வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 106

14th Aug 2020 06:00 AM | டாக்டர் சுதா சேஷய்யன்

ADVERTISEMENT


ஸ்ரீபேரையாக நிலமகள் தவமிருக்க,  பங்குனிப் பெளர்ணமி நாள் ஒன்றில், பொருநையாளின் நீரோட்டத்தில், மகரமீன் வடிவிலான குண்டலங்கள் மிதப்பதைக் கண்டாள். அவற்றைக் கையிலெடுக்க, எதிரில் பெருமாளும் காட்சி தந்தார். அப்படியே அவற்றைப் பெருமாளுக்குச் சமர்ப்பித்து நாணி நின்றாள் நிலமகள். 
பூமித்தாய் மீண்டும் தன் வளங்களைப் பெற்றுப் பச்சை மேனியளாகச் செழிக்க, தனக்குக் காட்சி தந்த எழில் திருமேனியோடும் தான் சமர்ப்பித்த மகரக் குழைகளோடும் இங்கேயே நின்று நிலைபெறவேண்டுமென்று திருமாலிடம் விண்ணப்பம் வைக்க, இதன்படி "மகர நெடுங்குழைக் காதர்' என்னும் திருநாமத்தோடு எம்பெருமான் இங்கு எழுந்தருளிவிட்டார். கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தோடு வீற்றிருக்கும் இவருக்கு, "நிகரில் முகில் வண்ணன்' என்னும் இன்றமிழ்த் திருநாமமும் உண்டு. 
குழைக்காதுவல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார் என்று இரண்டு நாச்சிமார்கள். 
மானுடம் தழைப்பதற்காகப் பொங்கிப் பிரவகித்த பொருநையாள், கடவுளர்களுக்குள்ளேகூட சமாதானத் தூது பேசியிருக்கிறாள் என்று தென்திருப்பேரையின் தலபுராணக் கதை காட்டுகிறது. 
இந்தக் கதையை இன்னும் சற்று உன்னிப்பாக கவனித்தால், தலம், கோயில், கதை, புராணம் ஆகியவற்றைத் தாண்டித் தத்துவார்த்தப் பாடங்கள் பல மிளிர்வதைக் காணலாம். 
திருமகளுக்கு நிலமகளின் நிறம் கண்டு பொறாமையா? இதற்காக துர்வாசர் சாபமிட்டாரா?: இதுவொரு கதை. ஆழமான உண்மைகளையும் கருத்துகளையும் எடுத்துக்கூறுவதற்காகப் பெரியவர்கள் பயன்படுத்திய வழிமுறைதான், "கதை' என்பதாகும். 
நிறமோ வண்ணமோ வடிவமோ உருவமோ, அனைவருக்கும் ஒன்றேபோன்று இருக்கா; இருக்கவும் கூடா. செல்வம் வெண்மையாக, அதாவது, நியாய வழியில் வந்ததாக, வெண்மைத்தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். இதையே, வெண்மை மட்டுமே அழகு என்று கொண்டு, பூமியை வெளிறச் செய்தால், உணவுக்கும் உயிர்ப்புக்கும் தட்டுப்பாடு தோன்றிவிடும். ஆக, யார் யாருக்கு எது இயல்போ, எது எதற்கு எது பொருத்தமோ, அது அது அவ்வாறே இருக்கவேண்டும். 
ஒருவருக்கு இருப்பதைக் கண்டு இன்னொருவர் ஆசைப்படத் தொடங்கினால், பொருத்தமின்மை மட்டுமல்ல, சீரின்மையும் தோன்றிவிடும். 
வாழ்க்கையின் மிக எளிய பாடமான இது தொடங்கி, இன்னும் பல பாடங்கள், தென் திருப்பேரையின் கதைக்குள் பொதிந்து கிடக்கின்றன. 
மண்ணுக்கும் மானுடத்திற்கும் ஊட்டம் தந்த-தருகிற பொருநையாள், உணர்வுக்கும் உயிர்ப்புக்கும்கூட ஏராளமான ஊட்டங்களைக் கொடுத்திருக்கிறாள்.   
பொருநையாளின் போக்கோடு கிழக்கே சென்ற நாம், இப்போது மீண்டும் மேற்கு நோக்கிப் பயணிக்கிறோம் - ஆழ்வார் திருநகரி என்னும் திருக்குருகூர் அடைவதற்காக! 
நம்மாழ்வாரின் அவதாரத் தலம் என்பதால் ஆழ்வார் திருநகரி -
பண்டைய புராணங்களிலும் கம்பரின் சடகோபர் அந்தாதி என்னும் நூலிலும் திருக்குருகூர் - 
சங்குக்கு வீடுபேறு கொடுத்ததால் சங்கணித்துறை - தவிரவும், தாந்த க்ஷேத்திரம், வராஹ க்ஷேத்திரம் என்றும் பெயர் பெற்ற தலம் - ஆதிநாதராக எம்பெருமான் சேவை சாதிப்பதால் ஆதிபுரி - இவ்வாறு பற்பல பெருமைக்கும் புகழுக்கும் இருப்பிடமாக உள்ள ஆழ்வார் திருநகரியை அடைகிறோம். 
ஆதிபுரியும் ஆதிப்பிரானும்:    தான் தவம் செய்வதற்கு ஏற்ற இடம் எது என்று பிரம்மா வினவ, பொருநையாற்றங்கரை ஆதிபுரியில் தாம் ஆதிநாதராக எழுந்தருளியிருப்பதை விவரித்த எம்பெருமான், இதுவே தவத்திற்குச் சிறந்த இடம் என்றாராம். பிரம்மாவும் இங்குத் தவம் புரிந்தார். 
பிறரால் ஒதுக்கப்பட்ட தாந்தன் என்பவர், மனம் நழுவாது சற்றே எட்டத்தில், பொருநை வடகரையில் தங்கி, ஆதிநாதரை தியானித்து அருள்பெற்றார். இதனால் தாந்த க்ஷேத்திரம் என்று இத்தலம் அழைக்கப்பட்டுள்ளது. தாந்தன் தியானம் செய்த இடத்திற்கு அப்பன் கோயில் என்றும் செம்பொன் மாடத் திருக்குருகூர் என்றும் பெயர்கள். இதே போன்று, சங்கு வடிவத்தில் தோன்றி, இரவெல்லாம் கடலில் சங்காகவே வாழ்ந்து, பகலில் ஆதிநாதர் திருக்கோயில் பகுதியைச் சுற்றி வந்து வழிபட்ட சங்கனுக்கும் எம்பெருமான் அருள் பொழிந்தார். ஆகவே, இத்தலம் சங்கணித்துறையும் ஆனது. 
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமான் அருள்மிகு ஆதிநாதர். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தோடு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். நின்ற ஆதிப்பிரான் என்றும் பொலிந்து நின்ற பிரான் என்றும் நம்மாழ்வரால் பாடப்பெற்றவர். அருள்மிகு ஆதிவல்லியும் அருள்மிகு குருகூர்வல்லியும் இரண்டு தனிக்கோயில் நாச்சியார்கள். 
இவர் நம் ஆழ்வார்: திருக்குருகூர் என்னும் இத்திருத்தலம், ஆழ்வார் திருநகரி என்று பெயர் பெற்றதற்கு நம்மாழ்வாரின் அவதாரத் தலம் என்பதே காரணம். காரி என்பாருக்கும் அவர்தம் திருவாட்டி உடைய நங்கை என்பாருக்கும் மகவொன்று பிறந்தது. 
பிறந்த குழந்தை அழவில்லை, அசையவில்லை, பாலருந்தவில்லை, மூச்சுகூட விடவில்லை. ஆயினும், குழந்தை உயிருடன் இருந்தது. இயற்கைக்கு மாறாக இருந்த குழந்தைக்கு "மாறன்' என்று பெயர் சூட்டி, ஆதிப்பிரான் திருக்கோயிலில் கொண்டுவிட்டனர். 
கோயிலில் இருந்த புளியமரம் ஒன்றை நாடி, மெல்லத் தவழ்ந்து, அதன் பொந்துக்குள் புகுந்துகொண்டது அக்குழந்தை. 
பெருமாளுக்குக் குடையாகவும், பாதுகையாகவும், சிம்மாசனமாகவும் இருக்கிற ஆதிசேஷனே, இங்குப் புளியமரமாகத் தோன்றியதாக ஐதீகம். 

 (தொடரும்)  

ADVERTISEMENT
ADVERTISEMENT