வெள்ளிமணி

ஜெய விஜயர்களுக்கு விமோசனம்: கருணை பொழியும் கஸ்தூரி ரங்கநாதர்

18th Dec 2020 06:00 AM | -ஆர்.அனுராதா

ADVERTISEMENT

 

சூரம்பட்டி - பெரும்பள்ளம் மற்றும் காசிபாளையம் - காளிங்கராயன் கால்வாய்ப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள ஓடை நடுப்பகுதி ஈரோடு ஆகும்.

இரு ஓடைகளுக்கிடையே அரங்கன் பள்ளிகொண்டதால் இவ்வூருக்கு "அரங்கம்' என்ற வழக்குமுண்டு. ஈரோடு, திருமாலின் வாயிற் காவலர்களான ஜெய விஜயர்கள் சரணாகதி அடைந்து சாபம் நீங்கிய தலமாகும்.

திருமால் சயனத்தில் இருந்தபொழுது அவரைத் தரிசிக்க வந்த துர்வாச முனிவரை, வாயிற் காவலர்களான ஜெய விஜயர்கள் தடுத்தனர். கோபமுற்ற துர்வாசர் ""இனிவரும் பிறப்புகளில் நீங்கள் அசுரர்களாகப் பிறந்து அழிந்து, மறுபிறப்பு எடுத்து மீண்டும் மீண்டும் அழிந்து போவீர்கள்'' என்று சாபமிட்டார்.

ADVERTISEMENT

இதனை ஜெய விஜயர்கள் திருமாலிடம் முறையிட்டனர். ""ரிஷியின் சாபமாதலால் உடனே விமோசனம் கிடையாது. இரு ஓடைகளுக்கு இடையே உள்ள சோலை வனத்தில் என்னைச் சரண் அடையும்போது உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும்'' என்றார் திருமால்.

பின்னர் ஜெய விஜயர்கள் இரணியாட்சன் - இரணியகசிபு, ராவணன் - கும்பகர்ணன், சிசுபாலன் - தந்துவர்தன் எனப்பிறந்து மோட்சம் பெற்றனர். இறுதியில் மது - கைடபர்களாகப் பிறந்து திருமாலைத் தாக்க வரும்போது சரணாகதியடைந்து, திருமாலின் அருளால் சாபவிமோசனம் பெற்றனர். அந்தத் தலம் சோலைவனத்தில் இரு ஓடைகளுக்கு நடுவே அமைந்த அரங்கமாகிய ஈரோடுதான் என்பது வரலாறு.

ஜெய விஜயர்கள் மீண்ட இவ்விடத்தில் அரங்கனை துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்தார். அப்போது ""எப்போதும் உன்னை விட்டு அகலாமல் இருக்க வரமருள வேண்டும்'' எனக்கேட்டார். அரங்கன் தனது கையில் இருக்கும் "கதாயுதம்' அருகிலேயே அவருக்கு இடம் அளித்தார்.

சோலைவனத்தில் இரு ஓடைகளுக்கிடையே அர்ச்சாரூபமாக நிறுவும்போது மணம் பொருந்திய மருத்துவத் திரவம் சுரக்கும் கஸ்தூரி மான்கள் அரங்கனைச் சுற்றி வந்து இடத்தை சுகந்தமாக ஆக்கியதால் "கஸ்தூரி ரங்கநாதர்' என்று வணங்கப்பட்டார்.

சில காலம் முன்பு வரை மருத்துவப்பணி புரிவோர் பிரசவம் பார்க்கச் செல்லும்போது நாட்டு மருந்தான கஸ்தூரியை பெருமாள் திருவடியில் வைத்து வணங்கி வாங்கிச் செல்லும் பழக்கம் இருந்தது. கோயில் அமைந்துள்ள பகுதிக்கு "கஸ்தூரி ரங்காபுரம்' என்ற பெயரும் வழங்கப்பட்டு வந்தது.

ஈரோட்டில் கஸ்தூரி ரங்கநாதரும், ஆருத்ரா கபாலீஸ்வரரும் அருகருகே திருக்கோயில் கொண்டருளுகிறார்கள்.

இத்திருக்கோயில் கல்வெட்டுகளில் ஒன்றான கி.பி. 914-ஆம் ஆண்டின் மதுரை கொண்ட கோப்பர கேசரிவர்மனின் கல்வெட்டில் வெண்ணெய் கூத்த நாயனாருக்கு திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள், "கால் பொன் தலை வரி' கண்ணாலக் கானமாகசெலுத்த வேண்டும் என்கிறது.

1265-ஆம் ஆண்டின் மதுரை வீரபாண்டியனின் கல்வெட்டில் மூலவரை "மூவேந்தர் சதுர்வேதி மங்கலத்தில் பள்ளிகொண்ட பெருமாள்' எனக் குறிக்கப்பட்டுள்ளது.

17-ஆம் நூற்றாண்டின் பூந்துறைநாட்டு சாசனம் "32 ஊரவர்கள் இந்தப் பெருமாளுக்கு பல அறக்கட்டளைகள் மூலம் திருப்பணிகள் செய்ததையும், வணிகர்கள் குழு ஆலய மணி ஒன்றை அளித்ததையும் குறிப்பிடுகிறது .

1907-ஆம் ஆண்டில் ஈரோடு பேட்டை வெங்கட்ட நாயக்கர் மனைவி சின்னத்தாயம்மாளும், ராம நாயக்கர் மனைவி சென்னம்மாளும் சேர்த்துவைத்த சிறுவாட்டு காசைக் கொண்டு கோயில் சுற்றுப் பிரகாரம் முழுவதும் கற்களால் தளவரிசை பாவியதை ஒரு கல்வெட்டு குறிக்கிறது.

ஈரோடு பேட்டை வெங்கட நாயக்கர், மூலவர் கஸ்தூரி ரங்கநாதருக்கு திருமுடியும் திருவடியும் செய்து சமர்ப்பித்துள்ளார். இந்த இரண்டு நன்கொடைகளும் ஈ. வெ. ராமசாமி பெரியாரின் தாயார் மற்றும் சித்தி ஆகியோர் செய்தவையாகும்.

இக்கோயில் சுமார் 65 அடி உயரமுடைய ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. திருவேங்கடமுடையான், சக்கரத்தாழ்வார், ஹயக்ரீவர், தன்வந்திரி, விஷ்வக்சேனர் சந்நிதிகளுடன், திருமால் திருவடி, தலவிருட்சம் வில்வம், ஆழ்வார்கள், ஆஞ்சநேயர், உடையவர் வேணுகோபாலன் சந்நிதிகளும் அமைந்துள்ளன. வெளிப்பிராகாரத்தில் தனி சந்நிதியில் மூலவர் கமலவல்லித்தாயாரும் உற்சவராக ரங்கநாயகித் தாயாரும் அருள்கின்றனர். உட்பிராகாரத்தில் ஆயர்பாடி கண்ணன் சந்நிதியும், ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் ஆதி பெருமாள் எனும் வரதராஜப் பெருமாளும் அருளுகின்றனர். பெருமாளுக்குத்தான் எப்போதும் முதல் பூஜை நடைபெறுகிறது.

கருவறையில் சுமார் 13 அடி நீளத்தில் இரு கரங்களுடன் கஸ்தூரி ரங்கநாதர் ஐந்துதலை கொண்ட ஆதிசேஷனில் சயனக் கோலத்தில் கருணை பொழிகிறார். திருவடிக்கருகில் ஜெய விஜயர்கள் சரணாகதி அடைந்த வடிவில் நிற்கின்றனர். வலது கரமருகில் ஸ்ரீதேவியும் எதிரில் பூதேவியும், வலது கையின் அடியில் உள்ள கதாயுதத்தின் கீழ் துர்வாசரும் எழுந்தருளியுள்ளனர்.

குடும்ப நலம், தொழில் முதலிய அனைத்து நலன்களுக்காகவும் இக்கோயிலில் வேண்டிக்கொள்கின்றனர். வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி முதல் பெருமாள் கோயில்களின் அனைத்து உற்சவங்களும் கோயில் வழக்கப்படி நடைபெறுகின்றன. ஆனி கேட்டை மூலவர் ஜேஷ்டாபிஷேகம், புரட்டாசியில் பத்து தினங்கள் பிரம்மோற்சவம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மார்கழியில் பகல்பத்தும், இராப்பத்தும் சேவா காலம், பகல் பத்து இறுதிநாள் இரவு மோகினி அலங்காரம், வரும் டிச. 25 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி அதிகாலை 4.30 மணியளவில் பெருமாள் புறப்பாடாகி, சொர்க்கவாசல் சேவை நடைபெறும். இராப்பத்தின் 10-ஆம் நாள் நம்மாழ்வார் மோட்சமும், சாத்துமுறையும் நடைபெறும். இந்தப் பத்து தினங்களும் மூலவர் கஸ்தூரி ரங்கநாதர் முத்தங்கியில் சேவை சாதிப்பார்.

"ஈரோடு கோட்டைப் பகுதி' எனப்படும் இடத்தில் பன்னீர்செல்வம் பூங்கா அருகில் ஈஸ்வரன் கோயில் வீதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. வழக்கமாக காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் சுவாமியை தரிசிக்கலாம்.

மேலும் தகவலுக்கு: 9578967397.

ADVERTISEMENT
ADVERTISEMENT