வெள்ளிமணி

அண்ணன் கணேசனும் அறுபடை முருகனும்

21st Aug 2020 06:00 AM | -இரா.இரகுநாதன்

ADVERTISEMENT

 

கெளசிகர், அத்திரி முனிவர், விசுவாமித்திரர், கௌதமர், பரத்வாஜர், வசிஷ்டர், காஷ்யபர் ஆகிய ஏழு முனிவர்களும் தற்போது சேத்துப்பட்டு பாலத்தின் அருகில் இருந்து எழும்பூர் வரை பரவியிருந்த தடாகக் கரையில் நின்று தவம் செய்ய அங்கேயே திருமால் காட்சி தந்தார். ஏழு முனிவர்களுக்கு காட்சி தந்த ஊர் "ஏழுமுனி ஊர்' என்று அழைக்கப்பட்டு, அது மருவி "எழும்பூர்' ஆனது. பெருமாள் மக்களைக் காப்பதற்காக சகல செல்வங்களும் தன்னிடம் கொண்ட விநாயகரை "செல்வ விநாயகர்' என்ற பெயரோடு இங்கு அமர்த்தினார் எனப்படுகிறது.

கடலில் இருந்து எழும் சூரியன் முதலில் தொட்டது கடற்கரையை ஒட்டி இருக்கக் கூடிய இந்த இடம் என்பதனால் "சூரியன் எழும்-ஊர்' என்ற பெயர் "எழும்பூர்' ஆனது என்றும் கூறுவர்.

இன்றும் திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட அர்த்தநாரீஸ்வரருக்கு "எழுமீஸ்வரர்' என்று பெயர் உண்டு. "புழல் கோட்டத்து எழும்பூர் துடர்முனிநாடு' என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன.

ADVERTISEMENT

எழும்பூரின் ஏரிக்கரையில் இன்றைய பூந்தமல்லி நெடுஞ்சாலையை எழும்பூருடன் இணைக்கும் கெங்குரெட்டி சாலையும், எதிரில் கெங்கு ரெட்டி சந்து தெருவும் சேருமிடத்தில் எழும்பூர் செல்வவிநாயகர் கோயில் அமைந்திருக்கிறது.

எழும்பூர் ரயில்பாதை அமைந்தபோது ரயில் பாதையைக் கடந்து புரசைவாக்கம் மற்றும் இதர பகுதிகளுக்குச் செல்வோர் தங்கள் நன்மைக்காகவும், வியாபார அபிவிருத்திக்காகவும் விநாயகரை வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டனர்.

நாளடைவில் புதியதாக மேம்பாலம் அமைத்து பேருந்து போக்குவரத்து தொடங்க, இந்தப்பாதை அதிகம் பயன்படுத்தாமல் போனாலும் பலன் கண்ட பக்தர்கள் பல்கிப் பெருகி, தரிசனம் செய்வதை பரம்பரையாகத் தவறாமல் கடைப்பிடிக்கின்றனர்.

தற்போது உள்ள திருக்கோயில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு கருவறையில் செல்வ விநாயகர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். நவகிரகங்கள் இருக்க வேண்டிய இடத்தைவிட்டு அக்னிமூலையில் அவைகளை நிறுவச் செய்து நவக்கிரக தோஷங்கள் நீங்க பக்தர்களுக்கு வேண்டியதைச் செய்கிறார். வடக்குப் புறம் பார்த்து இருக்க வேண்டிய துர்க்கையை கிழக்கு புறம் நோக்கி எழுந்தருளச் செய்து பக்தர்களின் அல்லல்களை நீக்குகிறார்.
ஒருநேரம் பக்தர்கள் முருக வழிபாட்டுக்காக ஏற்பாடு செய்ய வேண்டும் என விநாயகரிடமே வேண்டினர். விநாயகர் அர்ச்சகர் கனவில் தோன்றி அறுபடை வீட்டு குமாரர்களும் இங்கு எழுந்தருளப் போகிறார்கள் என கூறியுள்ளார். மறுநாள் அறுபடை வீட்டுக்கும் செல்லும் பக்தர்கள் தாங்களாகவே செப்பு விக்ரகங்களுடன் வந்து நிற்க அறுபடை வீட்டு முருகனும் இத்திருக்கோயிலில் பிரதிஷ்டை ஆனார்கள். "கெங்கு ரெட்டி ரோடு அறுபடைவீடு முருகன் குடிகொண்ட ஸ்ரீ செல்வ விநாயகர்' என்ற பெயரே வழக்கத்திலிருந்துள்ளது. அறுபடை வீட்டு முருகனும் செப்பு விக்ரக வடிவில் இங்கு விநாயகருக்கு நேர் பின்புறம் ஒரே சந்நிதியில் எழுந்தருளியுள்ளது சிறப்பாகும் .
செல்வவிநாயகர் கோயிலில் அமையவேண்டிய பரிவார மூர்த்தங்கள் அந்தந்த இடங்களில் சிலா மற்றும் செப்பு விக்ரகங்களில் மூலவர்களாக அமைந்துள்ளது சிறப்பாகும்.
தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சந்நிதிகள் திறந்திருக்கும்.
இம்மாதம் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று இல்லாவிட்டாலும் நேரம் கிடைக்கும்போதாவது சகல நலம் தரும் செல்வ விநாயகரையும், அறுபடைவீட்டு முருகனையும் ஒருமுறை சென்று ஒருசேர தரிசனம் செய்து வாருங்களேன்..!
மேலும் விவரங்களுக்கு: 9842416402; 9444307299.

 

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT