வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

கல்விக் கடவுள் ஸ்ரீ ஹயக்ரீவர்!

DIN | Published: 06th September 2019 11:11 AM

ஸ்ரீஹயக்ரீவ அவதாரம் திருமாலின் பதினெட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறது. திருமாலின் தசாவதாரங்களுக்கு முற்பட்ட காலத்திலே இவர் மனித உடலுடனும் குதிரை முகத்துடனும் தோன்றியவர். இவரை "பரிமுகக் கடவுள்' என்றும் சொல்வார்கள்.
 ஒரு சமயம் பிரம்மன் உறக்கத்தில் இருக்கும் வேளையில் மதுகைடபர்கள் என்ற அரக்கர்கள் பிரம்மா படைத்த வேதங்களை திருடிச் சென்று அதளபாதாளத்தில் ஒளித்து வைத்துவிட்டனர். தூக்கம் கலைந்த நான்முகனும் வேதங்களைக் காணாது மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவரும் அவற்றை மீட்டு வருவதற்காக "ஹயக்ரீவ'ராக உருவெடுத்துச் சென்றார்.
 பாதாளம் வரை சென்று வேதத்தின் ஒரு பாடத்தில் உள்ள உத்கீதம் என்ற ஸ்வரத்தை உண்டு பண்ணி அதன்வழி வந்த அரக்கர்களிடம் போரிட்டு அவர்களை அழித்தார். பின்னர், வேதங்களை மீட்டு வந்து கல்வியறிவு, ஞானத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தார்.
 பின்னர், வேதத்தை படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கே "சிராவணப் பௌர்ணமி' எனும் ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் சுடர்விட்டுப் பிரகாசிக்க கற்றுக் கொடுத்தார் என புராணங்கள் கூறுகின்றன.
 ஆக, கல்வி, கலை ஞானத்தின் தெய்வங்களுக்கு எல்லாம் குரு ஸ்தானத்தில் இந்த ஹயக்ரீவப் பெருமான் உள்ளார். எனவே, இவரைப் போற்றி வழிபடுபவர்களுக்கெல்லாம் கல்வி சிறப்புற அமையும்.
 அதாவது, தூய மெய்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு மற்றும் அனைத்திற்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்ரீவரை வணங்குகிறேன்' என்று போற்றித் துதிக்க வேண்டும்.
 இதையே,
 "ஞானாந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
 ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் முபாஸ் மஹே!'
 -என்றொரு அற்புதமான சுலோகம் சுவாமியின் பெருமையை போற்றுகிறது. அந்த சுலோகத்தை தினமும் 108 முறையாவது சொல்ல வேண்டும். முக்கியமாக, வியாழக்கிழமைகளில் சொல்வது நல்லது என்று கூறுகிறார்கள் பெரியோர்கள்.
 நான்கு கைகளில் சங்கு, சக்கரம், பத்மமாலை, அபயகரம் என விளங்கும் அவர் லட்சுமி ஹயக்ரீவராக, வரத ஹஸ்த ஹயக்ரீவராக, அபய ஹஸ்த ஹயக்ரீவராக, யோக ஹயக்ரீவராக பலவிதமான வடிவங்களில் விளங்குகிறார்.

சரஸ்வதி தேவியின் குரு ஹயக்ரீவர். இவர் வேதங்களை முறைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. சுவாமி விருப்பத்துடன் குதிரை முகத்தோடு அவதாரம் எடுக்கிறார். அந்த முகத்தில்தான் லட்சுமி தேவி இருக்கிறாள். அவருடைய மூச்சுக் காற்றுப்பட்டு வேதங்கள் புனிதமடைந்து உயிரோட்டம் பெறுகின்றன.
 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தை இயற்றியவர்கள் வாக்தேவதைகள். அதனை வெளிப்படுத்தியவரும் ஹயக்ரீவர்தான். இவருடைய முதல் சீடரான அகத்தியர் வெகுநாள்களாகத் தனக்கு ஏன் லலிதா சகஸ்ர நாமத்தை ஹயக்ரீவர் உபதேசிக்கவில்லை என்பதை உணர்ந்து ஒருநாள் கண்களில் கண்ணீர் வழிந்தோடக் கைகட்டி வாய்பொத்தி பவ்யத்துடன், " எனக்கு தாங்கள் இதுவரை லலிதா சகஸ்ர நாமத்தை உபதேசம் செய்யவில்லையோ'' என்று கேட்கிறார்.
 சுவாமி புன்னகையுடன், " இதை நீ கேட்க வேணும் என்பதே உன் மனைவி லோபாமுத்திரையின் விருப்பம். அவளது பக்தியினால்தான் இந்த எண்ணமே உனக்குத் தோன்றியுள்ளது. லலிதா சகஸ்ர நாமத்தை யாரும் கேட்டால் மட்டும்தான் சொல்ல வேண்டுமே தவிர, கேட்காதவர்கள், உதாசீனப் படுத்துபவர்கள் காதில் கூட இந்த நாமா விழக்கூடாது!'' என்று உபதேசம் செய்கிறார் ஹயக்ரீவர்.
 "ஓம் அஞ்சலி ஹஸ்தாய வித்மஹே வேத முகாய தீமஹி தந்நோ: ஹயக்ரீவ ப்ரசோதயாத்!'
 - என்பது அவரது காயத்ரி மந்திரமாகும்.
 நாடெங்கும் ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாளுக்கு சொற்ப இடங்களில் மட்டுமே கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் சில: ஸ்ரீரங்கம் ஆலயத்தில் பெரிய பிராட்டியின் சந்நிதிக்கு எதிரே தேசிகர் சந்நிதியிலும் உத்தர வீதியில் உள்ள தேசிகர் சந்நிதியிலும் ஹயக்ரீவர் மூர்த்தி உள்ளது.
 திண்டுக்கல்லில் உள்ள தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் கோயிலில் ஹயக்ரீவரும் சரஸ்வதியும் அடுத்தடுத்து அமைந்து அருள்பாலிக்கின்றனர். சென்னை காட்டாங்கொளத்தூரை அடுத்துள்ள செட்டிபுண்ணியம் என்ற கிராமத்தில் இருக்கும் தேவநாத சுவாமி கோயிலில் ஹயக்ரீவர் அமைந்துள்ளார். கடலூருக்குப் பக்கத்தில் உள்ள திருவஹீந்திரபுரத்தில் ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ளார். சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோயில் கொண்டுள்ளார். புதுச்சேரி முத்தியால்பேட்டையில் புகழ் பெற்ற லட்சுமி ஹயக்ரீவர் ஆலயம் உள்ளது. ஸ்ரீ ஹயக்ரீவர் ஜயந்தி - 11.9.2019
 - டி.எம். ரத்தினவேல்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

முன்னோரை மகிழ்ச்சிப் படுத்தும் ராமர் கயை!
மறந்ததை மஹாளயத்தில் செய்!
பொருநை போற்றுதும்!58 - டாக்டர் சுதா சேஷய்யன்
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 25
மன்னிப்பதில் மகத்தானவன் அல்லாஹ்