வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 107

டாக்டா் சுதா சேஷய்யன்


ராமாயணத்தையும் நம்மாழ்வார் அவதாரத்தையும் தொடர்புபடுத்தி, இங்கொரு செவிவழிக் கதையுண்டு. சீதாபிராட்டியைக் கானகம் அனுப்பியதற்குப் பரிகாரமாகப் பெருமாள் 16 ஆண்டுகள் அசையாபிம்பமாக இருக்கவேண்டி வந்தது. லக்ஷ்மணன், ஒருமுறை ராமரின் சொல்லை மீறிவிட்டார். அதற்காக, ஆதிசேஷனும் (ஆதிசேஷன், லக்ஷ்மணனாகப் பிறந்தார் என்பதை நாமறிவோம்) மரமாகப் பிறக்க வேண்டிவந்தது. ஆதிசேஷன் நிழலிலேயே இருந்து பழக்கப்பட்டுவிட்ட பெருமாள், இங்கும் அதனையே நடைமுறைப்படுத்தினார். ஆதிசேஷன் புளியமரமாக வந்து காத்திருக்க, காரிமாறனாகத் தோன்றிய பெருமாள், 16 ஆண்டுகள் அசையாதிருப்பதற்காகக் குழந்தைப் பருவத்திலேயே மெல்லத் தவழ்ந்து, புளியமரப் பொந்துக்குள் புகுந்துகொண்டார். 16 ஆண்டுகள் அசையா வடிவமாக அப்பொந்துக்குள் வாசம் செய்தார். 
வடதேச யாத்திரை சென்ற மதுரகவி, ஒளியின் கீற்றால் ஈர்க்கப்பட்டு, இங்குவந்து வினா எழுப்பியபோது, நம்மாழ்வாராக வெளிப்பட்டார். 
திருக்குருகூர் புளியமரம், "புளியாயிரம் பொந்தாயிரம்' என்னும் சொலவடையோடும், பற்பல பொந்துகளோடும் காட்சியளிக்கிறது. 
ஸ்ரீராமர் மாத்திரம், புளியமரத்தடிப் பொந்தில் வாசம் செய்தால் போதுமா? எமக்கும் அப்பேறு வேண்டாமா என்று பிற திவ்வியத் தலங்களின் பெருமாள்களுக்கு ஏக்கம் பிறந்ததாம். ஆகவே, அவர்கள் ஒவ்வொருவராக இங்கு வந்து புளியமரத்தடி வாசம் செய்தனராம். அதுமட்டுமில்லை, புளியமரத்தின் கிளைகளிலும் இலைகளிலும் அமர்ந்து கொண்டு, நம்மாழ்வாரிடம் "என்னைப் பாடுங்கள், என்னைப் பாடுங்கள்' என்று வேண்டினராம்.
நம்மாழ்வார், புளியமரத்தடியை விட்டு வேறெங்கும் பெயர்ந்தாரில்லை. ஆயினும், பற்பல திவ்விய தேசங்களையும், அந்தந்தத் தலத்துப் பெருமாள்களையும் மங்களாசாசனம் செய்துள்ளார். அந்தப் பெருமாள்களெல்லாம் இவ்வாறு வந்து காத்திருந்தனர் என்று கூறும்போது, அந்த பக்தியின் பெருமையை என்னென்பது! 
புளியமரத்தில், பெருமாளே பிரம்மச்சர்ய யோகத்தில் நிலைத்திருப்பதாக ஐதீகம். பெருமாளைத் தேடி ஸ்ரீதேவி வர, பிரம்மச்சர்ய யோகம் என்பதால், தேவியை மகிழமாலையாக மாறச் சொல்லிப் பெருமாள் ஏற்றுக்கொண்டாராம். 
ஆதிப்பிரான் சந்நிதிக்குச் சிறிது தள்ளி, ஆழ்வாருக்குத் தனிச் சந்நிதி. விமானத்தின் அளவிலும் சரி, பொலியத் தோன்றும் அழகிலும் சரி, ஆதிப்பிரான் சந்நிதியைக் காட்டிலும், ஆழ்வார் சந்நிதியே சற்று தூக்கலாக மிளிர்கிறது. என்ன இருந்தாலும், ஊருக்குப் பெயரும் புகழும் தந்தவர் ஆழ்வாரே இல்லையா! ஆழ்வார் திருநகரி என்னும் பெயர் புழக்கத்தில் வருவதற்கு முன்னர், சுமார் 700-800 ஆண்டுகளுக்கு முன்னர், பராங்குச சதுர்வேதி மங்கலம் என்றே இத்தலம் அறியப்பட்டுள்ளது. பராங்குசர் என்பதும் நம்மாழ்வாருக்கான பெயரே ஆகும். 
உயிர் ஒன்று உலகில் பிறக்கும்போது, அதற்குள் "சடம்' என்னும் வாயு புகுகிறது. உலகியலுக்குள் அவ்வுயிரை இதுவே ஆட்படுத்துகிறது. ஆயின், அஞ்ஞானத்தை உண்டாக்கும் அந்த வாயுவைப் புகவிடாமல் தடுத்து, அதன்மீது கோபப்பட்டு, உலகியலுக்குள்ளும் அஞ்ஞானத்திற்குள்ளும் வீழாமலிருந்ததால், நம்மாழ்வாருக்குச் சடகோபர் என்று திருநாமம். மகிழ மாலையைச் சூடியதால், வகுளாபரணர் (வகுளம்=மகிழம்). திருவரங்கத்து எம்பெருமான், இவரே "நம் ஆழ்வார்' என்றழைத்ததால், இத்திருநாமமே பிரபலமானது. 
ஆழ்வார்கள் அனைவருக்கும் தலைவராகவே இவர் கருதப்பெறுகிறார். 
இதுவோ திருநகரி?
திருக்குருகூரின் பெருமைகள் ஏராளம். 
ராமாயணக் காப்பியத்தைத் தமிழில் பாடிய கம்பர், அதனைத் திருவரங்கத்தில் அரங்கேற்ற முனைந்தார்.  திருவரங்கநாதரான பெரிய பெருமாள், "நம் சடகோபனைப் பாடினாயோ?' என்று கேட்க, சடகோபரான நம்மாழ்வாரையும் திருக்குருகூரையும் "சடகோபர் அந்தாதி' என்னும் நூலில் ஏத்திப் பாடினார். இதன் பின்னர், ஆழ்வார் திருநகரியான குருகூரைக் காணவேண்டும் என்னும் ஆசையில், இத்தலத்திற்கும் கம்பர் வந்தாராம். அப்போது, ஊர் எல்லையில், வயற்காட்டில் பணிசெய்து கொண்டிருந்தோரையும் காண நேர்கிறது. நீருக்கு ஏற்றம் இறைப்போர், அங்கு வேலை செய்துகொண்டிருந்தனர். அவர்கள் பாடியது கம்பரின் செவிகளில் பாய்ந்தது. 
"மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே
 தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே...' 
என்ற ஏற்றப்பாட்டைக் கேட்ட கம்பர், அசந்து போனார். ஏற்றம் இறைப்போரின் கவித்திறனும், சொல் நயமும், பொருட் செறிவும் வியப்பைத் தர, குருகூரின் கல்விப் பேரொளிக்கு முன்னர், தம்முடைய கவிப் புலமை யாவும் மின்மினிக்குச் சமானம் என்று உரைத்தாராம். 
ராமானுஜர், இத்தலத்திற்கு வருகை புரிந்தார். எட்டத்தில் வரும்போதே, பொருநை நீரும் குருகூர் காட்சியும் வசீகரிக்க, 
"இதுவோ திருநகரி ஈதோ பொருநை
இதுவோ பரமபதத்து எல்லை இதுவேதான்
வேதம் பகர்ந்திட்ட மெய்ப்பொருளின்  உட்பொருளை
ஓதும் சடகோபன் ஊர்'  
என்று களிப்போடு கூறிக்கொண்டே வந்தாராம். பரமபதத்தின் எல்லையாகவே இத்தலம் போற்றப்படுகிறது.  

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT