புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 26

இஸ்ரேல் நாட்டில் உள்ள கலிலேயா கடல் விவிலியத்தில் முக்கிய இடமாக கருதப்படுகிறது. இது கடல் என குறிப்பிடப்பட்டாலும் கடல் அல்ல,
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 26

இயேசு தண்ணீரில் நடந்த கலிலேயா கடல் (இஸ்ரேல்)
இஸ்ரேல் நாட்டில் உள்ள கலிலேயா கடல் விவிலியத்தில் முக்கிய இடமாக கருதப்படுகிறது. இது கடல் என குறிப்பிடப்பட்டாலும் கடல் அல்ல, இது ஏரி தான். இயேசுவின் ஊழியம் இந்த கடலை சுற்றி தான் அதிகம் இருந்தன. 
இயேசு தனது சீடர்களை தேர்வு செய்தது, மலைப்பிரசங்கம் செய்தது, தண்ணீரில் நடந்து சென்றது, புயல் காற்றையும் அடக்கி அமைதியாக்கியது போன்ற விவிலிய முக்கியத்துவம் வாயந்தது இந்த கலிலேயா கடல். திபேரியக்கடல், கெனசரேத்து ஏரி என்ற வேறு 2 பெயர்களிலும் இது அழைக்கப்படுகிறது. 
இஸ்ரேல் நாட்டில் நல்ல தண்ணீர் கொண்ட ஏரிகளுள் இது மிகப் பெரிய ஏரி ஆகும். இதன் சுற்றளவு 53 கி.மீ. (33 மைல்); நீளம் சுமார் 21 கி.மீ. (13 மைல்); இதன் பரப்பளவு 166 சதுர கி.மீ.(64 சதுர மைல்). ஏரியின் மிக அதிக ஆழம் 43 மீ (141 அடி). கடல்மட்டத்திலிருந்து 214 மீட்டர் (702 அடி) தாழ்ந்துள்ள இந்த ஏரி உலகிலேயே நல்ல தண்ணீர் நீர்த்தேக்கங்களுள் மிகவும் தாழ்ந்த மட்டத்திலும், உப்புநீர் கொண்ட சாக்கடலுக்கு அடுத்தபடியாக உலக ஏரிகளுள் தாழ்ந்த மட்டத்திலுள்ள ஏரிகளுள் இரண்டாவதாகவும் உள்ளது. நீரடி ஊற்றுகளிலிருந்தும் யோர்தான் ஆற்றிலிருந்தும் இந்த ஏரிக்குத் தண்ணீர் கிடைக்கிறது.
கலிலேயக் கடல் வடக்கு இஸ்ரேலில் அமைந்துள்ளது. ஆப்பிரிக்க மற்றும் அராபிய நிலத்தட்டுகள் பிரிவதால் ஏற்பட்டுள்ள யோர்தான் பிளவுப் பள்ளத்தாக்கில் இந்த ஏரி உள்ளது. எனவே, அதில் நில நடுக்கம் ஏற்படுவது உண்டு; முற்காலத்தில் எரிமலைக் கொந்தளிப்பும் அங்கு நிகழ்ந்ததுண்டு. 
புதிய ஏற்பாட்டு நூல்களில் இந்த ஏரி கலிலேயக் கடல்"என்றும் திபேரியக் கடல்"என்றும் அழைக்கப்படுகிறது (கலிலேயக் கடல்: மத்தேயு 4:18, மாற்கு 1:16, யோவான் 6:1. திபேரியக் கடல்: யோவான் 6:1; 21:1). கெனசரேத்து ஏரி என்னும் பெயர் லூக்கா 5:1-இல் வருகிறது. மேலும், பழைய ஏற்பாட்டின் பல பகுதிகளிலும் இப்பெயர் கினரேத்துக் கடல் (Kinnereth/Chinnereth) என்றுள்ளது (எண்ணாகம் 34:11, யோசுவா 13:27). கின்னர் என்னும் எபிரேயச் சொல்லுக்கு யாழ் என்று பொருள். இந்த ஏரி யாழ் வடிவில் உள்ளதால் அப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கப்பல் சவாரி: அழகிய நீல நிறத்துடன் தோன்றும் இந்த ஏரியின் கரையில் பல பழவகை மரங்களும், வண்ண மலர்ச்செடிகளும் அமைந்து இதற்கு அழகூட்டுகின்றன. இதன் கரையில் சிறு மலைகள் இருக்கின்றன. இப்பகுதி மிகவும் செழிப்பான இடம். கண்ணைப் பறிக்கும் வண்ண மலர்களும், பசுமையான செடி கொடிகளும் பார்ப்பவர்களுக்குப் பரவசமூட்டுகின்றன. மிதமான வெப்பமுடைய நீர் இந்த ஏரியிலுள்ளதும் இதற்குக் காரணம்.
பேதுரு மீன்: இந்த ஏரியில் காணப்படும் திலாப்பியா மீனுக்கு தூய பேதுரு மீன் (St. Peter’s Fish) என்னும் சிறப்புப் பெயர் உண்டு. அமைதியே உருவான அழகிய கடல் இது. ஆனால், எர்மோன் மலையிலிருந்து வரும் குளிர்ந்த காற்று, திடீரென இதன் அலைகளைப் படைகளாகத் திரட்டி, பேரொலிகளையும் பேரலைகளையும் எழுப்பிப் புயலாக மாற்றிவிடுகிறது.
இயேசுவும் கலிலேயக் கடலும்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு பணிசெய்த காலத்திலேயே கலிலேயக் கடல் மிகவும் பேர்போன இடமாக இருந்தது. கடலோர நெடுஞ்சாலை"என்னும் பெயர்கொண்ட வணிகப் பாதை அவ்வழியே சென்று, எகிப்து நாட்டையும் வடக்கு அரசுகளையும் இணைத்தது. அந்த ஏரிக்கரையில் உரோமையர் பல நகர்களை நிறுவினர். கதாரா (Gadara), ஹிப்போஸ் (Hippos), திபேரியாஸ் (Tiberias) என்னும் அந்நகரங்களில் வாணிகம் செழித்தது. 
இயேசு பலமுறை இக்கடலுக்கு வந்துள்ளார். இந்த ஏரிக்கரையில் மீனவர் குடியிருப்புகள் பல இருந்தன. அங்கு வாணிகம் சிறப்பாக நடைபெற்றது. இயேசு தமது முதல் சீடர்களை அழைத்தபோது, இக்கடலில்தான் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் (மத்தேயு 4:18-22; மாற்கு 1:14-20; லூக்கா 5:1-11). இவ்வாறு, மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்சென்றவர்கள் சீடர்கள் பேதுருவும் அவர்தம் உடன்பிறப்பு அந்திரேயாவும், மற்றும் யோவான், அவர்தம் உடன்பிறப்பு யாக்கோபு என்பவரும் ஆவர்.
- ஜெபலின் ஜான்
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com