வெள்ளிமணி

செவி சாய்க்கும் சாமி!

21st Aug 2020 06:00 AM | -எஸ். எஸ். சீதாராமன்

ADVERTISEMENT

 

வி = இதற்கு மேல் இல்லை; நாயகர் = தலைவர். "விநாயகர்' அதாவது இவர் தான் அனைவருக்கும் தலைவர் என்று பொருள். அதனால் தான் இவரை ‘முழுமுதற்கடவுள்' என்றும், எல்லா கணங்களுக்கும் அதிபதி என்பதால் ‘கணபதி' என்றும் அழைக்கப்படுகிறார். நீ அவனை பிடித்தால் அவன் உன்னை ஆசையுடன் பிடிப்பான்; எனவே "தும்பிக்கையானிடம் நம்பிக்கை வை' என்றனர். 

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்ற முதுமொழியினைப்போல்; விநாயகரின் குறும்பு பல தெளிவான செயல்களை விளங்க வைத்துள்ளது. 

பிரணவ மந்திரத்தில் பிரம்மனுடன் விளையாடினாலும்; அந்த பிரணவ மந்திரத்தின் சிறப்பினை உலகிற்கு தெரியப்படுத்திய பெருமை விக்னேஸ்வரனையே சேரும். அதுபோல் மாம்பழ விளையாட்டில் நீயா நானா போட்டியில் ஆணவமும், அகம்பாவமும் வெல்ல முடியாது; பணிவாய் தாய் தந்தையை வணங்கினால் அனைத்துப் பேற்றினையும் அடையலாம் என்ற உட்கருத்தை தெளிவாகக் கூறியவர். 

ADVERTISEMENT

நமக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் "ஈஸ்வரா இது என்ன திருவிளையாடல்?' என 
பரமசிவனை வழிபடுவோரும், "நாராயணா இது என்ன சோதனை?' என நாராயணனை வழிபடுவோரும்; "தாயே எனக்கு கருணைபுரிவாயா?' என அம்மனை வழிபடுவோரும் பலவாராகக் கூறி வணங்குவார்கள். இந்த கடவுளர்கள் அனைவரும் நிதானமாக ஆழ்ந்து சிந்தித்து; பலவகையிலும் தகுதிப் பரிசோதனை செய்து பின் நமக்கு அருள்புரிவார்கள். ஆனால் சற்று வித்தியாசமானவர் நம் விநாயகர். பெரிய வழிபாடெல்லாம் செய்ய வேண்டாம்; சாலை ஓரத்தில் அமர்ந்துள்ள விநாயகரைக்கூட போகிறபோக்கில் ஒரு சதுர்தேங்காயை உடைத்து விட்டு "என்னால் முடியவில்லை நீ பார்த்துக் கொள்' என சரணாகதி அடைந்தால் நம் கோரிக்கையை எளிதில் தீர்த்துவைப்பார்.

விக்ன விநாயகனுக்கு தனியாக கோயில்கள் பல ஊர்களில் இருந்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் மார்க்கத்தில் கண்டியூருக்கு அருகில் "திருவேதிகுடி' என்ற ஊரில்; சம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்ற சிவத்தலம் ஒன்றுள்ளது. முற்காலத்தில் இவ்வூரை "சதுர்வேதி மங்கலம்' எனவும் அழைத்தனர். வேதநாயகன் பிரும்மன் இங்குள்ள ஈசனை வணங்கி வழிபட்டதால் இவ்வூருக்கு இப்பெயர் வரக்காரணமானது. அங்குள்ள மகா மண்டபத்தில் "வேதம் கேட்ட விநாயகர்' தன் தலையை வலதுபுறம் சாய்த்து, வலதுகாலை மடித்து, இடது காலை உயரமாக வைத்துக் கொண்டு ஏகாக்ர சித்தத்துடன் (ஆழ்நிலை தியானம்) கண்மூடிய நிலையில் அமர்ந்து அருளாட்சி செய்கிறார். ருக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை செவி சாய்த்து ஊன்றிக் கேட்கிறார் என்பதாக ஐதீகம். அற்புதமான தோற்றம். 

இதுபோல், திருச்சி லால்குடி மார்க்கத்தில் காவிரியின் கிளை நதியான கொள்ளிடத்தின் வடகரையில் அன்பில் என்ற சிவத்தலம் உள்ளது. ஊர் பெயர் "அன்பில்' என்றிருந்தாலும் இக்கோயிலை "ஆலந்துறை' என்றே அழைக்கின்றனர். சம்பந்தர் இவ்வூர் இறையனாரை தரிசிக்க வந்தபோது கரை புரண்டோடிய வெள்ளத்தால் தென்கரையிலிருந்தே பதிகம் பாடினார். இதனை கேட்ட ஈஸ்வரன், தன் மைந்தன் கணபதியையும் செவி சாய்த்து கேட்க அருளினார். இதனால் இவருக்கு "தேவார விநாயகர்' என்றும், தன் தலையை வலதுபுறம் சாய்த்து கேட்டதால் "செவி சாய்த்த விநாயகர்' என்ற பெயரைப் பெற்றதாக இத்தலவரலாறு கூறுகிறது. 

மேற்படி இருதல வரலாற்றின்படி, வேதம் மற்றும் தேவாரம் கேட்பதற்காக அவர் செவி சாய்த்ததாலும், என்றென்றும் நமது வேண்டுகோள்களையும் செவிசாய்த்து கேட்டு குறைகளைக் களையும் கருணா மூர்த்தி ஆவார் நம் விநாயகர்.

பார்வதியின் கோபத்தைத் தணித்த சிவபெருமான், கஜானனுக்கு "கணேசன்' என்ற பெயரைச்சூட்டி தங்களின் முதல் பிள்ளையாக ஆக்கிக்கொண்ட நாள் தமிழ் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி ஆகும். இம்மாதம் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) "விநாயகர் சதுர்த்தி' திருநாள் அமைகிறது. அந்நாளில் இல்லத்தில் இருந்தபடியே இறையருளை இறைஞ்சுவோமாக!

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT