புண்ணிய பூமியில் புனிதப் பயணம்! 9

ஜோர்தான் நாட்டில் உள்ள இந்த மலை, கடல் மட்டத்தில் இருந்து 2,680 அடி உயரத்தில் உள்ளது.
புண்ணிய பூமியில் புனிதப் பயணம்! 9

நோவா மறைந்த நேபோ மலை
 ஜோர்தான் நாட்டில் உள்ள இந்த மலை, கடல் மட்டத்தில் இருந்து 2,680 அடி உயரத்தில் உள்ளது. எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரேலியர்களை (எபிரேயர்கள்) 40 ஆண்டுகள் பிரயாணம் செய்து ஜோர்தான் தேசத்தில் உள்ள நேபோ மலை வரை மோசே அழைத்து வந்தார். இப்போது வறண்டு கிடக்கும் நேபோ மலையடிவாரம் மோசே காலத்தில் செழிப்பான பகுதியாக இருந்தது.
 விவிலியத்தின்படி, நேபோ மலை இருக்கும் இடம் மோவாப் தேசமாக இருந்தது. இந்த மலையில் இருந்து தான் கடவுள் இஸ்ரேலியர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தை மோசேவுக்கு காண்பித்தார். இந்த இடத்தில் இருந்து பெத்லஹேம் 50 கி.மீ., எருசலேம் 46 கி.மீ., கும்ரான் 25 கி.மீ., ஹேப்ரான் 65 கி.மீ., ரமல்லா 52 கி.மீ., எரிகோ பட்டணம் 27 கி.மீ., சாக்கடல் 106 கி.மீ. தூரத்தில் உள்ளன. இந்த நகரங்கள் அனைத்தும் இஸ்ரúல் மற்றும் பாலஸ்தீன நாட்டில் உள்ளன.
 விவிலியத்தின் உபாகமம் 34: 1 முதல் 9 வசனங்கள்: பின்பு மோசே மோவாபின் சமவெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தான்மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும், நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசிச் சமுத்திரம் வரைக்குமுள்ள யூத தேசம் அனைத்தையும், தென்புறத்தையும், சோவார் வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர்முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார்.
 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இதுதான், இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் அவ்விடத்திற்கு நீ கடந்துபோவதில்லை என்றார். அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான். அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் பண்ணினார். இந்நாள் வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.
 மோசே மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை; அவன் பெலன் குறையவுமில்லை. இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கம் கொண்டாடின நாட்கள் முடிந்தன. மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
 விவிலியத்தில் உள்ள இச்சம்பவம் நடைபெற்ற இடம் நேபோ மலை மற்றும் அதை சுற்றியுள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் தான், நோவா தலைமையில் சுமார் 35 லட்சம் பேர் இந்த இடத்தில் கூடாரம் போட்டு தங்கியுள்ளனர். இந்த இடத்தில் 4- ஆம் நூற்றாண்டில் மோசே நினைவாக தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டப் பின்னர் 1933-இல் தான் இந்த இடத்தில் உள்ள தேவாலயம் கண்டுபிடிக்கப்பட்டு, போப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும் புனித பிரான்சிஸ் சபையினர் தங்களது கட்டுப்பாட்டில் 90 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்துள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்து நன்கொடை பெற்று மீண்டும் இதே இடத்தில் மோசே நினைவு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.
 2000-ஆம் ஆவது ஆண்டில் போப் ஜான்பால்-2 இங்கு வந்தபோது ஒரு நினைவுத் தூண் எழுப்பப்பட்டுள்ளது. புத்தகம் திறந்தது போன்ற வடிவமைப்பில் தத்ரூபமாக கட்டப்பட்டுள்ளது. அந்த தூணில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே ஆகியோரின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. தனது பயணத்தின்போது போப் ஜான் பால் அங்கு ஒலிவ மரங்களையும் நட்டு வைத்துள்ளார். யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புனித இடமாக கருதப்படுகிறது.
 - ஜெபலின் ஜான்
 (தொடரும்...)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com