எல்லா மனிதருக்கும் நினைவும் மறதியும் உண்டு. மனிதருக்கு கடவுள் கொடுத்த கொடை என்று கூறலாம். நினைவு அறிவின் முதல்படி. கேட்ட சொற்கள், சத்தம், கண்ட காட்சி, பார்த்த மாத்திரத்தில் கண் காது வழியே மனதில் பதிவு செய்யப்படுகிறது. நாள்கள் ஆண்டுகள் கடந்தாலும் நினைவு கூறப்படுகிறது. மேலும் கேட்ட சொற்கள், காட்சிகள், உணர்வுகள் வெளிக் கொண்டு வரப்படுகிறது.
எவ்வளவு அதிகமான நினைவுகளை பதிவு செய்து வைக்கின்றோமோ அவ்வளவு அறிவு வளர்ச்சி அடைகிறது. எண்ண நினைவு வந்தவுடன் மனமும் உடல் உறுப்புகள் செயல்படுகின்றது. நினைவுக்கு எதிர் மறக்கப்படுதல்; மறதி செவியில் கேட்கப் பட்டதையோ, கண்ணால் கண்டவைகளையோ மனதில் சிறப்பாக படியாமல் போனாலோ, மூளையில் படியாமல் போனாலோ மறதி நம்மை ஆட்கொள்கின்றது.
மறதி நமக்கு இயலாமை செய்தாலும், மறதி ஓர் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட பரிசு என்பர் உளநூல் வல்லுநர்கள். மறந்தால்தான் மனிதன் தன் நல்ல கெட்ட செயல்களின் நினைவுகளிலிருந்து விடுபடுவான். மறதியினால் நினைவுகளை அதிகப்படுத்தி அறிவு மேம்படுத்திக் கொள்வோம். இறைவன் மாபெரும் நினைவாற்றல் உள்ளவர். நம்மில் கர்த்தர் என்னை மறந்தாரோ என புலம்புவோர் உண்டு. அனால், இறைவன் நம்மை நினைவு கூறுகிறார்.
வேதாகமத்தில் மறந்துபோன ஒரு மனிதனை இறைவன் நினைவுக் கொண்டு நேரே சென்று, "நான் உன்னை மறக்கவில்லை, குணமாக்குகிறேன்' என்று கூறி குணமாக்கினார். இயேசு தம் சீடருடன் எருசலேமுக்கு போனார். பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம், எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது. அவைகளிலே பார்வையற்றோர், முடமானவர்கள், குறையான உடலுறுப்பு உடையவர்கள் போன்றோர் அங்கே படுத்திருந்து தண்ணீர் எப்போது கலங்கும் என்று காத்திருப்பார்கள். தேவ தூதன் ஒருவன் அந்த குளத்தில் இறங்கி தண்ணீரைக் கலக்குவான். தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்திக்கொண்டு அதில் இறங்குகிறாரோ, அவர் எப்படிப்பட்ட வியாதியஸ்தர் அல்லது மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் குணம் அடைந்து விடுவார்.
அக்குளக் கரையில் முப்பத்தெட்டு ஆண்டுகள் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனும் இருந்தான். அவன் எப்படியும் முதலில் கலக்கப்பட்ட குளத்தில் இறங்கி குணமடையக் காத்திருந்தான். ஆனால் அவன் முதலில் இறங்கி குணம் அடைய முடியவில்லை. ஆனால், வேறு ஒருவன் இறங்கி குணம் அடைந்து விடுவான்.
மிகப் பரிதாப நிலையில் நாள்கள், மாதங்கள் காத்திருந்தும் ஏமாற்றமே மிஞ்சியது. முப்பத்தெட்டு ஆண்டுகள் சென்று விட்டன. அவன் வீடு, உறவு, வாழ்ந்த இடம் முற்றிலும் மறந்து போனான். அவன் வாழ்வு முற்றிலும் அவன் உறவினர்களால் மறுக்கப்பட்டது. (யோவான் 5:1-9) இயேசுவும் அவர் சீடரும் மறக்கப்பட்ட அம் மனிதனிடம் வந்தார்கள். அவன் வெகுநாள் காத்திருக்கும் நோயாளி என அறிந்து அவனுடன் பேசினார்.
"" நீ குணமாக வருகின்றாயா?'' என்று வினவினார்.
"" ஆம், விரும்புகின்றேன். குளத்தில் தண்ணீர் கலக்கப்படுவதைப் பார்க்கின்றேன். ஆனால் எனக்கு முன்பு ஒருவர் இறங்கி குணமாகிப் போனதைப் பார்க்கின்றேன்'' என்று தன் இயலாமையை கூறினான்.
இயேசு அவனை நோக்கி, ""எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட'' என்றார். என்ன ஆச்சரியம்! முப்பதெட்டு ஆண்டுகளாக குணமாகாத நோய் குணமானது. எழுந்தான், நடந்து போனான். இயேசு, அவனை மறக்கவில்லை. அவன் குணமடைய அவன் இருக்கும் இடம் தேடிச் சென்று குணமாக்கினார். ஆம்! கடவுள் நம் ஒவ்வொருவரையும் நினைவில் வைத்துள்ளார். ஏற்ற வேளையில் நம்மை நினைவு கூர்ந்து நன்மை செய்கின்றார். நாம் இயேசுவை மறக்காத மனிதராக வாழ்வோம். இயேசு நம்மை ஆசீர்வதிப்பார்.