22 செப்டம்பர் 2019

பொருநை போற்றுதும்! 41 டாக்டர் சுதா சேஷய்யன்

DIN | Published: 17th May 2019 02:08 PM

நதிப்பெண்ணுக்கு இடமும் வலமும்
 பொரிய நதி ஒன்றின் கிளையாறுகளைப் பற்றிச் சொல்லும்போது, இந்தக் கிளையாறுகள் அவற்றின் முதன்மையாற்றோடு சேருவதை, "வடக்குக் கரையில் சேர்கிறது, கிழக்குக் கரையில் சேர்கிறது' என்றெல்லாம் நம் முன்னோர்கள் சொன்னதில்லை. "இடது கரையில் சேர்கிறாள், வலக்கரையில் கலக்கிறாள்' என்று, ஏதோ மனிதர்களுக்கு வலக்கை, இடக்கை என்று கூறுவதுபோல்தான் கூறினார்கள். இதற்குக் காரணம் உண்டு நதிகளையும் நங்கைகளாக, சகோதரிகளாக, தாயார்களாகக் கண்ட (இப்போதும், காணும்) முறை இது.
 அது சரி, நதிக்கு எது இடக்கரை, எது வலக்கரை என்கிறீர்களா?
 நதி நல்லாளைப் பெண்ணாக உருவகித்தால், அவளுடைய தலை எது? அவளுடைய தோற்றுவாய்தான். எந்த இடத்தில் அவள் நிலத்தில் முகிழ்த்துத் தோன்றுகிறாளோ, அதுவே அவளின் தலை (காவிரியின் தோற்றுவாய், தலைக்காவிரிதானே!). எங்கு அவள் கடலரசனோடு சங்கமிக்கிறாளோ, அந்த இடம்தான் அவளின் பாதம்.
 இந்த வகையில், பொதிகை மலையே தாமிராவின் தலைப்பகுதி. அகத்திய மலை உயிர்வளக் காடுகளும் அவற்றின் மரங்களுமே அவளின் கேசம். வடக்குக் கரை, இவளின் இடக் கரம். தெற்குக் கரை, இவளின் வலக் கரம்.
 சேர்ந்து பெருகும் சேர்வலாறு
 மலைப் பகுதியை விட்டுத் தாமிரா கீழிறங்குவதற்கு முன்பாக, இவளின் இடக்கரையில் வந்து கலக்கும் உபநதியாள்தான், சேர்வலாறு.
 பொதிகை அசம்பு மலைகளுக்கு வடக்காக இருக்கும் மேற்குத் தொடர்ச்சிச் சரிவுகளில்தான், சேர்வலாறு தொடங்குகிறது. மலை நீரோட்டங்களால் அகலம் பெறுகிற இந்நதி, மலைச் சரிவுகளிலேயே சஞ்சரித்து, பாபநாசம் கீழணைக்கு முன்பாகத் தாமிரவருணியில் கலக்கிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரண்டு பருவக்காற்றுகளாலும் இந்த மலைநீரோட்டங்கள் செழிக்கின்றன. "சேர்வல்' அல்லது "சேர்வை' என்னும் சொல்லுக்குச் "சேர்த்தல்' அல்லது "இணைத்தல்' என்றே பொருள்.
 பற்பல நீரோட்டங்களின் சேர்ப்பு என்பதாலேயே சேர்வல் ஆறு என்னும் பெயர் ஏற்பட்டிருக்கக்கூடும். இக்காலங்களில் சேர்வலாறு என்றே கூறினாலும், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சேர்வையாறு என்றே அழைத்துள்ளனர். சேர்வலாறும் தாமிரவருணியும் கலக்கும் இடத்தில் தடுப்பணை ஒன்றுண்டு.
 இரண்டு பருவக்காற்றுகளாலும் மழைவளம் பெற்று, கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் நீர்வரத்து கொண்டதாகவே சேர்வலாறு இருப்பதைக் கண்டு உருவாக்கப்பட்டதே சேர்வலாறு நீர்த்தேக்கத் திட்டம். 1986 -ஆம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்ட இத்திட்டம், சிறப்பான கட்டுமான அமைப்பைக் கொண்டது. பாபநாசம் மேலணையிலிருந்து சேர்வலாறு நீர்த்தேக்கம் வரை சுமார் 2.5 மைல் (10000 அடிக்கும் அதிகமாக) தொலைவுக்குச் சுரங்கம் அமைக்கப்பட்டு, அதன் வழியாக நீர் செல்வதற்கான வழியும் அமைக்கப்பட்டுள்ளது.
 பாபநாசம் மேலணையில் நீர்வரத்து அதிகமானால், அது சேர்வலாற்றுத் தேக்கத்திற்குத் திருப்பப்படும். பாபநாசத்தில் நீர் குறைந்தால், சேர்வலாற்றிலிருந்து பாபநாசத்திற்கு நீர் திருப்பப்படும். சேர்வலாறு நீர்த்தேக்கத்தில் மின் உற்பத்தி நடைபெறுகிறது. மின் உற்பத்திக்குப் பின்னர் வெளியாகும் நீர், பாபநாசம் கீழணைக்குக் கொண்டுவரப்பட்டு, பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
 இயற்கை அன்னையின் எழில்மடி என்பதால், விக்கிரமசிங்கபுரத்திலிருந்து 15 கி.மீட்டரிலும் பாபநாசத்திலிருந்து 12 கி.மீட்டரிலும் அமைந்துள்ள சேர்வலாறு நீர்த்தேக்கம், சிறந்ததொரு சுற்றுலா மையமாகவும் திகழ்கிறது.
 கொஞ்சம் மாறிய கோரை ஆறு
 பாபநாசத்தைத் தாண்டி, கல்லிடைக்குறிச்சிக்கு வரும்போது, தாமிராவின் வலக்கரையில் மணிமுத்தாறு வந்து கலக்கிறது என்பதை ஏற்கெனவே கண்டுவிட்டோம். தாமிராவின் 22 -ஆவது கிலோமீட்டரில் சேர்வலாறும் 36 -ஆவது கிலோமீட்டரில் மணிமுத்தாறும் இணைகின்றன.
 மணிமுத்தாறு இணைப்பைத் தாண்டிய பின்னர், மற்றுமொரு நதித்தங்கையும், தாமிராவின் வலக்கரையில் வந்து முற்காலங்களில் கலந்தாள். இவளே கோரையாறு என்பவள். மாஞ்சோலை மலைச் சரிவுகளின் தென்கிழக்கு, கிழக்குப் பகுதிகளில் உற்பத்தியாகிற கோரை ஆறு, எலுமிச்சையாறு, வண்டலூர் ஓடை, வள்ளிமலை ஓடை ஆகியவற்றால் அகலம் அதிகரிக்கிறது. மலைத்தொடர் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி ஓடி வருகிறது. வெள்ளங்குளிப் பகுதிக்கு அருகிலோடி, ஊர்க்காடு என்னும் இடத்திற்கு எதிரில் பொருநையோடு கலந்த இந்நதி, கன்னடியன் கால்வாய் கட்டப்பட்ட பிறகு, இக்கால்வாயில் சேர்கிறது.
 ஊர்க்காடு பெயர் சற்று விநோதமாக இருந்தாலும், இந்த ஊரின் விசேஷங்கள் ஏராளம். கழனிக்கும் வயலுக்கும் "காடு' என்று பெயர் சொல்வதுண்டு. மலைச்சரிவுகளின் அடர்வனங்களைக் கடந்து, ஆற்றங்கரைக் குடியிருப்புகள் தொடங்குகிற இடத்தில் இருப்பதால், ஊரும் கழனியும் சேர்ந்த இடம் என்னும் பொருளில் "ஊர்க்காடு' என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இல்லை, இயற்கையின் காட்டுவளங்கள் சூழ்ந்த பகுதி என்பதாலும் இப்பெயர் பொருந்தும்.
 கோணல் காட்டிய கோட்டியப்பர்
 ஊர்க்காட்டில் எழுந்தருளியுள்ள சிவனாருக்கு அருள்மிகு கோடியப்பர் என்று திருநாமம். "கோடி' என்னும் சொல்லுக்கு மிகுதியான, அதிக எண்ணிக்கையுள்ள, உயரமான, உச்சி, வளைவான' என்பன போன்ற பல பொருள்கள் உள்ளன. தாமிரா வடக்கு முகமாக வளைகிற பகுதி என்பதனாலும், எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட இறைவனார் என்பதாலும் "கோடியப்பர்' என்னும் திருநாமம் தோன்றியிருக்கக்கூடும். இருந்தாலும், இந்தத் திருநாமம் தோன்றியதற்கான காரணம் குறித்து இந்தப் பகுதிகளில் வழங்குகிற செவிவழிக் கதை சுவாரசியமானது.
 - தொடரும்...
 
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நலம் தரும் அஸ்திர ஹோமம் - சோடச லட்சுமி யாகம்
பொருநை போற்றுதும்! 59
கொன்றைப்பூ விசேஷம்!
மண்ணில் தோன்றிய மாலோலன்!
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 26