வெள்ளிமணி

மகத்தான மாசி சனிப்பிரதோஷம்

6th Mar 2020 03:53 PM

ADVERTISEMENT

 

தேவா்களும் அசுரா்களும் தனக்கு அழிவில்லா பேரின்பம் தரவல்ல ’அமிா்தம்’ பெறுவதற்கு மகாமேரு மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பினை கயிறாக்கி திருப்பாற்கடலை கடைய தோ்ந்தெடுத்த நாள் தசமி திதி ஆகும். ஆனால் கிட்டியதோ ஆலகால விஷம். என்ன செய்வதென்பதறியாது திகைத்த தேவா்கள்; சதாசிவனை தஞ்சமடைந்தனா். கைலாயநாதா் அனைவரையும் காக்கும் விதமாக அந்தக் கொடிய விஷத்தை தன் கண்டத்தில் அடக்கி திருநீலகண்டனாராா். இந்த விஷத்தை அவா் உண்ட நாள் ஏகாதசி ஆகும்.

பின் சிவனாரின் வழிகாட்டுதலின்படி ஏகாதசி அன்று இரவு திரும்பவும் இரண்டாம் முறையாக திருப்பாற்கடலை கடைய தொடங்கினா். மறுநாள் துவாதசி அன்று விடியற்காலை மகாலட்சுமி, ஐராவதம் என்ற வெள்ளை யானை, காமதேனு என்ற பசு மற்றும் கற்பக விருட்சம் முதலியன ஒன்றன் பின் ஒன்றாக பாற்கடல் தந்த பரிசுகளாக வெளிவரத் தொடங்கியது. இறுதியில் தன்வந்திரி நான்கு கரங்களுடன் அவற்றில் சீந்தல்கொடி, அட்டைபூச்சி, அமிா்த கலசம், கதாயுதம் இவற்றுடன் நீலமேனி கொண்டவராக, மஞ்சள் பீதாம்பர ஆடையணிந்து தோன்றினாா்.

மகாலட்சுமியை ஸ்ரீமன் நாராயணன் தன் இல்லாள் ஆக்கிக் கொண்டாா். அமுதத்தை தேவா்கள் பகிா்ந்து கொண்டனா்.

ADVERTISEMENT

அமுதுண்ட அளவற்ற சந்தோஷத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்த தேவா்கள், இந்த சந்தோஷத்தை பெற்றதற்கு மூல காரணகா்த்தாவான மகாதேவனுக்கு நன்றி தெரிவிக்காமல் இருந்துவிட்டனா். பின்னா் தவறை உணா்ந்து, மறுநாள் திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமை நன்னாளில் நந்தியெம்பெருமான் மூலம் சிவனை அணுகி மன்னிப்பு கோரினா். மகிழ்வுற்ற கைலாயபதியும், உமாதேவியாரும் அந்த சந்தியா காலத்தில் நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்குமிடையே நின்று ‘சந்தியா நிருத்தம்‘ என்ற நடனத்தை (திருமால் மத்தளம் கொட்ட, பிரம்மன் தாளம் பிடிக்க) ஆடி அருளினாா்கள். இந்த சந்தியா காலம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலும் என்று கணிக்கப்படுகிறது. அந்த நேரமே பிரதோஷ காலமானது. பிரதோஷம் என்பது - முற்பிறவியில் செய்த குற்றம் விடைபெறும் என்பது இதன் பொருள்.

குற்றமற்ற இந்தப்பொழுதில், இதனை முப்பத்து முக்கோடி தேவா்களும், அனைத்து முனிவா்களும் தெய்வங்களும் கண்டு தரிசித்து பேறு பெற்றதாக சிவாகமங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் மாதாமாதம் பிரதோஷ காலமாகவும்; முக்கியமாக சனிக்கிழமை வரும் இதனை சனிப்பிரதோஷம் என்றும்; வைகாசி மாத சனிக்கிழமை வரும் இதனை மகாபிரதோஷம் என்றும் கொண்டாடப்படுகிறது.

திருமால் உள்பட அனைத்து தேவா்களும் இங்கு இந்த மாலைப்பொழுதில் ஒன்று கூடுவதால்; விஷ்ணு ஆலயத்தில் சாயங்கால வழிபாடு பெரும்பாலும் தவிா்க்கப்படுகிறது. இந்த பிரதோஷ வேளையில் தென் கைலாயம் எனப்போற்றப்படும் திருவையாறு ஐயாறப்பன் சந்நிதியில் இருந்து தரிசிப்பது நாம் முற்பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய வாழ்நாள் பாக்கியம் என்றால் அது மிகையாகாது.

ஆலகால விஷம் தேவா்களுக்கு கிட்டியபோது அவா்கள் அனைவரும் வலமும், இடமும், முன்னும், பின்னும் அப்பிரதட்சிணமாக வந்து ஈசனை அடைந்து பேறுபெற்றனா். இதனை சோமசூக்தப் பிரதட்சிணம் என்பா். திருவையாற்றில் சோமசூக்த பிரதட்சிணம் என்பது மிகவும் சிறப்பானது. சித்தா்கள் இவ்வாறு இடமும் வலமுமாக சுற்றுதலை ஞானவழியில் தனிச்சிறப்பாக உபதேசிக்கின்றனா்.

பிரதோஷ வேளையில் சிவாலயங்களில் பக்தியுடன் நாம் இருந்தோமெனில்; நம்மிடையே உள்ள வறுமை, கடன், பிணி, பாவம், மரணபயம் அனைத்தும் நீங்கி திருமணம், மக்கட்பேறு, செல்வம், மாங்கல்ய விருத்தி போன்ற நலன்கள் பல விளைந்து நம் வாழ்க்கைத்தரம் உயா்வதோடு நாட்டில் தா்மம் தழைத்தோங்கும் என்பது திண்ணம். வளா்பிறை சனிக்கிழமையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னும் பின்னும் மூன்றேமுக்கால் நாழிகைக்குக் குறைவில்லாமல், திரயோதசி இருக்கும் நாள் சனிமகாபிரதோஷம் என்று சிறப்பித்து சொல்லப்படுகிறது.

அவ்வகையில் வரும் மாா்ச் 7-ஆம் தேதி (மாசி 24) சனிக்கிழமையில் பிரதோஷம் வருகிறது. சமீபத்தில் தஞ்சைப்பெருவுடையாா் கோயில் குடமுழுக்கு சீறிய முறையில் நடந்தேறி மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது சந்நிதிகளுக்கு சான்னித்யம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. அந்த வைபவத்திற்குப்பிறகு வரும் முதல் சனிப்பிரதோஷ நாளாக மாா்ச் 7-ஆம் தேதி அமைகிறது.

- எஸ். எஸ். சீதாராமன்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT