வெள்ளிமணி

மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்...: 10

31st Jul 2020 06:00 AM | - சுமதிஸ்ரீ

ADVERTISEMENT


சித்திகள் எட்டன்றிச் சேரெட்டி யோகத்தால்...

 

சித்திகள் எட்டன்றிச் சேரெட்டி யோகத்தால்
புத்திகள் ஆனவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண்சித்தி தானாம் திரிபுரைச்
சத்தி அருள்தரத் தான்உள வாகுமே 
(பாடல் : 670 )

பொருள்: அட்டாங்க யோகத்தை முறைப்படி, செய்பவர்களுக்கு, எட்டு அட்டமாசித்திகளும் கைவரப் பெறும்.அதுமட்டுமின்றி, எல்லா வகை அறிவும் கிட்டும். ஆத்ம அறிவு முதல் அண்ட சராசரங்கள் வரை, அறிந்து கொள்ளும் அறிவாற்றல் வாய்க்கும்.அந்த அட்டமா சித்திகள், திரிபுரையாகிய தேவி  பராசக்தியின. அருளால்,கை கூடுவதாகும்.

ADVERTISEMENT

அட்டாங்க யோகம் செய்தால், தேவி பராசக்தியின் அருளால், அட்டமா சித்திகளும்,அனைத்தையும் உணர்ந்து அறியும் அறிவும் கிடைக்கும் என்கிறார் திருமூலர்.

அட்டாங்க யோகங்கள் எவை என்பதையும், அவை ஒவ்வொன்றை குறித்தும் பல பாடல்களில் கூறுகிறார்.

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்கம் ஆவது மாமே 
(பாடல் : 552)

இயமம், நியமம், ஆசனங்கள், பிராணாயாமம், பிரத்தியாகாரம்,தாரணை, தியானம்,சமாதி இவையை அட்டாங்க யோகங்கள் என குறிப்பிடுகிறார் திருமூலர்.

இயமம்  என்பது தீய எண்ணங்கள், தீய செயல்களை விளக்குவதாகும்.நியமம் எனபது ஒழுக்கத்தோடும்,அறத்தோடும் வாழ்வது. ஆசனம் என்பது யோகாசனம் ஆகும். பிராணாயாமம் என்பது மூச்சுப் பயிற்சி.பிரத்தியாகாரம் என்பது மரத்துக்கு மரம் தாவும் குரங்கைப் போல் அலைபாயும் மனதை,ஒருமுகப் படுத்தி,உள்நோக்கி பயணிக்கச் செய்வது.தாரணை என்பது உள் நோக்கி பயணித்த மனத்தை அங்கேயே நிலை நிறுத்துவது.தியானம் என்பது உணர்வும்,நினைவும் ஒன்றி,இறைவனை தியானித்திருப்பது.

சமாதி என்பது சிரசில் இருக்கும் சிவப்பரம்பொருளை சென்று சேர்வது.இறைவனுக்கு சமமாக ஆதல், சமம் ஆதி என்பதே சமாதிஆகும். இந்த அட்டாங்க யோகத்தை முறைப்படி செய்தால் கிடைக்கும் அட்டமாசித்திகளையும் பட்டியலிடுகிறார் திருமூலர்.

தானே அணுவுஞ் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும் பரகாயத் தேகலுந்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே. 
(பாடல் - 649 )

அணிமா - அணுவைப் போல் சிறியதாகுதல்
மஹிமா - மலையைப் போல் பெரிதாகுதல்
லஹிமா - காற்றினைப் போல் எடையற்று இருத்தல்
கரிமா - எடை அதிகரித்து கனத்தல்
பிராப்தி - யாவற்றிலும் ஆளுமையாற்றலைப் பெறுதல்
வசித்துவம் - எதையும் யாவற்றையும்  வசப்படுத்துதல்
பிராகாமியம் - ஒரு உடலினின்றும் வேறோர் உடலுக்கு உயிரை மாற்றிக் கொள்ளல்
ஈசத்துவம் - விரும்பியதை விரும்பியபடி செய்தல். இவையே அட்டமா சித்திகள் ஆகும்.

சித்தர்கள் இந்த அட்டமா சித்திகள் கை வரப் பெற்றிருந்தனர்.திருமூலர் வாழ்க்கை வரலாற்றில், கூடு விட்டு கூடு பாய்கிறார். காலாங்கி நாதர் என்கிற சித்தர், சீனாவிற்கு வான் வழியே பறந்து சென்றார்.அவரது சீடர் போகர் தான், பழனி முருகனின் நவபாஷண சிலையை பிரதிஷ்டை செய்தவர்.அருணகிரிநாதர், விராலிமலையில் முருகப் பெருமானை துதித்து அட்டமா சித்திகளைப் பெற்றார்.

இவையெல்லாம் சாத்தியமா...இப்படியும் நடக்குமா என நமக்கு சந்தேகம் வரலாம்...எல்லாம் அந்த காலத்தில் தானே நடந்தது என கேட்கலாம்..திருமூலர் காலத்திலும்,காலாங்கி சித்தர் காலத்திலும்,போகர் காலத்தில் மட்டுமல்ல...1942 -இல் திரு.வி.க. எழுதிய "உள்ளொளி' என்ற புத்தகத்தில், சக்கரையம்மாள் என்கிற பெண் சித்தர் வானில் பறந்து சென்றதை குறிப்பிட்டுள்ளார். ஆனந்தாம்பா என்பது அவர் பெயர். ஸ்ரீசக்கர உபாசனை செய்து சித்தி பெற்றவர் என்பதால், சக்கரத்தம்மாள் என அழைக்கப்பட்டு,சக்கரையம்மாள் என்று ஆனது.

அட்டாங்க யோகம் செய்தால், அனைத்தையும் அறியும் அறிவு கிடைக்கும் என்று திருமூலர் சொல்கிறார். அதற்கு எடுத்துக்காட்டு நடிகர் சிவகுமாரின் தந்தை. அவர் குறித்து நடிகர் ராஜேஷ், தன் புத்தகத்தில் பதிவு செய்துள்ள இச்செய்தியை, அவரிடமே தொலைபேசியில் கேட்டு,விவரமாக அறியப்பெற்றேன். "இன்ன தேதியில் இறப்பேன்' என ஒரு வருடத்திற்கு முன்பே எழுதி வைத்து, அந்த தேதியிலேயே இறந்து போனவர் அவர். ஐந்து விதமான சக்திகளை அவர் பெற்றிருந்தார்.

அட்டமா சித்தி என்பது போல பஞ்சமாசித்தி என அவற்றை குறிப்பிடுகிறார் நடிகர் ராஜேஷ். 

1.எந்த இடத்தில் தோண்டினால்,வற்றாமல் தண்ணீர் வரும் என சொல்வது...பாறைகளுக்கு நடுவே அவர் குறித்து சொன்ன இடத்தில்,எண்பது வருடங்கள் ஆகியும் இன்னமும் தண்ணீர் ஊறிக் கொண்டிருக்கிறது.
2.தெருவில் ஒரு வண்டி போனால், அதற்குள் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன என வீட்டிலிருந்தே சொல்வாராம்.
3. யாரேனும் சந்திக்க வந்தால், நேற்று அவர் எங்கு இருந்தார்....என்ன நிறத்தில் உடை அணிந்திருந்தார்,என்ன உணவு சாப்பிட்டார் என்பது வரை சரியாகச் சொல்வாராம்.
4.ஏதேனும் பொருள்கள் திருட்டு போனால்,அந்தபொருள் எங்கே இருக்கிறது என மிகச் சரியாக சொல்வாராம்.
5.வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு ஜாதகம் கணிப்பாராம். அப்படி, நடிகர் சிவகுமார் கருவாக தாயின் வயிற்றில் இருந்த போதே, பிறக்கப் போகும் குழந்தை ஆண் குழந்தை, அதற்கு ஒரு வயது நடக்கும் போது, இந்த தேதியில் இறப்பேன் என எழுதி வைத்திருக்கிறார் சிவகுமாரின் தந்தை. அவர் சொன்னது போலவே ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஒரு வயது ஆகப்போகிற சமயத்தில், சிவகுமார் அவர்களின் தாயார், சந்தையில் வெவ்வேறு நிறத்தில் நான்கு புடவைகள் வாங்கி வந்தாராம்... "நாலு புடவையா.. அதுவும் கலர்,கலரா...இப்ப எதுக்கு?' என கேட்டிருக்கிறார் சிவகுமாரின் தந்தை. "இதையெல்லாம் நீ அணியப் போவதே இல்லையே' என்பதான அர்த்தத்தில்.....
அவர் குறித்து வைத்த தேதியில், அவர் சொன்னது போலவே இறந்து போனார். அவர் அதர்வண வேதம் கற்றவர். திருப்புகழ் முழுவதையும் மனப்பாடமாக சொல்லி முருகனை வழிபடுவாராம். தன் கைப்பட முருகன் படத்தை வரைந்து தந்திருக்கிறார்.

சித்தர்கள் காலத்தில்தான் இப்படியான அதிசயங்கள் நடக்கும் என்றில்லை... எழுபது வருடங்களுக்கு முன்பு கூட அனைத்தையும் அறியும் ஆற்றல் பெற்றவர்கள் இருந்திருக்கிறார்கள். நடிகர் சிவகுமார் இதை எங்கும் சொன்னதில்லை. நடிகர் ராஜேஷ் பதிவு செய்யாவிடில்  தெரியாமலே போயிருக்கும். அந்த ஆற்றல் நமக்கும் சாத்தியமாகும். 

அட்டாங்க யோகங்களை முறைப்படி செய்தால், அம்பிகையின் அருளால், அட்டமா சித்திகளும்,அனைத்தையும் அறியும் அறிவும் வாய்க்கும் என்பது திருமூலர் வாக்கு.

- (தொடரும் )

(கட்டுரையாசிரியர்:  இலக்கியச் சொற்பொழிவாளர்)

ADVERTISEMENT
ADVERTISEMENT