வெள்ளிமணி

செங்கடலை இரண்டாய் பிளந்த தேவன்!

31st Jul 2020 06:00 AM | -முனைவர் தே. பால் பிரேம்குமார்

ADVERTISEMENT


புலம்பெயர்தல் உலகத்தில் எங்கேயாவது ஓர் இடத்தில் நடந்து கொண்டே இருக்கிறது. வறுமை, போர், இயற்கைச் சீற்றம், இனப்படுகொலை போன்ற காரணங்களால் மக்கள் தாம் வாழ்ந்த இடத்தையும், நாட்டையும் விட்டுச் சென்று புது இடம் தேடி தம் வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர். பறவைகளும், மிருகங்களும் இடம் பெயர்கின்றன. தொற்றுநோயால் தற்போது இடம்பெயர்ந்து வந்தவர்கள், தாங்கள் வேலை செய்து வந்த இடத்தை விட்டு, தமது சொந்த ஊர்களுக்கு பலநூறு கிலோ மீட்டர் நடந்தே சென்ற பரிதாப நிகழ்ச்சியை தொலைக்காட்சி, செய்தித் தாள்களில் பார்த்தோம்.
வேதாகமத்தில் இஸ்ரவேல் மக்கள் 430 ஆண்டுகள் வாழ்ந்த எகிப்து நாட்டை விட்டு கானான் தேசத்திற்கு நடந்தே சென்றனர். பெரும் கூட்டமாய் மோசே என்பவரின் தலைமையில் வழி நடத்தப்பட்டனர். பஞ்சகாலத்தில் யோசேப்பு எகிப்தின் முதன்மை அதிகாரியாய் இருந்த காலத்தில் கானான் தேசத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்கள் எகிப்து நாட்டிற்குச் சென்று வசதியாக வாழ்ந்தனர். காலப்போக்கில் எகிப்திய அரசு அவர்களை அடிமைகளாக செங்கல் அறுத்துக் கொடுக்கவும், வயல்வெளியில் விவசாய வேலைகளைச் செய்யவும் வைத்துக் கொடுமைப்படுத்தினர். 
அரசர்கள் பெரிய பெரிய நகரங்களை, பிரமீடுகளைக் கட்டினார்கள். இஸ்ரவேலர் ஏழைகளாயினர். கடும் கொடுமைக்கு ஆளானார்கள். இறைவனை நோக்கி வேதனைக் குரல் கொடுத்தனர். தம் மக்களின் வேதனை அடிமை வாழ்வை இறைவன் கண்டு மோசே என்ற தலைவனை எழுப்பினார். அவரின் கைக்கோல் கீழே போட்டால் பாம்பாக மாறும். அவர் சொல்லும் வாதைகள் நடக்கும். மோசே எகிப்தின் அரசரிடத்தில் சென்று இஸ்ரவேல் மக்களை வனாந்தரத்தில் கர்த்தரை தொழுதுகொள்ள அனுப்பிவிட கேட்டார். பார்வோன் அரசன் அனுப்ப மறுத்தார். மோசே பத்து வாதைகள் எகிப்தில் கொண்டுவந்தார். அரசர் கடைசியில் அனுமதித்தார். 
வருடத்தின் முதலாம் மாதம் 14-ஆம் தேதி பஸ்கா என்னும் பண்டிகையில் ஒரு வயது ஆட்டுக்குட்டியை அடித்து, அதன் எலும்புகளை முறிக்காமல் அதன் ரத்தத்தை வாசற்படி மேல் பூசும் படியும், 15-ஆம் தேதி தங்கள் ஆடு மாடு செல்வங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். 
செங்கடல் அருகே வந்த போது கர்த்தர் மோசேவை நோக்கி தமது கையிலுள்ள கோலை செங்கடலின் மேல் அடிக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம்? கடல் இரண்டாய் பிளந்து தரை வழி விட்டது. இஸ்ரவேலர் தரை வழியே நடந்தனர். பார்வோன் அரசர் கேள்விப்பட்டு பெரும் படையையும், ரதங்களையும் அனுப்பி தப்பியோடும் இஸ்ரவேலரை திரும்ப அடிமைகளாகப் பிடித்து வர அனுப்பினார். கடல் பிளந்து மக்கள் தரையில் நடந்து செல்வதைக் கண்ட பெரும்படையினர் தாமும் தரை வழியே சென்றனர். இஸ்ரவேலர் அக்கரைச் சென்று சேர்ந்தவுடன் செங்கடல் திரும்பவும் தண்ணீர் மூடிக்கொண்டது. எகிப்தின் பெரும் படைகளும், ரதங்களும் கடல் நீரில் மூழ்கி மாண்டனர் (யாத்திராகமம் 14: 1-31). 
இஸ்ரவேலர் கர்த்தர் கொடுத்த கானான் தேசத்திற்கு நடந்தே சென்றனர். கர்த்தர் மேகமாய் அவர்களுடனே இரவில் அக்னி மேகமாய், பகலில் நிழல் தரும் மேகமாய் கூடவே வந்தார். மேகம் நகர்ந்தால் பிரயாணத்தைத் தொடர்ந்தனர். மேகம் நின்றால் கூடாரம் போட்டுத் தங்கினர். 
அவர்கள் உண்ணும் உணவாக "மன்னா' இனிமையான சுவைமிகுந்த சிறுசிறு உருண்டை வடிவமான மாவை தந்தார். காற்று அடித்த போது காடைகள் இவர்களின் கூடாரத்தில் வந்து விழும். இஸ்ரவேலர் அவற்றைப் பிடித்து மன்னா ரொட்டியையும் காடை கறியையும் உண்டு, நாற்பது ஆண்டுகள் பிரயாணப்பட்டு கானான் தேசம் போய்ச் சேர்ந்தார்கள். 
இறைவன் சொந்த நாட்டையும், உண்ண உணவையும், சுதந்திரத்தையும் கொடுக்க வல்லவர். நம் வாழ்வுக்கு நாட்டைத் தந்து, உணவுச் செல்வத்தைத் தந்த தெய்வத்தைப் போற்றுவோம். இறையருள் நம்மோடு! 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT