நலம் தரும் அஸ்திர ஹோமம் - சோடச லட்சுமி யாகம்

தெய்வ வழிபாட்டில் அந்தந்த தெய்வங்களின் படைக்கலன்களும் முக்கியத்துவம் பெறுவதுடன் வழிபடப்படுகின்றன.சிலப்பதிகாரத்தில் வாள்களிலும் வீரர்களின் தோள்களிலும் கொற்றவை
நலம் தரும் அஸ்திர ஹோமம் - சோடச லட்சுமி யாகம்

தெய்வ வழிபாட்டில் அந்தந்த தெய்வங்களின் படைக்கலன்களும் முக்கியத்துவம் பெறுவதுடன் வழிபடப்படுகின்றன.சிலப்பதிகாரத்தில் வாள்களிலும் வீரர்களின் தோள்களிலும் கொற்றவை உறைவதாகக் குறிப்பிடப்படுகிறது. சிவபெருமானின் சூலம், திருமாலின் சக்கராயுதம், அம்பாள் விநாயகருக்கு அங்குசம், முருகனுக்கு வேல் ஆகியவை தெய்வீகப்படைக்கலன்களாக வழிபடப்படுகின்றன.
 அஸ்திர தேவர்
 சிவன் கோயில்களில் பொது வழக்கில் சூலம் எனப்படும் ஆயுதம் அஸ்திர தேவர் எனப்படுகின்றார். பல திருக்கோயில்களில் சூலாயுதம் மட்டுமே இருக்கும். சில இடங்களில் அவற்றில் தெய்வத் திருவுருக்கள் எழுந்தருளியிருக்கும். இந்த அஸ்திரதேவர் கோயில்களில் திருவுலா நடைபெறும்முன் பாதுகாவல் அதிகாரியாக உலா வருவது பழக்கத்தில் உள்ளது. அப்போது அஷ்டதிக்குகளிலும் இதன்முன்பாக சாத உருண்டைகளை பலியாக இடுவதும் பழக்கத்தில் உள்ளது.
 அகோராஸ்திரர்
 படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்னும் ஐவகை தொழில் செய்யும் சிவனுக்கு முகம் ஐந்து; ஈசானம் தத்புருஷம் வாமதேவம் சத்யோஜாதம் அகோரம் என்பவை . ஐந்துவகை முகத்திலிருந்து அவற்றுக்கு உண்டான சக்திகள் அத்திரங்களாக மாறி எதிரிகளின் சேனைகளை, கண் திருஷ்டி, ஏவல்கள், காரியத் தடைகள் போன்றவைகளை விலக்கி, துவம்சம் செய்கின்றன, வாழ்வில் ஏற்றம் கிடைக்கச் செய்கின்றன.
 இவ்வாறு சிவனின் படைக்கலன்களில் சிவாஸ்திரம்.பாசுபதாஸ்திரம், தூளிகாஸ்திரம் , யோகமாஸ்திரம் ஆகிய நான்கு அஸ்திரங்கள் சிவலிங்கத்தை மூலமாகக் கொண்டவை இவைகள் உருவமற்றவை. ஆனால் ஐந்தாவதான அகோராஸ்திரம் மட்டும் வழிபாட்டுக்குரிய தெய்வத்திருவுருவுடையது. சிவனை அழைக்காமல் யாகம் நடத்திய சத்ததந்துவை வீரபத்திரர் மூலம் அகோர அஸ்திரத்தை ஏவி கொல்லப்பட்டான். அவ்வாறு அஸ்திரம் மேற்கொண்ட வடிவம் அகோர அத்திர மூர்த்தி ஆகும். திருவெண்காட்டில் இந்த அகோராஸ்திர தேவருக்கென ஒரு தனி சந்நிதி அமைந்துள்ளது.
 அஸ்திர மந்திரம்
 இவர் தன்னுடைய சேனையை காப்பாற்றுவதும் பிறரின் படைக்கு பயத்தை உண்டு பண்ணுவது, எதிரியால் ஏவப்பட்ட காரியத்தை அழிப்பது, எல்லா வியாதியையும் போக்க வல்லது எல்லா தோஷத்தையும் போக்குவதில் சாமர்த்தியமானது, அண்டியவர்களை குழந்தைபோல் பாவிப்பது என்று அகோர மூர்த்தியின் மகிமையாகச் சொல்லப்படுகிறது. அதிலும் அகோர மந்திரத்தால் ஜபம் செய்யும்போது பலன் அதிகம். அகோர மந்திரம் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் காக்கும். எதிரிகளுக்கு அச்சத்தை விளைவித்து தோற்றோடச் செய்யும் தன்மை வாய்ந்தது. இவ்வாறு தீயதை அழிப்பது அஸ்திர தேவர் என்றால் அனைத்து உயிர்களுக்கும் வேண்டிய ஜீவனைத் தருவது சக்தியாகிய லட்சுமி ஆகும்.
 சோடச லட்சுமிகள்
 புகழ், தனம் அனைத்து அத்தியாவசிய விருப்பங்களையும் அளிக்கும் ஆதிலட்சுமி, சந்தான பாக்கியம் அளித்திடும் சந்தான லட்சுமி, அனைத்து வித்தை, கலைகள், நல்ல விருப்பங்களை தரும் வித்யா லட்சுமி, அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய நீங்காத செல்வத்தைத் தரும் தனலட்சுமி, புத்திக் கூர்மை, வற்றாத செல்வம், எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற தான்ய லட்சுமி, அறிவாற்றலான மேதைத் தனத்தையும் நிறைவான செல்வத்தையும் சகல கலைஞானங்களையும் தேவையறிந்து கொடுக்கும் மேதாலட்சுமி, கால்நடைகள் நிரம்பிய கோகுலத்தையும் எல்லா நல்ல எண்ணங்களையும் தரக்கூடிய கஜலட்சுமி, எல்லாச் செயல்களிலும் வெற்றியைத் தரும் வீரலட்சுமி, பராசக்தி வடிவினளான ஜயலட்சுமி, பொறுமை வடிவில் இருக்கும் சாந்தலட்சுமி.
 செளமாங்கல்யத்தை அளித்திடும் பாக்யலட்சுமி, மகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் கீர்த்திலட்சுமி, எல்லாப் பிணிகளையும் தீர்க்கும் ஆரோக்ய லட்சுமி, சர்வ சித்திகளையும் அளிக்கவல்ல சித்தி லட்சுமி, அழகான உருவத்தைக் கொடுக்கும் செளந்தர்ய லட்சுமி, புத்தியும் முக்தியும் அளிக்கக்கூடிய சாம்ராஜ்ய லட்சுமி ஆகிய சோடச மஹாலட்சுமியை அனைத்து மங்களங்களையும் அளிக்கக்கூடியவள். த்ரயம்பகியான நாராயணியை மந்திர உச்சாடனம் யாகமும் செய்து பலன் பெறுதல் மரபாக உள்ளது. பொதுவாக திருப்பணி செய்து குடமுழுக்கு செய்யத் துவங்கும் போது காப்பாகவும் வளம் பெருகவும் இந்த ஹோமமும் யாகமும் செய்வது பழக்கத்தில் உள்ளது.
 சக்தி குடி கொண்ட ஊர்
 சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் மேல்மலையனூர் அங்காளம்மன் பக்தர்கள் சிலர் அவர்கள் வசிக்கும் பகுதியில் அங்காளம்மனை நிறுவி கோயில் கட்ட விரும்பினார்கள். அதற்காக, மேல் மலையனூரிலேயே ஓர் அங்காளம்மனை தயார் செய்து கொண்டு செல்லும் வழியில் பவானி நதிக் கரையில் கோயில் கொள்ள நினைத்த அம்பாள், நடுவழியில் குடிகொண்டு விட்டாள். அம்பாள் அருள் கொண்ட மங்கை மூலம் இப்பகுதி மக்களின் எண்ணம் செழிக்கவும் திருவுள்ளம் கொண்டுள்ளோம். பல்வேறு வியாபாரம் செய்யும் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இவ்விடம் வந்து குடியேறி என் பூஜை புனஸ்காரம் ஆகியவற்றை கவனித்துக் கொண்டு வருவதுடன் காடு திருத்தி மேடு அழித்து விளைவு பெருக்கி சமூக நலனுக்கும் உதவுங்கள் என கூறி மலையேறினாள்.
 அதுமுதல் சக்தி குடிகொண்ட சத்தியமங்கலத்தில் அம்பாள் சிலைக்கு முறைப்படி வழிபாடு நடத்தி, அந்த இடத்திலேயே ஒரு சிறிய ஆலயம் கட்டினார்கள். அதுமுதல் இக்கோயில் பூஜைகளுடன் மக்களின் அபிமானம் பெற்ற தெய்வமாக விளங்கியதோடு சித்ரா பெளர்ணமி 108 பால்குட அபிஷேகம், லலிதா சகஸ்ரநாம பாராயணம், துவங்கி பல்வேறு வம்சத்தவரும் வழிபடும் திருநாள்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.
 இவ்வாண்டு, புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையான செப்டம்பர் 22 -ஆம் தேதி அஸ்திர ஹோம சோடச லட்சுமி யாகமும் உலக நலன் வேண்டியும் திருக்கோயில் திருப்பணிகள் தடையின்றி நடக்க வேண்டியும் செய்யப்படுகிறது.
 ஈரோடு மாவாட்டம், கொமார பாளையம், சத்தியமங்கலம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் செப்டம்பர் 21-ஆம் தேதி, மாலை கலச ஆவாகனம் செய்து அஸ்திர மந்திர ஜபம் துவங்குகிறது. 22-ஆம் தேதி ஞாயிறு காலை அஸ்திர யாகம் தொடரும்போதே அங்காளம்மன் பவானி ஆற்றுக்கு எழுந்தருளி ஆராட்டு நடைபெறுகிறது. ஹோமத்தில் வைக்கப்பட்ட தீர்த்தங்களைக் கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும். பின்னர், கன்யா பூஜை, சுவாசினி பூஜை நடந்து அம்பிகைக்கு திருப்பாவாடையும் குழித்தளிகையும் நெய்வேத்யம் செய்து தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்படும்.

தொடர்புக்கு: 98422 92044 / 99441 00700.
 - இரா. இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com