திருப்பத்தூர், ஆண்டியப்பனூரை அடுத்துள்ளது பாப்பாத்தியம்மன் கோயில். இந்த கோயில் ஜவ்வாது மலையின் பின் பகுதியில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான கோயில் எனக் கூறப்படுகின்றது. பதில் தரும் குளம் என்பதால் பக்தர்கள் பக்தி பரவசத்தில் திளைக்கின்றனர்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, இந்த கோயில் குளத்தில் வித்தியாசமான வழிமுறைகளை மேற்கொள்கின்றனர். இந்த குளத்தில் பக்தர்கள் வாழைப்பழத்தை 3 துண்டுகளாக்கி போடுகின்றனர். அந்த 3 வாழைப்பழ துண்டுகளும் நீரின் மேலே எழும்பி வந்தால் நினைத்த காரியம் உடனே நடைபெறும் என்பது நம்பிக்கை! 2 துண்டுகள் மேலெழும்பி வந்தால் காரியம் சற்று தாமதத்தின்பேரில் நடைபெறும். ஒரு துண்டு மட்டும் மேலே வந்தால் காரியம் தாமதமாகும். வாழைப் பழ துண்டுகள் உள்ளேயே நின்று விட்டால் நினைத்த காரியம் கைக்கூடாது என்கின்றனர்.
இந்த கோயிலுக்கு மேற்கூரை மற்றும் கோபுரம் கிடையாது. மரக்கிளைகளும்,செடிக்கொடிகளும் பின்னிப் பிணைந்து கோபுரமாக அமைந்துள்ளது தனிச்சிறப்பு. கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலான ஒற்றைப் பனை மரம் கோயிலுக்கு அடையாளமாகத் திகழ்கின்றது. பனை மரத்தின் கீழ் மூலவரான அம்மன் சிலை உள்ளது.
இவ்வாலய அம்மன் குறித்து பக்தர்கள் கூறுகையில், கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு காட்டுப்பகுதியான இந்த இடத்தில் கர்ப்பிணி பெண் ஒருத்தி குழந்தை பெற்றபோது குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரித்து எரிந்ததுதான் செடி, கொடிகளாக மாறி தற்போது கோயிலின் கோபுரமாக உள்ளது. கர்ப்பிணி பெண்ணின் பனிக்குடம் உடைந்துதான் தற்போது பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கும் குளமாக உள்ளது என்பதோடு அந்த கர்ப்பிணி பெண்தான் இங்கு அம்மனாக அமர்ந்து அருள்பாலித்துவருகிறார் என்கின்றனர் பக்தர்கள். இங்கு பிரார்த்தனை செய்து வேண்டியது நிறைவேறினால் மணிகள் கட்டுவதாக பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியப்பின் நேர்த்திகடனாக மணிகளை கட்டிச் செல்கின்றனர்.
திருமண தடை உள்ளவர்கள் இங்குள்ள அம்மிக் கல்லில் மஞ்சள் அரைத்து சென்று முகத்தில் பூசிக்கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என நம்புகின்றனர். அதேப்போன்று, புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் சிறிய அளவிலான தொட்டிலை கட்டி பிரார்த்தித்தால் குழந்தை பேறு உண்டாகும் என்பது ஐதீகம்.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் பாப்பாத்தியம்மன் திருவிழா மிக விமரிசையாக நடைப்பெறுகின்றது. ஆடு, கோழி பலியிடுதல் இல்லை.
ஆலயம் செல்ல: திருப்பத்தூரிலிருந்து ஆலங்காயம் செல்லும் வழியில், ஆண்டியப்பனூரில் இறங்கி ஷேர் ஆட்டோ மூலம் செல்லலாம்.
- து. ரமேஷ்