வெள்ளிமணி

காசி க்ஷேத்திரம்: கங்காதேவி ஈன்றெடுத்த திருமகன்

21st Aug 2020 06:00 AM | - தேவகி முத்தையா 

ADVERTISEMENT

 

காசிக்கு நிகரான க்ஷேத்திரமுமில்லை; கங்கைக்கு நிகரான நதியுமில்லை என்பார்கள். பாரத நாட்டில் எத்தனையோ நதிகள் உற்பத்தியாகி உருண்டோடுகின்றன. அவற்றுள் ஸப்த புண்ணிய நதிகள் என்று நாம் கூறுவது கங்கா, யமுனா, சரஸ்வதி, காவிரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, கோதாவரி ஆகியவை. இவற்றுள் தலையாயது கங்கா. கங்கையில் மூழ்கி எழுந்தாலே நமது அத்தனை பாவங்களும் அகன்று போகும். மானிடர் அனைவரது பாவத்தையும் தான் வாங்கிக் கொண்டு தனது புனிதம் மட்டும் சிறிதும் மாறாமல் என்றும் ஜீவநதியாகத்தான் கங்கை பாரத பூமியில் புரண்டோடுகிறாள். காசி மஹா úக்ஷத்திரத்திற்குச் சென்றால், அங்கு நிகழ்வன கண்டால் இது நமக்குப்புரியும்.

காசியில் தீர்த்தமாடும் கட்டங்கள் "காட்' என்பன 64 ஆகும் . இதில் மணிகர்ணிகா கட்டத்துக்குச் சென்றால், அந்தத் துறையில் மரணம் அடைந்தவர்களின் பூத உடல்கள் அக்கினி மூட்டப்பட்டு முக்கால் வீதம் ஏன் அரை வீதம் மட்டும் எரிந்த நிலையில் கங்கையில் தள்ளப்படுகின்றன. எத்தனையோ உடல்கள் தள்ளப்பெற்றும் கங்கையில் சிறிதும் துர்நாற்றம் வீசுவதில்லை. காசியில் பிணம் நாறாது, பூ மணக்காது என்பார்கள்.

கங்கையின் நீரை கலசங்களில் அடைத்து பல ஆண்டுகள் வரை வைத்திருந்தாலும் அந்நீர் கெடுவதில்லை. விஞ்ஞானிகள் இதற்குக் காரணம் கங்கையில் ஒரு வித பாசி விளைவதாகவும், இந்தப் பாசி நதியில் கலக்கும் அத்தனை கழிவுகளையும் அப்புறப்படுத்தி நீரைத் தூய்மையாக வைத்திருக்கும் சக்தி கொண்டது என்றும் கூறுகிறார்கள். "கோடானு கோடி மக்களின் பாவங்களைச் சுமந்தாலும் தனது தூய்மை மட்டும் சிறிதும் மாறாத கங்கை எந்தப் புனிதப் பெற்றோரின் மகளோ?'

ADVERTISEMENT

எனும் கேள்வி என்னுள் எழுந்து என்னை வியப்பில் ஆழ்த்தியது.

இமயமலையில் உதித்த கங்கை பெரும் இறுமாப்புடன் கரை புரண்டோடிக் கொண்டிருக்கிறாள் . 100 அஸ்வமேத யாகங்களை நடத்தினால் இந்திரப் பதவி கிடைக்கும் என்பதால் பகீரதன் முன்னோர்கள் அஸ்வமேத யாகங்களை நடத்துகிறார்கள். இந்த யாகத்தை நிறைவு பெறாமல் கெடுப்பதற்காக அஸ்வத்தை (குதிரை) கபில மகரிஷியிடம் கொண்டு சென்று பாதாளத்தில் கட்டி வைக்கிறார்கள் (கபில மகரிஷியின் இருப்பிடமான பாதாளம் தான் தற்போதைய கலிஃபோர்னியா மாகாணம் என்பதனை இங்குக் குறிப்பிட விழைகிறேன்). சத புத்திரர்கள் பேரரான பகீரதனின் முன்னோர்களை உயிர்ப்பிக்க வேண்டும்; அதற்குக் கங்கையை கொண்டு வரவேண்டும் என்று பகீரதன் சிவபெருமானை எண்ணி கடும் தவம் புரிகிறான். கங்கையை ஆகாயத்திலிருந்து நேரடியாக பூமிக்கு வரவழைத்தால் அவளது வேகத்தைப் பூமி தாங்க முடியாது என்பதால் சிவபெருமான் அவளைத் தனது தலையில் வாங்கி வேகம் குறைத்து பூமியில் பாய விடுகிறார். அவள் பூமியில் பாய்ந்தோடும் போது ஜன்னு முனிவர் யாகம் வளர்த்துக் கொண்டிருக்க அவளது வேகம் தனது யாகத்தைக் கெடுத்து விடும் என்று அஞ்சி கங்கையை அவர் குடித்து விடுகின்றார்.

பகீரதன், தான் இத்தனை பிரயத்தனம் செய்து கொண்டு வந்த கங்கையை மீண்டும் புவியோர்க்குத் தர வேண்டும் என்று பிரார்த்திக்க, ஜன்னு முனிவர் கங்கையைத் தனது வலது காதிலிருந்து வெளியே பாயச் செய்கிறார். இதனால் கங்கைக்கு ஜானவி (ஜன்னுவின் மகள்) என்ற பெயரும் உண்டு. நம் வலது காதில் கங்கை இருப்பதாக நம்பிக்கை இன்றும் இருப்பதால்தான் பூஜை, ஹோமம் ஆகியன செய்யும் போது தும்மல், கொட்டாவி வந்துவிட்டால் அந்த அசுத்தம் நீங்க, பூஜை செய்வோர் வலது காதைத் தொட்டுக் கொள்ளும் பழக்கம் உண்டு. அதில் இருக்கும் கங்கை நமக்குப் புனிதம் தந்து விட்டதாகப் பொருள்/ ஐதீகம் ஆகும்.

கங்காதேவி ஈன்றெடுத்த திருமகன்தான் பாண்டவர்களும் கௌரவர்களும், "பிதாமகர்' என்று பெரும் மரியாதையுடன் அழைத்த "பீஷ்மாச்சாரியார்' ஆவார். கங்கையின் மைந்தன் என்பதால் காங்கேயன் என்றும் இவருக்குப் பெயருண்டு. தன் தந்தைக்காகத் தான் கடும் பிரம்மச்சர்யம் பூண்ட உத்தமர். ஆன்மிக உலகிற்கு தனது மரண நேரத்தைத் தானே தேர்ந்தெடுக்கக் கூடிய வரம் பெற்றவர் என்று பலச் சிறப்புகளை உடைய பீஷ்மரைப் பெற்ற தாய் கங்காதேவி.

காசியில் தண்டம், முண்டம், பிண்டம் ஆகிய மூன்றும் விசேஷமாக செய்யப் பெற வேண்டியவை . கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் முண்டம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் காசியில் விஸ்வநாதருக்குத் தண்டமிட வேண்டும். இறுதியாக கயாவில் பித்ருக்களின் பொருட்டு பிண்டம் இட வேண்டும். கயாவில் உள்ள வடவால மரத்தின் அடியில் திருமாலின் பாதத்தில் போடப்படுகின்ற பிண்டத்தால் பித்ருக்கள் உய்தி பெறுகிறார்கள். காசியில் இறந்த ஆன்மாக்களை அம்பிகை தன் மடியில் கிடத்தி, இளைப்பாற்றி விஸ்வேஸ்வரர் பிரணவத்தை அவர்களது காதுகளில் உபதேசிப்பார் என்பது வரலாறு. மணி கர்ணிகா துறையில்தான் இறந்தவர்களின் காதில் பிரணவ மந்திரம் உபதேசிக்கப் பெறுகின்றது. மணிப்பிரவாளம் என்பது மந்திரம், கர்ணிகை என்பது காது, இதன் காரணமாகவே இந்தத் துறைக்கு மணி கர்ணிகா என்று பெயர்.

எத்தனையோ மாதவம் புரிந்தவர்கள் கங்கைக் கரையில் காசியில் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவளது புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வழியில்தான் இன்று காசி செழித்துக் கொண்டிருக்கிறது.

úக்ஷத்திரம் பற்றிப் பலர் பாடுகிறார்கள், எழுதுகிறார்கள். சேது பந்தனத்தில் அணிலின் பங்கு என்பது பெரிது. அந்த அணில் மீது படிந்த மணலில் ஒரு துளி என்பதுதான் எனக்குப் பொருத்தும். எனக்கு எப்பொழுதும் தாமரை, கிளி, கங்கை என்ற மூன்றும் அதிக பிரியம்.

ரிஷிகேஷத்தில் கங்கைக்குள் கால் பதித்த வேளையை என்னால் மறக்க இயலாது. காசியில் என் கணவர் அன்புப் பெற்றோர்களின் அஸ்தியைக் கரைக்கச் சென்றதும், மீண்டும் சில ஆண்டுகளுக்குப் பின், தங்க அன்னபூரணியைச் தரிசிக்கச் சென்றதும் என் நினைவில் நீங்காத இடம் பெற்ற சம்பவங்கள். அந்த நினைவுகளை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு (சுமார் 13 ஆண்டுகள்) மீண்டும் புத்துயிருடன் பிறக்கச் செய்திருக்கிறார் விஸ்வேஸ்வரர். அதற்குக் காரணம் நான் வணங்கும் பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியும், வாசகர்களின் அன்பு கலந்த ஆதரவும்தான்.

இந்த அரிய வாய்ப்பினை நல்கிய காசி விஸ்வேஸ்வரருக்கும், அன்னபூரணிக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, ஆதி சங்கர பகவத் பாதாளின் செளந்தர்ய லஹரியில் உள்ள பாடல் ஒன்றைக் கூறி முடித்துக் கொள்கின்றேன்.

செளந்தர்ய லஹரியின் 54 -ஆவது ஸ்லோகம்:
"பவித்ரீ கர்த்தும்ந: பசுபதி பராதீன ஹ்ருதயே
தயாமித்ரைர் நேத்ரை ரருண தவல ஸ்யாமருசிபி
நத: சோணோ கங்கா தபண தனயேதி துருவமும்
த்ராயாணாம் தீர்த்தானா முபநயஸி ஸம்பேத மநகம்...'

"பசுபதிக்கு நிகரான கருணை உள்ளம் கொண்டவளே, தயைக்கு இருப்பிடமாகத் திகழும் உன் கண்கள் சிவப்பு, வெளுப்பு, கருப்பு என்ற வர்ணங்களைக் கொண்டவையாக உள்ளன. மேற்கு நோக்கிச் செல்லும் சிவந்த நீரினை சோண பத்ரா ஆறு (சரஸ்வதி) வெளுப்பான கங்கை மற்றும் காயத்ரியான கறுப்பு நிறம் கொண்ட யமுனையும் சங்கமிப்பது போல் இருப்பதால் உனது கண்களே எங்களது பாவங்கள் அனைத்தையும் போக்கிப் புனிதமாக்க வல்லவை' என்று கூறுகிறார்.

அன்னையின் நயன தீûக்ஷயில் தம் பாவங்கள் அனைத்தும் நீங்கி நாம் உயர்வு பெறுவோமாக!

(நிறைவு)
 

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT