வெள்ளிமணி

ஈசனை மகிழ்விக்கும் பூசத் திருநாள்!

1st Feb 2020 07:27 PM | - எஸ். எஸ். சீதாராமன்

ADVERTISEMENT

தேவர்களுக்காகச் சிவனாரும், உமாதேவியும் இணைந்து ஆனந்த தாண்டவமாடிய நாளே  "தைப்பூசத்திருநாள்' ஆகும். இந்நாளில், இவ்வுலக இயக்கத்திற்கு (பிரபஞ்ச சக்திக்கு) ஆதாரமாகத் திகழும் பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவை ஒவ்வொன்றாகத் தோன்றியதாக சிவபுராணம் கூறுகிறது. சூரியன் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணமான உத்திராயண புண்ணியகாலத்தை தொடங்குகிறார். சிவாம்சம் கொண்டவரான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தியின் அம்சமான சந்திரன் கடக ராசியில்; அதாவது பூச நட்சத்திரத்தில் ஆட்சி பெற்றிருக்க, அவர்கள் இருவரும் பூமிக்கு இருபுறமும் ஓரே நேர்கோட்டில்; பெளர்ணமியில் நிகழும் இந்த நாளை நம் முன்னோர்கள் மிக முக்கியமான நாளாக கொண்டாட ஆரம்பித்தார்கள். தமிழ் மாதம் "தை'யில் வரும் பூச நட்சத்திரத்தில் இது வருவதால் இதனை "தைப்பூசம்" என்பர்.

சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகிய மூன்று அசுரர்களும் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து பல அற்புத சக்திகளை பெற்றனர். இதனால் கர்வமுற்ற அவர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் தேவர்களை சிறைபிடிக்க முயன்று; அதில் வெற்றி பெரும் சூழல் ஏற்பட்டதால்; தேவர்கள் ஒளிந்து வாழும் நிலை ஏற்பட்டது. இமையோனிடம் அனைவரும் ஒன்று திரண்டு சென்று அனைவரையும் காக்க வேண்டினர். நிலைமையை உணர்ந்த முக்கண்ணோன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை தெறிக்கவிட்டார். அவை ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. அவர்களை வளர்ப்பதற்கு ஆறு கார்த்திகைப் பெண்களை உருவாக்கி அக்குழந்தைகளுக்கு அனைத்து வகையான கலைகளையும் பயிற்றுவித்தார். 

பின் உமையவளின் கையினால் அந்த ஆறு குழந்தைகளை அணைத்து ஒன்று சேர்க்க ஆறுமுகன்; அழகன் முருகன் ஆனான்! ஆண்டியின் கோலமுற்று பழனியம்பதியில் தண்டத்துடன் நின்ற கார்த்திகேயனிடம் பார்வதி தேவி அணுகி அவன் வந்த நோக்கம் நிறைவேற ஞானவேல் ஒன்றை தருகிறாள்; இதனை, "வேல் வாங்குதல்' எனக்கூறுவர்; இது, தைப்பூச நன்னாளில் நிகழ்ந்தது. அசுரர்கள் முருகனின் பிறப்பு, தம்மை வதம் செய்யவே என்பதை உணர்ந்து பதுங்க ஆரம்பித்தனர். விடாமல் பின் தொடர்ந்த முருகன் திருசெந்தூரில் ஒவ்வொருவராக அழித்தொழித்தான். 

பொதுவாக, தைப்பூசத்திருநாளை, முருகனின் ஆறுபடை வீடுகளிலும் மிகச்சிறப்பாக கொண்டாடினாலும், திருச்செந்தூரிலும், பழனியிலும் பாரம்பர்யமாகவும் மிக விசேஷமாகவும் 40 நாள்களுக்கு முன்பிருந்தே விரதமிருந்து பக்தியோடு காவடி எடுத்து வந்து கொண்டாடுகிறார்கள். நம் உள்ளத்தே சேர்ந்துள்ள மாய அழுக்கினை அழித்தொழிப்பதற்கே இந்த பூசத்திருநாளை நம் முன்னோர்கள் இப்புராணத்தின் மூலம் நமக்குக் கூறியுள்ளார்கள் எனலாம்.

ADVERTISEMENT

நகரத்தார் என்றழைக்கப்படும் செட்டிநாட்டினர் வெளியூரில் இருக்கும் தன் குடும்பத்தார் அனைவரையும் தங்கள் ஊருக்கு வரவழைத்து; கடும் விரதமிருந்து, அங்கிருந்து கூட்டமாக 10 நாள்களுக்கு முன்பே கிளம்பி; (முன்னாளில் வண்டி கட்டிக் கொண்டு அதில் அனைத்து விதமான சாமான்களும், பொருள்களும் எடுத்துக் கொண்டு) ஆங்காங்கே அவர்களுக்குச் சொந்தமான பொதுச்சத்திரத்தில்; ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி இரவு தங்கி, ஒருமித்த கருத்தோடு பழனி முருகனுக்கு காவடி எடுப்பார்கள்.

இந்த தைப்பூசம் வியாழனன்று வந்தால், அன்று மட்டும் திருநெல்வேலிக்கு அருகாமையில், அம்பாசமுத்திரத்தில் உள்ள காசியபநாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள நடராஜருக்கு புனுகு சார்த்தி பூஜை செய்வார்கள். செல்வம் வேண்டுபவர்கள் வியாழனன்று வரும் பூசத்தன்று மகாலட்சுமி பூஜையை ஆரம்பிப்பார்கள். தைப்பூசத்தன்று சிவன், முருகன், மகாலட்சுமி கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவதைக் காணலாம். 

இந்நாளில் கேரள மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு பழனி முருகனுக்கு காவடியெடுப்பார்கள். மேலும், திருச்சூரிலிருந்து 10 கி.மீ. தூரத்திலுள்ள "கேரளப்பழனி' என்று அழைக்கப்படும் "தாயம்குலங்கரா' முருகன் கோயிலில் தைப்பூச விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்துடன் ஸ்ரீலங்கா, மலேசியா, மொரிஷியஸ், சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மியான்மர், கயானா, ஜமைக்கா மற்றும் கனடாவில் புலம் பெயர்ந்த இந்துக்கள்; குறிப்பாக, செட்டிநாட்டு செல்வந்தர்கள் இவ்விழாவை பெருமையோடு கொண்டாடுவார்கள். முக்கியமாக மலேஷியாவிலுள்ள பத்துமலை முருகன் கோயிலில் மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் (சீன, மலேசிய குடிமக்கள்) அலகு குத்திக்கொண்டு காவடியெடுத்து பக்தியோடு வழிபடுவது கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த நாளை அந்த அரசாங்கம் விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. 

அநேகமாக, தமிழகத்திலுள்ள பெரிய சிவத்தலங்களில் இவ்விழா தீர்த்தவாரியுடன் நடைபெறுகிறது. பூசத் திருநாளில் திருவிடைமருதூர் வந்து காவிரியில் நீராடிய பெருமையை ஞானசம்பந்தப் பெருமான் தனது தேவாரப் பதிகத்தில் பாடியுள்ளார். அவர் தனது திருமயிலைத் தேவாரத்தில் "தைப்பூசம் காணாதே போதியோ பூம் பாவாய்" எனப்பாடியுள்ளார்.

திருச்சி மாவட்டத்திலுள்ள குளித்தலையில் அருள்மிகு கடம்பவனநாதர், தைப்பூசத்தன்று சப்த கன்னிகைகளுக்கு காட்சியளித்ததாக ஐதீகம்! வைணவ திவ்ய தேசமான திருச்சேறையில் காவிரி அன்னைக்கும் பெருமாள் காட்சி கொடுத்த பெருவிழா, தைபூசத்தன்று நடைபெறுகின்றது. சமயபுரம் மாரியம்மன், தைப்பூசதன்று காவிரியின் வடகரைக்கு எழுந்தருளி ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடமிருந்து பட்டாடை, பரிவட்டம் மற்றும் சீர்வரிசைகளைப் பெற்று திரும்புவார்.  

வடலூர் ராமலிங்க வள்ளலார் சன்மார்க்க சங்கத்தை நிறுவி, பக்திநெறி பரப்பி, பசிப்பிணியை போக்க பாடுபட்டவர். வள்ளலார் 1874 -ஆம் ஆண்டு இத் தைபூசத் திருநாளில் இறைவனுடன் ஜோதியில் கலந்தார்; இந்த நாளில் வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறுகிறது. அதற்கு பெருந்திரளான மக்கள் திரண்டு ஜோதி தரிசனம் செய்கிறார்கள். அதுபோல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலின் மிக முக்கியமான திருவிழா, தைபூசத் திருவிழாவாகும். 

இவ்வாண்டு, தைப்பூசத் திருநாள் பிப்ரவரி  8 -ஆம் நாள், சனிக்கிழமையன்று வருகிறது. தைப்பூசத் திருநாளில் முருகக்கடவுளுக்கும், சிவபிரானுக்கும் அபிஷேக, ஆராதனை செய்வோர் "இஷ்டகாம்ய சித்திகளைப் பெறுவர்' என புராணங்கள் அறுதியிட்டுக்கூறுகின்றன.  

ADVERTISEMENT
ADVERTISEMENT