வெள்ளிமணி

மகர ராசியில் மங்கள சனீஸ்வரர்!

18th Dec 2020 06:00 AM | -சி.ராஜசேகரன்

ADVERTISEMENT


திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகேயுள்ள திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை சமேத மேகநாதசுவாமி கோயிலுக்கு மேற்கில் உள்ளது திருக்கொடியலூர். சூரியனின் மனைவி உஷாதேவியும், அவருடைய நிழலான சாயாதேவியும் மேகநாதசுவாமியிடம் தங்களுக்கு புத்திர பாக்கியம் வழங்குமாறு வேண்டினர். 

அதற்கு இறைவன், "நீங்கள் இருவரும் உங்கள் கணவரோடு மேகநாதசுவாமி ஆலயத்தின் சூரிய புஷ்கரணியில் நீராடி, இத்தலத்துக்கு மேற்கே உள்ள ஈசனை வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும்' என வரம் அளித்தார்.

அதன்படி சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் மேகநாதசுவாமி கூறிய இடத்துக்குச் சென்று சிவபூஜை செய்து வழிபாடு நடத்தினர். மனம் மகிழ்ந்த ஈசன், உஷாதேவிக்கு எம தர்மனும்,  சாயாதேவிக்கு சனீஸ்வர பகவானும் ஜனிக்கும்படி செய்தார்.  

அத்துடன், "எமதர்மனும், சனீஸ்வரரும் இத்தலத்தில் வீற்றிருந்து என்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சனி தோஷங்களையும், எம வதையையும் நீங்கச் செய்து அருள்புரிய வேண்டும்' என கட்டளையிட்டார்.

ADVERTISEMENT

சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் கூடிய இடம் திருமீயச்சூர் தலத்துக்கு மேற்கே உள்ள "கூடியலூர்' என்றழைக்கப்பட்ட "திருக்கொடியலூர்' ஆகும். கோயிலின் வடபுறம் ஸ்ரீமங்கள சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாகவும், தென்புறம் ஸ்ரீஎம தர்மன் தனிச் சந்நிதியிலும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இங்குள்ள சனீஸ்வர பகவான், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அபய ஹஸ்தத்துடன், அனுக்கிரக மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிப்பதால், "மங்கள சனீஸ்வர பகவான்' என்று அழைக்கப்படுகிறார். இத்தலம்  சனீஸ்வர பகவான் அவதரித்த திருத்தலம் என்பதால் சனீஸ்வர பகவானின் மற்ற தலங்களைவிட முதன்மையானதாக விளங்குகிறது.

ஏழரை நாட்டு சனி, அஷ்டம சனி, சனி தோஷம், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கடன் தொல்லை, திருமணம் தடைபடுவது, கணவன் மனைவி பிரச்னை ஆகியவைகளுக்கு இந்தக் கோயில் தென்புறம் உள்ள தேவர் தீர்த்தத்தில் நீராடி மூலவரான அகத்தீஸ்வரரை வழிபட்டு, அபிஷேக தீர்த்தத்தைத் தெளித்து கொண்டு, சனீஸ்வர பகவானுக்கு ஹோமம், அபிஷேகம், கருப்பு வஸ்திரம் சார்த்தி, எள் தீபமேற்றி, எள் சாதம் நைவேத்தியம் மற்றும் அர்ச்சனை செய்தால் சகல தோஷமும் நீங்கி நன்மை ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சார்வரி ஆண்டு மார்கழி 12-ஆம் தேதியன்று (டிச. 27) சனி பகவான், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதையொட்டி, திருக்கொடியலூர் மங்கள சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப் பெயர்ச்சி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 

தோஷ பரிகாரம் செய்ய விரும்பும் ராசிக்காரர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று பரிகாரம் செய்து கொள்ளலாம். 

திருவாரூர் - மயிலாடுதுறை வழித்தடத்தில் பேரளம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் திருமீயச்சூர் அருகில் இத்தலம் அமைந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு: 8754756418.

ADVERTISEMENT
ADVERTISEMENT