நபி (ஸல்) அவர்களது துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் ஒருமுறை அழுதுகொண்டிருந்தார்கள். அங்கே வந்த நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவை நோக்கி ""ஆயிஷாவே, என்ன நேர்ந்தது? ஏன் அழுகிறாய்?'' என்று
வினவினார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ""எனக்கு நரகம் நினைவுக்கு வந்துவிட்டது. நீங்கள் மறுமை நாளன்று உங்களுடைய குடும்பத்தாரை (அதாவது எங்களை) நினைவு வைப்பீர்களா, இல்லையா? என்பதின் மீது அழுகை வந்து விட்டது'' என பதிலளித்தார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் ""மூன்று வேளைகளில் யாரும் யாரையும் நினைக்க மாட்டார்கள். ஒன்று: செயல்கள் நிறுக்கப்படும் மீஜானின் போது, அவனுடைய நன்மைகள் தட்டு கனத்தால் தாழ்கிறதா, இல்லையா? என்பதை அறிந்து கொள்ளாத வரையிலும். இரண்டாவது: அவரவர் செயலேட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவிக்கப்படும் போது, அவனுடைய செயலேடு வலக்கரத்தில் கிடைக்குமா அல்லது புறமுதுகில் வைத்து இடது கரத்தில் கிடைக்குமா? என்பதைத் தெரிந்து கொள்ளாத வரையிலும். மூன்றாவதாக: சிராத்துல் முஸ்தகீம் பாலத்தில் அது நரகின் மீது நிறுவப்பட்டு அதன் மீது நலமாகக் கடந்து சென்றிடாத வரை'' என்று பதிலளித்தார்கள்.
இவ்வுலகில் நாம் உறவுக்கான பாலத்தை அமைத்து என் மனைவி, என் கணவர், என் பிள்ளைகள், எனது குடும்பம் என்று உறவுகளுக்கு பாசத்தைக் கொடுத்த அல்லாஹ்வே, மறுமையில் உறவுகளுக்குள் பாசம் இல்லாமல் ஆக்கிவிடுவான். பெற்றோர், பிள்ளை, கணவன், மனைவி ஆகியோர் ஒருவரையொருவர் மறுமையில் பார்த்தால், வேற்று மனிதரைப் பார்ப்பதைப் போல் தான் பார்த்துக் கொள்வர். இன்னும் உறவுகள் தன்னை நெருங்கி விடக்கூடாது என்று பயம் கொள்வர். அங்கே எல்லோருக்கும், அவரவரது செயலில், "யா நப்ஸி, யா நப்ஸி' தான்.
அதாவது என் நிலை இன்று அல்லாஹ்விடம் என்னவாகுமோ என்பதைக் குறித்த கவலையும், பயங்கரமும் மட்டுமே ஒவ்வொருவரிடமும் இருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர் இக்ரிமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
""மறுமை நாளன்று தந்தை தனது மகனிடம், "நான் உன்னுடைய தந்தையாக இருந்தேன் அல்லவா?' என்று கேட்பார். அதற்கு மகன் தந்தை செய்த உபகாரங்களையெல்லாம் ஒப்புக்கொள்வார். அதற்குப் பிறகு தந்தையானவர், "எனக்கு ஒரு நன்மை மட்டும் தேவையுள்ளது. அதன் காரணமாக என்னுடைய நன்மையின் தட்டு தாழ்ந்து விடக்கூடும்' என்று கூறி ஒரு நன்மையை வேண்டுவார்.
அதற்கு மகனோ, "நானே துன்பத்தில் இருக்கிறேன். என் மீது என்ன நிகழப்போகிறது என்று என் நிலையே எனக்குத் தெரியாமலிருக்கும் போது, நான் எந்த நன்மையும் கொடுக்க முடியாது' எனக் கூறி மறுத்து விடுவான்.
அதற்குப் பிறகு அம்மனிதன் தனது மனைவியிடம் சென்று அவளுக்குச் செய்த உபகாரங்களைச் சொல்லிக்காட்டி, ஒரு நன்மையை வேண்டுவான். அவளும் மறுத்துவிடுவாள்.
இதனைக் குறித்தே அல்லாஹ் குர்ஆனில், "அந்த (மறுமை) நாளில் மனிதன் மிரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும், மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும். அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (கஷ்ட) நிலையே போதுமானதாயிருக்கும்.