வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 124

18th Dec 2020 06:00 AM | டாக்டர் சுதா சேஷய்யன்

ADVERTISEMENT

 

பூலித்தேவனைப் பற்றி நினைக்கையில், பெரிய காலாடியை நினைக்காமல் இருக்கமுடியாது. 

"எத்தனைப் பட்டாளம் வெட்டினானடா-வெண்ணியை
       எதிர்க்க ஆள் இல்லையடா!
செங்குருதி நனைத்துப் பூலித்தேவன் வண்ணச்
        சீர்மிகு மேனியெல்லாம் கொப்பளிக்க...
காலாடி உயிருக்கோர் காலன் வந்திட்டான்
       கால் நொடியில் காற்றாய்ப் பறந்திட்டான்.....'

பூலித்தேவன் சிந்துப்பாடலின் பகுதியாகக் காலாடியின் பெயரும் ஒலிக்கிறது.
யார் இந்தக் காலாடி?

ADVERTISEMENT

பாளையங்கள் செழித்திருந்த காலத்தில், தேவேந்திர குலப் பெருமக்கள் பலர், போர்ப்படை வீரர்களாக இருந்திருக்கின்றனர். சுற்றியிருந்த காட்டுப் பகுதிகளிலிருந்தும் பெருகிக்கொண்டிருந்த அயலாதிக்கத்திலிருந்தும் தத்தம் பாளையங்களைப் பாதுகாப்பதற்காகப் பாளையத் தலைவர்கள், தத்தம் பாளையப் பகுதிகளில் படைப்பிரிவுகளை அமைத்து நிர்வகித்துள்ளனர். இப்படித்தான் பூலித்தேவனும் கோட்டைகளைக் கட்டிப் படைகளை அமைத்துள்ளார். 

இத்தகைய படைவீரர்களில் சிலர், பரம்பரையாகவே படைப்பணியில் ஈடுபட்டிருந்தனர். காலாட்படையில் பணி செய்தவர்கள் என்பதால் "காலாடிகள்' என்றழைக்கப்பட்டனர். தேவேந்திரகுலத்தின் உட்பிரிவாகவே "காலாடி' என்னும் பிரிவு இருந்திருக்கிறது. 

பெரிய காலாடி, சின்னக்காலாடி, கரையாளர் குடும்பனார், சாத்தான் காலாடி, சங்கரக்குடையான், மாடக்குடும்பனார், முத்துக்குடும்பனார், கட்டக்கருப்பணன் என்று இவ்வாறு பெரும்பணியாற்றிய வீரர்களின் பெயர்கள் தெரியவருகின்றன. பெரிய வீரர்கள், அவர்களின்கீழ் இயங்கிய படைப் பிரிவினர் என்ற முறையில் குழுக்களாகவும் இவர்கள் செயல் பட்டிருக்கின்றனர். 

ஒரு சிலக் குழுக்கள் மற்றும் அந்தந்தக் குழுத் தலைவர்களின் வீரம், போர்த் திறம், செயல் திட்பம்,  நேர்மை காரணமாக, அந்தக் குழுவானது தங்களோடு இணைந்திருக்க வேண்டும் என்று பாளையத் தலைவர்கள் ஆசைப்பட்டதாகவும் தெரிகிறது. 

இப்படிப்பட்ட வீரர்களில் ஒருவர் வெண்ணிக்காலாடி என்றழைக்கப்பட்ட பெரிய காலாடி. நேரடியாகப் பூலித்தேவனையோ அவரது படைகளையோ பகல் நேரத்தில் தாக்கமுடியாது என்றெண்ணிய பகைவர்கள், இரவுப் பொழுதில் தாக்கத் தீர்மானித்தனர். 

இந்தச் செய்தியை உளவறிந்து கொண்ட பெரிய காலாடியார், காட்டு வழியிலேயே முகாமிட்டுப் பகைவர்களை எதிர்த்தார். இருப்பினும், தொடர்ந்து நடைபெற்ற சண்டையில், வயிற்றில் குத்தப்பட்டார். கத்தி ஆழமாகப் பாய, குடல் கிழிந்து சரிந்து வெளியில் தொங்கியது.  சற்றும் தளராமல், குடலை உள்ளே தள்ளிவிட்டு, தலையைச் சுற்றிக் கட்டியிருந்த தலைப்பாகையை அவிழ்த்து இறுக்கமாகக் கட்டிக் கொண்டு சண்டையைத் தொடர்ந்தார். பகைவர்களை வீழ்த்தினார். இன்னும் பலர் ஆங்காங்கே காட்டுப் பகுதிகளில் பதுங்கியிருந்து அடுத்த சில நாள்களில் தாக்கக்கூடும் என்பதை உணர்ந்தவர், குதிரை மீதேறிச் சென்று பூலித்தேவனிடம் செய்தி தெரிவித்தார். ரத்தம் கொட்டக் கொட்ட நின்று தகவலைச் சொன்னவர், அப்படியே சரிந்து வீழ்ந்து சரித்திரம் ஆனார். 

தம்முடைய நண்பரின் மரணத்தால் நிலைகுலைந்து போன பூலித்தேவன், எந்த இடத்தில் காலாடி வீரப்போரிட்டாரோ, அந்த இடத்தில் வீரக்கல் ஒன்றை நட்டு, அந்த இடத்திற்கே "காலாடி மேடு' என்றும் பெயர் சூட்டினார். இப்போதும் இருக்கிறது "காலாடிமேடு'. 

ராடிஸ்பான் என்னும் ஜெர்மானிய நகரைப் பிடிப்பதற்காக நெப்போலியனின் படைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. என்ன ஆகுமோ? என்னும் தவிப்பில், அருகிலிருந்த குன்றின் மீது நின்று, தொலைவில் தெரிந்த ராடிஸ்பானையே நெப்போலியன் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று, ராடிஸ்பானிலிருந்து சிறு புழுதிப் படலம் ஒன்று நகர்ந்தது. 

தன்னை நோக்கி அப்படலம் வருவதையும் நெப்போலியன் கண்டான். அருகே வர வர... குதிரைமீது இளைஞன் ஒருவன். ராடிஸ்பானை ஃபிரஞ்சுப்படைகள் வெற்றி கொண்டதையும் ஃபிரெஞ்சுக் கொடியைத் தானே ஏற்றியதையும் அந்த வீரன் எடுத்துரைக்க... காயத்தால் அவனுடைய மார்பு பிளவுபட்டிருப்பதைக் கண்ட நெப்போலியன், "நீ காயப்பட்டிருக்கிறாய்' என்று ஆதங்கப்பட, "இல்லை நான் கொல்லப்பட்டு விட்டேன்' என்று கூறிக்கொண்டே அந்த வீர இளைஞன் மாண்டு விழுவான். ராபர்ட் ப்ரெளனிங் இயற்றிய "த இன்சிடெண்ட் ஆஃப் தி ஃபிரெஞ்ச் கேம்ப்' என்னும் கவிதையின் சாராம்சம் இது. 1809 - ஏப்ரலில் நடைபெற்ற ராடிஸ்பான் போரை மையமாக வைத்து இயற்றப்பட்ட கவிதை. 

நெப்போலியனை நாடி வந்தக் குதிரை வீரன் கவிதையைப் போல், பூலித்தேவனை நாடி வந்த வெண்ணிக்காலாடியின் கதை, நாட்டுப்புறப் பாடல்களில் கவிதையாகியுள்ளது. "கடமை வீரனப்பா காலாடி வீரனப்பா' என்னும் பாடல் ஒலிக்கும் போதெல்லாம், பொருநையாளின் உள்ளம் பூரிக்கத்தானே செய்யும்!

பெரிய காலாடியைப் போலவே இன்னுமொரு மாவீரன் சுந்தரலிங்கம்... 

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT