வெள்ளிமணி

மா நபிகளின் மாண்புடைய மனைவி 

27th Jun 2020 04:38 PM

ADVERTISEMENT


நபியுடைய மனைவிகளே நீங்கள் மற்ற பெண்களைப் போன்றவர்கள் அல்ல என்று அருமறை குர்ஆனின் 33-32 -ஆவது வசனம் அறிவிக்கிறது. மா நபி ஸல் அவர்களின் மனைவியர் மகத்தான சிறப்பு உடையவர்கள். சங்கை மிகுந்த சாந்த நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை நேராகக் கண்டு, சீராகப் பின்பற்றி குடும்ப உறவின் முறையை முழுமையாக முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நடைமுறையைப் பார்த்துப் பழகி பயின்ற படிப்பினைகளை மக்களுக்குக் கற்றுத் தந்தவர்கள். தாஹா நபி (ஸல்) அவர்களின் மனைவியர் இறை நம்பிக்கையாளர்களுக்கு நல்ல தாயாகத் திகழ்ந்தவர்கள்.
அத்தகு சிறப்புக்குரியவர்களில் ஒருவர் அன்னை உம்மு ஸலமா (ரலி). அவர்களின் பெயர் ஹிந்த். குறைஷி குலத்தில் மக்தூமி வகுப்பைச் சேர்ந்த பெரும் வள்ளல் என்பதைக் குறிக்கும் "ஸாத் அர்ரக்ப்' (ஒட்டகக் கூட்டங்களுக்கான உணவு) என்று புகழ் பெற்றிருந்த குறைஷி தலைவர் அபூ ஸல்த் ஸகீயின் மகள். இவர் முதலில் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸாதை மணம் புரிந்தார். இவர்களின் முதல் மகள் ஸலமா. அதனால் தாயார் உம்மு ஸலமா என்றும், தந்தை அபூ ஸலமா என்றும் அழைக்கப்பட்டனர். துவக்க காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற பெண்களில் ஒருவர். இவரும் இவரின் கணவரும் அபிசீனியாவிற்கு முதல் ஹிஜ்ரத் சென்றனர். மதீனா சென்ற பெண்களில் முதல்வர் இவர். மதினாவில் இத்தம்பதிகளுக்கு உமர் என்ற மகனும், துர்ரா, ஜெய்னப் என்ற பெண்களும் பிறந்தனர். இவரின் கணவர் அப்துல் அஸாத் பத்ரு போரில் வெற்றி பெற்ற குதிரை வீரர். உஹத் போரில் படுகாயமடைந்த அபூஸலமா போர் முடிந்த சில நாள்களில் இறந்தார். 
விதவைகளுக்கு உதவாது விதவைகளைக் கொடுமைப்படுத்திய குறைஷிகளுக்கு நற்போதனை புரிந்த குர்ஆனின் 2-234, 235 மற்றும் 240 வசனங்களின்படி விதவைகளை மணம் புரிந்து வாழ்வளித்து வழிகாட்டிய வள்ளல் நபி (ஸல்) அவர்கள் விதவை உம்மு ஸலமா (ரலி) அவர்களை ஹிஜ்ரி 4-ஆம் ஆண்டு ஷவ்வால் மாத இறுதியில் மணம் புரிந்தார்கள். அப்பொழுது உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வயது 25. 
முகமது நபி (ஸல்) அவர்களின் கடமைகளைக் கருத்தோடு பொருத்தமாய் நிறைவேற்றியவர்கள் உம்மு ஸலமா (ரலி). பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் பேணிச் செய்தார்கள். தயாளமுள்ள தாயாகத் திகழ்ந்தார்கள். பிள்ளைகளை அன்பு காட்டி அரவணைத்து வளர்த்தார்கள். பொருளை உரிய முறையில் பிள்ளைகளுக்காக செலவு செய்தார்கள். அவர்களின் முந்தைய கணவர் அபூ ஸலமா அவர்களின் குழந்தைகளுக்காக செலவிடுவதற்கு உரிய பயன் உண்டா? என்று உத்தம நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். "அவர்களுக்காக நீ 
செலவு செய். அதற்குரிய பயன் உனக்குக் கிடைக்கும்' என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் பதில் கூறியதோடு, "உன் குடும்பம் என் குடும்பமே' என்றும் உறுதிப்படுத்தினார்கள். நூல் -அஹ்மது 16344. "நிச்சயம் நீ நன்மையாகவே இருக்கிறாய்' என்று உம்மு ஸலமா (ரலி) அவர்களை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பாராட்டுவார்கள். நூல்-அஹ்மது 26746, திர்மிதி- 3781.
அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பார்கள். தவறாது தஹஜ்ஜத் தொழுவார்கள். திருக்குர்ஆனை அதிகமாக ஓதுவார்கள். அதன் வசனங்களின் உள்பொருளை உணர்ந்து, சிந்தித்து, செயல்படுவார்கள். செம்மல் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்பார்கள். ஒரு
சமயம் திருநபி (ஸல்) அவர்களிடம் அருமறை குர்ஆன் வசனங்களில் "ஆண்கள் குறித்தே குறிப்பிடப்படுகிறதே. பெண்கள் பற்றிக் குறிப்பிடவில்லையே' என்று கேட்டார்கள். நூல்-அஹ்மது 26575. அப்பொழுது 33-35- ஆவது வசனம் இறங்கியது. அந்த வசனத்தில் ஒவ்வொரு சொற்றொடர் தொடக்கத்திலும் ஆண்-பெண் என்று குறிப்பிடப்படுகிறது.
கல்வி கற்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். அதிகமாக அறியும் ஆவல் இருந்தது. மேலதிகமாக விளக்கம் பெற பெரும் முயற்சி செய்தார்கள். ஒவ்வொரு நாளும் வைகறைத் தொழுகைக்குப்பின் ""இறைவனே! பயனுள்ள கல்வியைக் கேட்கிறேன். உயர்வான வாழ்வாதாரத்தையும் உன்னால் ஏற்கப்படும் செயல்களையும் உன்னிடம் கேட்கிறேன்'' என்று இறைவனிடம் இறைஞ்சுவார்கள். 
நபிகளாரின் நற்றோழர்கள் இவர்களிடம் ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவார்கள். இவர்கள் அளித்த ஐய தெளிவுகளையும், தீர்வுகளையும் தொகுத்தால் அது ஒரு நூலாக அமையும் என்று அறிவிக்கிறார் அல்லாமா இப்னு கையில் (ரஹ்).
அன்னை உம்மு ஸலமா (ரலி) ஹிஜ்ரி 61-இல் 84-ஆம் வயதில் இறந்தார்கள். மதீனாவில் உள்ள ஜன்னத் பகீயில் அடக்கம் செய்யப்பட்டார்கள். "பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்னும் பெருமையுற வாழ்ந்த பெருமானார் நபி (ஸல்) அவர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களின் நடைமுறையைக் கடைப்பிடித்து பெண்கள் மனைத்தக்க மாண்புடையவர்களாக இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வு வாழ வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக! 
-மு.அ.அபுல் அமீன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT