'' என்று தன்னுடனே சொல்கின்ற சத்தத்தைக் கேட்டார்.
"" என்னுடன் பேசும் ஆண்டவரே, நீர் யார்?'' என்றார். அதற்கு கர்த்தர், "" நீ துன்பப் படுத்துகின்ற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம்'' என்றார். (அப்போஸ்தலர் 9: 4,5) 
சவுல் கண்கள் பார்வை அற்றுப் போயின. பின்பு ஆண்டவர் தம் சீடரை அனுப்பி பார்வை கிடைக்கும்படி செய்து, இயேசு தம்மை அவருக்கு வெளிப்படுத்தி தெய்வ திருத்தொண்டராக மாற்றினர். சவுல் பவுலாக மாறினார். அற்புதங்களைச் செய்து யூதர்களையும் மற்றவர்களையும் இயேசுவின் சீடராக்கினார். 
இறைவன் தம் அடியாருக்கு இழைக்கப்படும் துன்பத்தையே தான் துன்புறுவதாகக் கருதுகிறார். சக மனிதர் துன்பம் போக்கினால் இறைவன் மகிழ்வுறுகிறார். நம் வாழ்வை இறைவன் இன்புறும் வாழ்வுடையவராக வாழ்தல் வேண்டும். இயேசு சவுலை சந்தித்து நம் துன்ப நேரத்திலும் நம்மோடு இருக்கிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT