வெள்ளிமணி

தேவன் அபலை ரூத்தின் கண்ணீரைக் கண்டார்

21st Aug 2020 06:00 AM | -எம்.ஜி. நிர்மலா

ADVERTISEMENT

 

பட்ட காலிலே படும் என்பர். வறுமை, நோய், ஆதரவற்ற நிலை, உறவினரை சாவில் பறி கொடுத்தல் போன்ற துன்பங்கள் ஒருவரின் உடலையும், ஆன்மாவையும் பாதிக்கும். தாங்கமுடியாத வேதனையையும் கண்ணீரையும் தரும். எல்லார் வாழ்விலும் இத்தகையக் கொடுமையைக் கடந்து போகவேண்டும். தெய்வத்தை நம்பி சரண் புகுவோரை தேவன் கைவிடுவதில்லை. பெண்ணாகப் பிறந்து இத்துன்பங்களை தனியே கடந்தால் மிக வேதனையையும், அனுபவிக்க வேண்டும்.
வேதாகமத்தில் யாரும் பட்டிராத துன்பத்தை அடைந்த வரலாறு "ரூத்' என்னும் கைம்பெண்ணுக்கு உண்டு. ரூத்தின் சரித்திரம் படிப்போர் மனதுருகி அழுதுவிடுவர். இயேசு பிறப்பதற்கு நானூறு ஆண்டு
களுக்கு முன்பு யூதேயா நாட்டில் பெத்லஹேம் நகரில் வாழ்ந்த பெண் நகோமி என்பவள். அந்நாள்களில் கொடிய பஞ்சம் வந்தது. பஞ்சத்திலிருந்து தப்பிக்க பக்கத்து நாடான மாபிய மோவாப்பிய தேசத்திற்கு நகோமி தம் கணவருடன் சென்றாள். பத்து ஆண்டுகள் கணவருடன் வாழ்ந்தாள். யாரும் கண்டிராத துன்பத்தை நகோமி எதிர்கொண்டாள். 
தனது இரண்டு ஆண்பிள்ளைகளுக்கும் மோவாப்பிய கன்னிப்பெண்களான ஒர்பாள், ரூத் இருவரையும் திருமணம் முடித்து வைத்தாள். தொடர்ந்து வந்த துன்பத்தால் நகோமியின் கணவர் இறந்து போனார். பின்னர் இரு மகன்களும் இறந்துபோனார்கள். நகோமியும்,  ஒர்பாளும், ரூத்தும் தனித்து காய்ந்த மரம் போல் ஆதரவின்றி நின்றனர். (ரூத்தின் சரித்திரம் 1:1-5) 
நகோமி தன் சொந்த ஊருக்குத் திரும்பிட நினைத்தாள். எனவே விதவைகளான மருமகள்களைப் பார்த்து ""மக்களே... என் பிரிய மருமகள்களே... நான் என் ஊரான பெத்லஹேமுக்கு திரும்பிப் போய்விட விரும்புகின்றேன். நீங்கள் அவரவர் தாய் வீட்டிற்குப் போய்விடுங்கள்'' என்று சொல்லி முத்தமிட்டு அழுகையுடன் அனுப்பினாள்.
முதல் மருமகள் ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டு விட்டு, அழுதுகொண்டே சென்றுவிட்டாள். இளையவள் ரூத்தோ போக மறுத்து ""உம்மை விட்டுப் பிரிய மாட்டேன். நீர் மரணமடையும் ஊரில் உன்னோடே மரிப்பேன். மரணம் மட்டுமே நம்மைப் பிரிக்கும். உமது ஊர் எனது ஊர்; உம் உறவினர் என் உறவினர்; உம் தெய்வம் என் தெய்வம்'' என்றாள். ரூத்தின் அழுகையையும், பரிவைவும், தெய்வபக்தியையும், உறுதியையும் கண்டு உள்ளம் நெகிழ்ந்த நகோமி மோவாப்பிய மருமகளான ரூத்தை தன்னுடன் பெத்லஹேமுக்கு அழைத்துப் போனாள். 
அங்கு ஊரார் இவர்களைப் பார்த்து வியந்து ""நகோமி... நீதானே?'' என விசாரித்தனர். ""நகோமி என்றால் மதுரம் (இனிப்பு) என்று பொருள்படும். என்னை "மாராள்' (கசப்பு) என அழையுங்கள். எல்லாம் பறிகொடுத்து விட்டுத் திரும்பி ஏழையாய் வறுமையில் வந்துள்ளேன்'' என்றாள்.
வாற்கோதுமை அறுவடைக் காலம். வீடோ பாழடைந்த வீடு. சாப்பிட ஒன்றுமில்லை. நகோமி தன் மருமகளை அழைத்து ""நீ 
அறுவடை நிலத்தில் சிந்தி விழுந்த கோதுமை தானியங்களைச் சேகரித்து எடுத்து வா'' என அனுப்பினாள். மாமியார் சொல்படி போவாஸ் என்னும் செல்வந்தரின் நிலத்தில் ரூத் தானியங்களைச் 
சேகரித்தாள்.
போவாஸ் ரூத்தைப் பார்த்து ""இது யார் வீட்டு மகள்? வேற்று நாட்டு பெண் போல் தெரிகிறாள்'' என்றார். அங்கிருந்தவர்கள் ரூத்தின் பரிதாப நிலையை எடுத்துக் கூறினர். பின்னர் போவாஸ் ""அவளை அதட்டாதீர்கள்... தானியங்களைப் பெருக்கிக் கொள்ளட்டும்'' என்றார். 
சேகரித்த தானியம் ஒரு மரக்கால் ஆயிற்று. சேர்த்த தானியத்தைத் தன் மாமியிடம் கொண்டு வந்து கொடுத்தாள். போவாஸ் சாப்பிடக் கொடுத்த மிச்ச உணவையும் தந்து, தான் போவாஸ் நிலத்தில் கோதுமையை சேகரித்ததையும், போவாஸின் கருணையையும் கூறினாள். 
நகோமி ரூத்திடம் ""அவர் நம் உறவினர். உறவில்லா நமக்கு வாரிசு
தாரர். நல்லது இன்று கோதுமை தூற்றும் நாள். நீ நன்கு குளித்து, எண்ணெய் பூசி, நல்ல ஆடையை உடுத்திக்கொண்டு தானிய களத்தில் மறைந்திரு. போவாஸ் மிக மகிழ்வுடன் இருப்பார். அவர் இரவு உண்டு பருகி களத்தில் படுத்திருப்பார். நீ போய் அவர் போர்வையை விலக்கி போவாஸின் பாதம் அருகே படுத்துக் கொள்'' என்று கூறி அனுப்பினாள். 
ரூத் அவ்வாறே செய்ய, போவாஸ் தன் பாதத்தில் படுத்திருக்கும் ரூத்தைக் கண்டு மிகவும் மன
மிரங்கினார். ""பெண்ணே... மிகவும் குணசாலியான பெண் நீ. நான் உன் உறவினன். என்னைப் பார்க்கிலும் மேலான ஓர் உறவினர் உண்டு. அவரிடம் பேசி உன்னை என் மனைவியாக்கிக் கொள்வேன்'' என்றார். 
அவ்வாறே நெருங்கிய உறவினரின் அனுமதி பெற்று, ரூத்தைத் தன் மனைவியாக்கிக் கொண்டார். நகோமியின் நிலம் மீண்டது. ரூத் ஓர் ஆண் பிள்ளையைப் பெற்று தன் வம்சம் நிலைக்கச் செய்தாள். இந்த ரூத் தாவீது ராஜாவின் பாட்டியாவார். இவ்வம்சத்தில் இயேசு பாலகனாய் பிறந்தார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT