வெள்ளிமணி

பாலாற்றங்கரை வந்த பாலகன்!

செங்கை பி. அமுதா


இது ஐயப்ப பக்தர்களின் சரண கோஷ காலம்.  எங்கெங்கும் ஐயப்பனின் பக்திப் பாடல்கள். தமிழ்நாடு, கேரளம், இலங்கை உள்ளிட்ட பல பகுதிகளில் ஐயப்ப வழிபாடு நடக்கிறது. உலகெங்கும் உள்ள ஐயப்ப பக்தர்கள் முறைப்படி விரதம் இருந்து கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து சுவாமி ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர்.  

கனவில் தோன்றிய ஐயப்பன்: 

ஒருமுறை செங்கல்பட்டு நகரில் வசித்த ஐயப்ப பக்தர்களின் கனவில் ஒருசேர வந்த ஐயப்பன் தனக்கு பாலாற்றின் கரையில் ஒரு கோயில் அமைக்க உத்தரவிட்டாராம்.  இதனை பக்தர்கள் ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தனர். பல தந்திரிகளும், நம்பூதிரிகளும் ஐயப்பன் கோயிலை பாலாற்றங்கரையில் அமைத்து வழிபடுவதால் சுபிட்சமுண்டாகும் என்று தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு - நத்தம் புறவழிச் சாலையில் ஸ்ரீஐயப்ப சேவா அறக்கட்டளை மூலம் ஐயப்பனுக்கு கோயில் அமைக்க கடந்த 1997 -ஆம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன. 

2011 ஜூன் 3-ஆம் தேதியன்று ஐயப்ப சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அன்றுமுதல் சடாட்சர முறையில் பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது.

இக்கோயிலில் பால விநாயகர், பால முருகன், குருவாயூரப்பன், விஷ்ணு, துர்க்கை சந்நிதிகளும் உள்ளன. முதியோர், சபரிமலைக்கு செல்லமுடியாதவர்கள் விரதமிருந்து, இக்கோயிலுக்கு இருமுடி சுமந்து வந்து நெய் அபிஷேகம் செய்து வழிப்பட்டுச் செல்கின்றனர். 

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், துபை, இத்தாலி,  சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்களும் இங்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.

இவ்வாண்டு கார்த்திகை மாதம் முதல் தேதியன்று (நவம்பர்-16) ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.  

இந்நிலையில், டிசம்பர் 14-ஆம் தேதி முதல் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா தொடங்குகிறது. இதற்கான கலசபூஜை டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறும்.  

17-ஆம் தேதி 108 சங்காபிஷேகம், 18 -ஆம் தேதி குத்துவிளக்கு பூஜை, 19- ஆம் தேதி லட்சார்ச்சனை, 20- ஆம் தேதி ஐயப்பன் கோயிலில் இருந்து யானை மீது ஊர்வலமாக உற்சவர் எழுந்தருள்வார். செண்டை மேளம், வானவேடிக்கைகளுடன் ஸ்ரீகோதண்டராமர் திருக்குளத்தில் ஆராட்டுவிழா நடைபெறும்.  

சபரிமலையில் நடைபெறுவது போன்று ஒவ்வொரு ஆண்டும் விஷுக்கனி, பங்குனி உத்திரம், மகரஜோதி வழிபாடுகள் விமரிசையாக நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பு. 

சபரிமலைக்குச் செல்லும் யாத்ரிகர்களுக்கும் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பக்தர்கள் விருப்பப்படி இக்கோயிலில் 18-ஆம் படி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்களிக்கத் தவறாதீா்கள்!

SCROLL FOR NEXT