வெள்ளிமணி

தஞ்சம் அடைந்தால் தருவாள் மழலை!

4th Dec 2020 06:00 AM | -எஸ். எஸ். சீதாராமன்

ADVERTISEMENT

 

பார்வதி பரமேஸ்வரரின் மணக்கோலத்தைக் காண திருக்கைலாயத்தில் உலகமே திரண்டது. இதன் தாக்கம் தென்புலம் உயர்ந்து வடபுலம் தாழ்ந்து பூமித்தாய் கலக்கமுற்றாள். இதனைக்கண்ட நீலகண்டர், நான்மறை கண்டோன் அகத்திய மாமுனியை அழைத்து ""இதனைச் சமன் செய்யத் தகுதியானவர் நீரே! அதனால் தென்புலம் சென்று பூமியைச் சமன் செய்வீர்'' என்றார். 

ஆண்டவன் கட்டளையை சிரமேற்கொண்ட குறுமுனி, தென் திசை வந்து பல சிவாலயங்களை ஏற்படுத்தினார். அதில் ஒன்றுதான் "கரு வளர்ச் சேரி" என்ற திருத்தலம். இந்த ஊரின் பெயரே தலப்பெருமையைப் பறைசாற்றும் விதமாக அமைந்தது ஒரு தனிச்சிறப்பாகும். 

அகத்தியர் ஏற்படுத்திய தலம் ஆகையால் இங்கு உறைந்துள்ள இறையனாருக்கு "அகஸ்தீஸ்வரர்' என்றும், உமையவளுக்கு "அகிலாண்டேஸ்வரி' என்றும் பெயர் உண்டாயிற்று. 

ADVERTISEMENT

வாழ்வில் அனைத்துச் செல்வங்கள் இருந்தும் குழந்தைச் செல்வம் இல்லை எனில் சுகமில்லை. தற்காலத்தில், இரு பாலரும் வேலைக்குச் செல்கின்றனர். சிலர் வேலைக்குப் போக விரும்பாத சூழ்நிலையிலும் கட்டாயம் செல்ல வேண்டுமென்ற பிடிவாதத்தினால் செல்கின்றனர். அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தத்தினாலும், தவறான உணவுப் பழக்கங்களாலும் இயற்கையாகவே நம் உடலுக்கு குழந்தைப் பேற்றைத் தரும் கரு அணுவின் உற்பத்தி குறைந்து வருவதாக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனையெல்லாம் அக்காலத்திலேயே யோசித்த நம் சித்த புருஷர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பரிகாரத் தலத்தை நமக்கு காட்டிச் சென்றுள்ளனர். நமக்கு நேரம் காலம் வரும்போது தான் இப்படிப்பட்டத் திருத்தலங்கள் தெரியவரும். 

கருவளர்ந்தபின் அதனைக் காப்பதற்கும், சுகப் பிரசவம் ஆவதற்கும் "கரு வளர்ச்சேரி கர்ப்ப ரட்சகி அம்மனை' காட்டியுள்ளார்கள். 

இக்கோயிலின் குருக்கள் மழலைச் செல்வம் வேண்டி வரும் பெண்களிடம் ஏழு விதமான பூஜைப் பொருள்களைப் பெற்று, முறைப்படி அம்பிகையின் பாதத்தில் சமர்ப்பிக்கிறார். 

பின்னர், அப்பெண்களின் கைகளால் படிகளை மஞ்சள் கிழங்கு மற்றும் நெய்யினால் மெழுகச்செய்து, அதனையே பிரசாதமாகத் தருகிறார். மிக முக்கியமாக அந்த மஞ்சளை தினமும் தேய்த்து குளிக்கச் சொல்கிறார். 

அதன்படி மஞ்சள் தேயத்தேய கரு வளர்ந்து வருமாம். இனிப்பான செய்தியை இரண்டு மாதங்களுக்குள் கோயிலுக்கு வந்து சொல்லி விடுவார்களாம்.

குழந்தைக்காக ஏங்கும் எவரும் அவளிடம் தஞ்சம் புகுந்தால் தாயாவது திண்ணம். 

ஆவணி புனர்பூசம், நவராத்திரி, மாசி மகா சிவராத்திரி போன்ற முக்கியமான சில நாள்களில் மட்டுமே அம்பிகையின் முழு உருவத்தையும் வெள்ளிக்கவசத்துடன் தரிசிக்கமுடியும். மற்ற நாள்களில், திரைச் சீலையால் ஒரு பகுதி மறைக்கப்பட்டு அருளாட்சி செய்கிறாள். 

அகத்தியரும் அவரது மனைவி லோபமுத்ரையும் இங்கு பிரதிஷ்டையாகியுள்ளார்கள். அவர்களுக்கு உற்சவத் திருமேனியும் இங்குள்ளது. 

இக்கோயில் கும்பகோணம்-வலங்கைமான் சாலையில் மருதாநல்லூர் இடதுபுறம் திரும்பி சுமார் 2 கி.மீ. தொலைவு சென்றால் கருவளர்ச் சேரி திருத்தலத்தை அடையலாம். காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். மேலும்

விவரங்களுக்கு: 

ய.சுப்ரமண்ய குருக்கள் / ந.விக்னேஷ் குருக்கள்: 9976053814.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT