வெள்ளிமணி

இயேசுவுக்குமுன் தூதுவர் திருமுழுக்கு யோவான்!

3rd Jan 2020 11:08 AM

ADVERTISEMENT

கிறிஸ்துமஸ் காலங்களில் திருமுழுக்கு யோவானின் பிறப்பும் அவர் தொண்டும் நினைவுறுதல் ஆலயங்களில் வழக்கம். சகரியா அவரது அன்பு மனைவி எலிசபெத் என்பவர் ஆசாரிய குலத்தவர். ஆசாரியர் என்பவர்கள் கர்த்தரால் மோசேவினால் ஆலயப் பணிகளைச் செய்ய ஏற்படுத்தப்பட்டவர்கள். இந்த கோத்திர குடும்பத்தாரில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் எல்லாரும், ஆலய பணியை மட்டும் செய்ய வேண்டும். சாதாரண தொழில் செய்து பிழைக்கக் கூடாது. ஆலயத்துக்கு கொண்டு வரும் காணிக்கைகளை உணவுப் பொருள்கள், இறைச்சி, பணம் மற்றும் திராட்சை ரசம், ஒலிவ எண்ணெய் பகிர்ந்து கொடுப்பார்.
 இக்குலத்தில் சகரியா அவரது மனைவி எலிசபெத் ஆகியோர் மிக வயது முதிர்ந்தவர்கள். இவர்களுக்கு பிள்ளை வாரிசு இல்லை. கர்த்தரிடம் தினமும் பிள்ளை செல்வத்துக்காக வேண்டி சோர்வடையாமல் ஜெபித்தனர். சகரியாவுக்கு ஆலயத்தில் தொண்டு செய்யும் முறை வந்தது. ஆலயத்தில் இரவும் பகலும் தங்கி ஆலய வழிபாடு நடத்தப்பட வேண்டும். மிக பக்தியுள்ளவரும் மூத்த வயதுள்ளவருமான சகரியா பெயருக்கு சீட்டு விழுந்தது. இவ்வாறு சீட்டு விழுந்தவர், மகா பரிசுத்த தலம் என்னும் ஆலயத்தின் கடைசி பகுதி திரை சீலையால் மூடி வைக்கப்பட்ட இடத்துக்கு வாசனை புகை காட்டப்பட வேண்டும்.
 சகரியா தூபம் காட்ட அன்று இடுப்பில் தங்க சங்கிலி கட்டப்பட்டு தூப கலசத்துடன் பரிசுத்த இடத்துக்குச் சென்றார். அவ்வாறு தூபம் காட்டும்போது தேவதூதன் ஒருவர் தோன்றி, ""சகரியாவே பயப்படாதே! உன் வேண்டுதல் கேட்கப் பட்டது. உன் மனைவியாகிய எலிசபெத் ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு "யோவான்' என்று பெயரிடுவாயாக!'' (மத்தேயு 1:13) என்றான்.
 சகரியாவோ, ""தேவதூதரே, நான் கிழவன், என் மனைவி கிழவி. எங்களுக்கு எப்படி பிள்ளை பிறப்பான்'' எனக் கேட்டார். ""தேவ செய்தியை நம்பாமல் போனதால் உன் மகன் யோவான், பிறக்கும் வரை ஊமையாக இருப்பாய்'' என்றார்.
 சகரியா தம் பணி முடித்து வீடு சென்றார். கர்த்தருடைய தேவதூதன் சொல்லியபடியே எலிசபெத்துக்கு கர்ப்பம் தரித்து, அழகான ஆண்பிள்ளை பிறந்தது. எல்லாருக்கும் மிகவும் மகிழ்ச்சியும் ஆச்சரியமாகவும் இருந்தது. எட்டாம் நாளில் பெயர் வைப்பதற்கு பிள்ளைக்கு குடும்பப் பெயராகிய சகரியா என வைக்கபோகும்போது சகரியா ஒரு கரும் பலகையை வாங்கி அவனுக்கு யோவான் என பெயரிடும்படி எழுதி காண்பித்தான். உடனே, சகரியாவின் வாய் வார்த்தை திறக்கப் பட்டது. அவன் மகிழ்வுடன் கர்த்தர் தனக்கு செய்த மிகப் பெரிய நன்மையை சொல்லி துதித்தான்.
 யோவான், தேவதூதன் சொல்லியபடியே தம் தூய நசர்ரேய விரதமாகிய, முனிவராக தம் வீட்டை விட்டு வனாந்திரத்தில் வாழ்ந்து முப்பது வயது வரை கடும் விரதம் இருந்து, இயேசு ஆண்டவர் ஊழியத்துக்கு முன், தூதனாக மக்களை ஆயத்தபடுத்தினான். மக்களைப் பார்த்து, ""மனம் திரும்புங்கள்! கடவுளின் ராஜ்யம் வந்து விட்டது'' எனக்கூறி, மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு திருமுழுக்கு கொடுத்தான். இவரிடத்தில் இயேசு ஆண்டவரும் தம் முப்பது வயதில் திருமுழுக்கு பெற்றார். யோவான் ஆண்டவருக்கு ரத்த சாட்சியாக ஏரோது மன்னனால் தலை வெட்டப்பட்டு மரித்தார். கிறிஸ்துமஸ் காலத்தில் திருமுழுக்கு யோவானை நினைவு கூறுதலும் அவர் தம்மை ஆண்டவருக்கு அர்ப்பணித்ததையும் எண்ணி போற்றுவோம்.
 - தே. பால் பிரேம்குமார்

ADVERTISEMENT
ADVERTISEMENT