வெள்ளிமணி

கலந்தாலோசி - காரியமாற்று!

மு. அ. அபுல் அமீன்


வீரியம் பேசாது கலந்து ஆலோசித்து செய்யப்படும் காரியம் வெற்றியுறும் என்பதால் பிரச்னைகளில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்க அறிவுறுத்துகிறது அருமறை குர் ஆனின் 3-159 ஆவது வசனம். ஆலோசனை கோரப்படுபவர் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்ற திருநபி (ஸல்)  அவர்களின் அறிவுரையை அறிவிக்கிறார் அபூ ஹீரைரா (ரலி) நூல் - திர்மீதி, அபூதாவூத், இப்னு மாஜா.
உம்ரா பயணம் வந்த பாச நபி (ஸல்) அவர்களையும், உடன் வந்த தோழர்களையும் ஹுதைபாவில் தடுத்த கடுங் குறைஷிகளைத் தாக்க துடித்த தோழர்களோடு ஆலோசனை கலந்த பொழுது அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் ""உம்ரா புனித பயணம் வந்த நாம் சண்டையிடுவது சரியல்ல'' என்று கூறுவதை ஏற்று ஹுதைபிய்யா உடன்படிக்கை உருவானது. 
பத்ரூ போரில் பாச நபி (ஸல்) அவர்கள் முதலில் கண்ட நீர் நிலையின் தொடக்க பகுதியில் முகாமிட்டார்கள். அப்பொழுது ஹுபாப் பின் அல்முன்திர் (ரலி) ""எதிரிகளுக்கு அருகில் உள்ள நீர்நிலை பகுதியில் தங்குவோம். அங்குள்ள பாழுங்கிணற்றைத் தூர்வாரி தொட்டிகளில் நீரை நிரப்பிக் கொள்வோம். நீராதாரம் நிறைய கிடைக்கும். எதிரிகள் நீரின்றி நிலை குலைவர்'' என்று ஆலோசனை கூறினார்கள். கலந்து ஆலோசித்து காரியமாற்றும் காருண்ய நபி ( ஸல்)  அவர்கள் வீரரின் விவேக முடிவை ஏற்று வேகமாக முகாமை மாற்றினார்கள்.  நூல் - தர்ஸீர் தபரீ, தப்ஸீர் இப்னு அபீஹாத்திம். 
பத்ரு போரில் கைதான போர் கைதிகளைக் குறித்து அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) இருவரிடமும் ஆலோசனை கேட்டார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். அபூபக்கர் (ரலி) கைதிகள் காருண்ய நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர். அதனால் அவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று உரைத்தார்கள்.  உமர் (ரலி) கைதிகளைக் கொன்று விடுமாறு கோரினார்கள். மீண்டும் அபூபக்கர் (ரலி ) இழப்பீடு பெற்று விடுதலை செய்ய விளம்பினார். இந்த ஆலோசனை ஏற்கப்பட்டது. அண்ணல் நபி (ஸல்)  அவர்கள் பிணைத்தொகை பெற்று விடுதலை செய்தார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல் - தப்ஸீர் இப்னு மர் தவைஹி.
மதீனாவில் மூன்று பக்க எல்லைகளும் பலமாக இருந்தன. ஒரு பக்க எல்லை எதிரிகள் எளிதாக நுழையும் வகையில் இருந்தது. அண்ணல் நபி (ஸல்)  அவர்கள் அங்கு பாதுகாப்பைப் பலப்படுத்துவது குறித்து ஆலோசனை கேட்டார்கள். தோழர் ஸல்மான் பார்சி (ரலி) பாரசீக நாட்டில் செய்வது போல் அகழி வெட்ட ஆலோசனை கூறினார்கள். அகழியைத் தாண்டி எதிரிகள் வர இயலாது என்றும் இயம்பினார்கள். அந்த ஆலோசனை ஏற்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. 
வணிகம், சமூகம் சம்பந்தமான பிரச்னைகளில் ஆலோசனைகளைப் பெற பலர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் இல்லத்தில் கூடுவர். அபூபக்கர் (ரலி) ஆட்சியில் குர் ஆனைத் தொகுப்பது குறித்து ஆலோசித்தார்கள். ஒரு குழுவை அமைத்து அதன் தலைமைப் பொறுப்பை ஜைத் இப்னு தாபித் (ரலி) அவர்களிடம் ஒப்படைக்க ஒரு மனதாகத் தீர்மானித்தனர்.  அபூபக்கர் (ரலி) அவர்களின் இறுதி நெருங்கிய பொழுது உதுமான் (ரலி),  அபூஹுரைரா (ரலி),  தல்ஹா (ரலி) ஆகியோரை அழைத்து, அடுத்த கலீபா குறித்து ஆலோசித்து, அடுத்த கலீபா உமர் (ரலி) என்று அறிவித்தார்கள். 
அருமறை குர்ஆன் அறிவுறுத்துகிறபடி, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நடந்து காட்டிய நல்வழியில் நந் நபி (ஸல்) அவர்களின் நற்றோழர்கள் பொற்புடன் தொடர்ந்தவாறு நாமும் கலந்தாலோசித்து காரியம் ஆற்றுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பிய ஆட்சியா்

வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்! மாயமான தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT