வெள்ளிமணி

வேலாயுதனின் சூரசம்ஹாரம்!

1st Nov 2019 12:14 PM

ADVERTISEMENT

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோயிலில் சூரசம்ஹார விழா ஆண்டுதோறும் பக்தர்கள் விரதத்துடன் துவங்கி சிறப்பாக நடக்கிறது. தொடக்கத்தில் இம்மலையில் வேல் மட்டும் நட்டு வழிபட்டுள்ளனர். வேல் வழிபாடு தொன்மையானது. வேல் வழிபாடு பற்றி அருணகிரிநாதரும் பாடியுள்ளார். வேலாயுத வழிபாடே வேலன் வழிபாடாகி, பின்னால் முருகனை நிறுவி வழிபடும் வழக்கமாக மாறியது. அதனால் இவ்வூர் வேலாயுத(ன்)ம் பாளையம் எனப்படுகிறது.
 புகழூர் - ஆறுநாட்டு மலை
 கரூர் மாவட்டத்தில் காவிரி தென்கரையில் உள்ள ஆறு நாடுகளுக்குப் புகழிமலை சொந்தமானது. ஆகையால் இம்மலையை "ஆறுநாட்டார் மலை' என்றும் அழைப்பர். சமணர்களுக்கு அருகர் என்ற பெயரும் உண்டு. அருகர்கள் இருந்த நாட்டின் மலை ஆறு நாட்டு மலை என இருக்கலாம் என்பர். சங்க காலத்திற்குப்பின் சமணர்களுக்கு இப்பகுதி புகலிடமாக இருந்ததால் இம்மலை புகலி மலை என்று இருந்து பின்னர், புகழிமலை என மாறியது என்று கருதுகின்றனர்.
 திருப்புகழ் மலை
 15 -ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் பாடப் பெற்ற இம்மலைக் கோயில், சங்க காலம் முதல் இருந்திருக்க வேண்டும்! பழைமையான இக்கோயில் 13 -ஆம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்ட கட்டமைப்புடைய திருக்கோயிலாகும். சுமார் நானூறு அடி உயரமுள்ள மலையின் அடிவாரத்தில் விநாயகர் சந்நிதி உள்ளது. மலையின் நுழைவாயில் மண்டபத்தில் மலையை நோக்கி மேற்கு திசையில் முருகனுடைய மயில்வாகன சந்நிதி அமைந்துள்ளது. மலைக்கோயிலிலுள்ள கார்த்திகேயனை தரிசிக்க 315 படிகள் ஏற வேண்டும்!
 மலைப்பாதையில் அய்யனார், ஏழு கன்னிமார்கள், வடதிசை பார்த்த இடும்பன் சந்நிதி தாண்டி மேலேறினால் மகாமண்டபத்தில் சிவன், அம்பாள் சந்நிதிகளை அடுத்து பாலசுப்ரமணிய சுவாமியின் கருவறை உள்ளது. மூலவர் நான்கு திருக்கரங்களுடன் இருபுறமும் வேல், சேவல் கொடியுடனும் இடதுபுறம் பின்னே தலை சாய்த்த தேவமயிலுடன் நின்ற கோலத்தில் காட்சி அருளுகிறார்.
 வாரத்தில் செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அமாவாசை நாள்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். தைப்பூச உற்சவம் 13 நாள்களுக்கு நடைபெறும். தைப்பூசத் தேர்த் திருவிழா, கார்த்திகை தீபம், ஆடிக்கிருத்திகை, தீபாவளி, கார்த்திகை, பொங்கல், தமிழ்- ஆங்கில வருடப்பிறப்பும் முக்கியமான நாள்களாகும். ஐப்பசி கந்தசஷ்டி உற்சவம் சூரசம்ஹாரத்துடன் ஏழு நாள்கள் நடைபெறும். இறுதி நாளில் மலையைச் சுற்றி சூரசம்ஹாரம் நடைபெறும்.
 சூரசம்ஹாரம்
 பிரம்மாவின் 2 -ஆம் மகன் காசியபன் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை என்பவளிடம் மயங்கியதால் முதலாம் சாமத்தில் மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். சூரபத்மன் சிவனிடம், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளை மட்டுமே தன்னை அழிக்க, வரம் பெற்றான். அசுரர்கள் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர்.
 தேவர்கள், சிவபெருமானிடம் தங்களைக் காக்க வேண்டினர். சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த ஆறு தீப்பொறியையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கை தாமரை மலர்களில் சேர்க்க, ஆறும் குழந்தைகளாக மலர்ந்தனர். ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்க்க, அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க, ஒரே திருமேனியும் ஆறு முகங்களும் கொண்ட கார்த்திகேயன் தோன்றினார்.
 அசுரர்களை அழிக்க நினைத்த முருகன், முதல் ஐந்து நாள்களில் அனைவரையும் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சிய சூரபத்மனுடன் இறுதிப்போர் நடந்தது. முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியின் ஆசிபெற்று சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் மாமரமாய் மாறி நின்றவன் மீது வீச, வேல் பட்டதும் மரம் இரண்டாகப் பிளந்தது. ஒருபாதி மயில் வாகனமாகவும், மறுபாதியை சேவல் கொடியாகவும் ஆக்கினார் செந்தில்வேலன். அவ்வாறு சம்ஹாரம் செய்த பின்னர், தன் பக்தர்களுக்காக வந்து நின்ற இடங்களில் ஒன்று புகழிமலையாகும். அவ்வரலாற்றின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் சூர சம்ஹாரம் இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது.
 இவ்வாண்டு, அக்டோபர் 28 -இல் விரதம் இருப்பவர்களுக்கு விரத காப்பு அணிவித்தல் நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி விழா துவங்குகிறது. தொடர்ந்து, நவம்பர் 2-ஆம் தேதி பிற்பகல் 11 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு மலையிலேயே விசேஷகால சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று, 12 மணிக்கு மேல் சக்திவேல் வாங்குதலும் மகா தீபாராதனையும் செய்யப்படும். பின்னர் மூலவர் பாலசுப்ர
 மணிய சுவாமிக்கு சந்தன காப்புடன் ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறும். அன்று மாலை புகழி மலை அடிவாரத்தில் சுமார் 6.30 மணிக்கு சூரசம்ஹாரம் துவங்கும். இரவு 9.30 மணி வரை மலையைச் சுற்றி நான்கு இடங்களில் கஜமுகன், சிங்கமுகன் மற்றும் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். தொடர்ந்து, இரவு 10 மணிக்கு மயில்வாகனத்தில் திருவீதியுலாவும் நடைபெறும். நவம்பர் 3- ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானைக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்று விழா நிறைவு பெறும்.
 கரூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் புகழிமலை அமைந்துள்ளது.

தொடர்புக்கு: 99445 31017 / 90806 33370.
 - இரா இரகுநாதன்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT