வெள்ளிமணி

வம்சம் வளர்க்கும் விருட்ச வழிபாடு

4th Dec 2020 06:00 AM | -அபிராமி மைந்தன்

ADVERTISEMENT

தருமபுரம் ஆதீன நிர்வாகத்தின் கீழ் இயங்கும் திருக்கோயில்களில் ஒன்று "குத்தாலம்' என்று அழைக்கப்படும் "திருத்துருத்தி ஸ்ரீஉக்தவேதீஸ்வரர் கோயில்!' 

இறைவன் ஸ்ரீஉக்தவேதீஸ்வரர், இறைவி ஸ்ரீஅமிர்த முகிழாம்பிகை அருள்புரியும் இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதக் கடைசி வெள்ளிக்கிழமையில் (இவ்வாண்டு டிச.11) தல விருட்சத்துக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

பூமியிலுள்ள எல்லா மரங்களுமே நமக்கு ஒவ்வொரு வகையில் பலனளிக்கின்றன. சில மரங்களை தெய்வீக மரங்களாகப் போற்றி வணங்குகிறோம். ஆல், அத்தி, நெல்லி, மா, வேம்பு, வில்வம், கொன்றை, மந்தாரம், பாரிஜாதம், மகிழம், செண்பகம், பன்னீர், புரசை, சந்தனம், வன்னி போன்ற தெய்வீக மரங்களை நாம் அறிவோம். இத்தகைய தெய்வீக மரங்களில் இறைவன் உறைவதாகப் புராணங்கள் கூறுகின்றன. இவை தவிர குறுந்தம், பும்ஸிகம், பின்னை, பிராய், ஜலம்தராம் போன்ற பல வகைகள் உள்ளன. 

27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களை வணங்குவதால் ஜாதகத்தில் நட்சத்திரங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இத்தகைய தெய்வீக மரங்களில் மிகவும் சிறப்புடன் விளங்குவது உத்தால மரம். இந்த மரமே இத்தலத்தின் தல விருட்சமாக வணங்கப்படுகிறது. 

ADVERTISEMENT

இம்மரம் கைலாயத்திலிருந்து வந்ததாக "திருத்துருத்திப் புராணம்' கூறுகிறது. இந்த தெய்வீக மரம் ஏன் பூவுலகிற்கு வந்தது?

சிவனுடன் பவனி வந்த தெய்வ மரம்: பரதமா முனிவர் அம்பிகையே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டுமென்று விரும்பித் தவமியற்ற, அதன் பலனாக அம்பிகையே அவருக்கு மகளாகப் பிறந்தாள். அக்குழந்தையை மிக்க அன்புடன் சீராட்டி வளர்த்து வந்தார். அவளுக்கு சகல கலைகளையும், சாஸ்திரங்களையும் கற்பித்தார். 

அம்பிகை பருவ வயதெய்தியபோது, அந்த முக்கண்ணனே தன் மணாளனாக வரவேண்டுமென்று விரும்பினாள். இத்தலத்தில் பாய்ந்தோடும் காவிரிக் கரையில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டாள்.

இறைவன் அம்பிகை முன் தோன்றி அவள் திருக்கரங்களைப் பற்றி அழைத்துச் செல்ல முயல, அப்போது அம்பிகை,“""ஊர், உலகம் ஒன்று திரண்டு வாழ்த்த, என் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதையே விரும்புகிறேன்!'' என்று கூறினாள். நம் குழந்தைகளுக்கு அன்றே அம்பாள் எவ்வாறு வழிகாட்டியிருக்கிறாள் பாருங்கள்!

மிக்க மகிழ்வுடன் கைலாயம் திரும்பிய இறைவன் நந்திதேவரை அழைத்து, பரதமா முனிவரிடம் சென்று தனக்காக பெண் கேட்டு வருமாறு பணித்தார். அவரும் மகிழ்வுடன் பூவுலகம் வந்து, முனிவரைச் சந்தித்து ஈசனின் விருப்பத்தைத் தெரிவித்தார். பரதமா முனிவர் பெருமகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு அதற்கான நாளும் குறித்துத் தந்தார். குறிப்பிட்ட நாளில் கைலாயத்திலிருந்து தன் கணங்களுடன் ரிஷப வாகனத்தில் ஏறி, ஈசன் புறப்பட, விநாயகர் முன்செல்ல, அவர் நித்தம் அமர்ந்து தியானம் செய்யும் "உத்தாலம்' என்ற மரம் (ஒருவகை அத்தி மரம்) ஈசனுக்கு நிழல் தந்தபடியே பின் தொடர்ந்து வந்தது. நான்கு வேதங்களும் அவருடைய பாதுகைகளாக விளங்கின.

திருத்துருத்தியை வந்தடைந்து பெற்றோர் சம்மதத்துடன் பார்வதியை பரமேஸ்வரன் திருமணம் செய்து கொண்டார். சிவன்-பார்வதி திருமணம் நடைபெற்றதற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த வேத ரூபமான பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து தனக்கு நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் விட்டுச் சென்றார். அதனால் இம்மரமே இத்தலத்தின் தல விருட்சமாக அமைந்தது. இம்மரம் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. 

தல விருட்சத்துக்கு சிறப்பு அபிஷேகம்: உத்தால மரத்தின் பெயராலேயே இத்தலம் "உத்தால வனம்' எனப்பட்டது. அதுவே நாளடைவில் மருவி "குத்தாலம்'ஆனது. அந்த தெய்வீக மரத்தையும், சிவனின் பாதுகைகளையும் நாம் இப்போதும் இத்திருக்கோயிலில் தரிசிக்கலாம். பாதுகைகளுக்குச் செப்புக் கவசம் சாற்றப்பட்டுள்ளது. மருத்துவ குணம் மிகக்கொண்ட இம்மரம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே காய்க்கும். பல்வேறு உடல் நலக் கோளாறுகளைக் குணமாக்கும், இதன் மலர் சுவைக்க இனிமையாக இருக்கும். உத்தால மரத்துக்கும், பாதுகைகளுக்கும் ஆண்டுதோறும் அரிய திரவியங்களைக் கொண்டு விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்படுகின்றன. 

இம்மாதம் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று இரவு 7 மணியளவில் இவ்வைபவம் நிகழ இருக்கின்றது. வம்சம் வளர்க்கும் இந்த விருட்ச வழிபாடு விசேஷமானதாகும். உலகிலேயே தல விருட்சத்துக்கு அபிஷேக ஆராதனைகள் நிகழ்வது இங்கு மட்டும்தான்.  இந்த வழிபாட்டைச் செய்யும் மணமாகாதவர்களுக்கு திருமணம் விரைவில் கைகூடுவதுடன், மழலைப் பேறும் கிட்டி இனிமையான இல்லறம் அமையப் பெறுவர்.

விக்கிரம சோழ மன்னனின் மனைவி கோமளை தேவியின் தொழுநோய் இங்குள்ள இறைவனின் அருளால் நீங்கியதாகத் தல வரலாறு கூறுகிறது. மேலும் சுந்தரமூர்த்தி நாயனாரின் தோல் நோய் தீர்த்த தலமும் இதுதான். 

தருமபுர ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் ஆசியுடன் இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நாமும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டு ஸ்ரீஉக்தவேதீஸ்வரர்,  ஸ்ரீஅமிர்த முகிழாம்பிகை அம்மன் அருளைப் பெற்று ஆனந்தமாக வாழ்வோம். "குத்தாலம்' என்று அழைக்கப்படும் "திருத்துருத்தி' திருத்தலம், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து தென்மேற்கே 10 கி.மீ.தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 30 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு: ஸ்ரீராஜசேகர குருக்கள்: 9487883800.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT