22 செப்டம்பர் 2019

புண்ணிய பூமியில் புனிதப் பயணம்! 8

DIN | Published: 17th May 2019 02:02 PM

கர்த்தர் மோசேக்கு உடன்படிக்கை சட்டத்தை கொடுத்த இடமும், எரியும் முள்செடியில் காட்சி அளித்த இடமும் ஒரேப் மலை தான் (இதன் மறுபெயர் சினாய் மலை). மோசே சினாய் மலையில் ஏறி கர்த்தரிடத்தில் பேசச் சென்றபோது, அவரது சகோதரனான ஆரோன், அங்கிருந்த எபிரேயர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கழற்றச் சொல்லி அதை தீயில் போட்டு ஒரு பொன் கன்றுக்குட்டியை வார்ப்பித்தான்.
 பின்னர் எபிரேயர்களிடம் இதை வணங்குங்கள், எகிப்தில் இருந்து இதுவரை உங்களை கொண்டு வந்த தெய்வம் இதுதான் என்று கூறினான் (யாத்திராகமம் 32:4).
 இதனால், கடுங்கோபங்கொண்ட கடவுள், மோசேயிடம் கடும் கோபங்கொண்டார். மோசே மலையில் இருந்து இறங்கிவந்து பொன் கன்றுகுட்டியை அடித்து நொறுக்கினார்.
 இந்த இடத்தில் உள்ள மலையில் இப்போதும் ஒரு கன்று குட்டி உருவம் அப்படியே தத்ரூபமாக காட்சி அளிக்கிறது. இந்த இடத்தில் இருந்து சுமார் 200 மீ தூரத்தில் ஆரோனின் கல்லறை உள்ளது. மோசே ஆசாரிப்புக் கூடாரத்தை அமைத்ததும் இதே இடம் தான். எபிரேயர்கள் வாழ்க்கை நடத்த வேண்டும், எதை உணவாக சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்பதை எல்லாம் கர்த்தர் நேரடியாக கற்றுக்கொடுத்தார்.
 உலகிலேயே முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட இடமும் இது தான்.
 எண்ணாகமம் 1: 1 முதல் 3-ஆம் வசனங்கள்: இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சினாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:
 "நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள். இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக' என்றார்.
 அவர்கள் எண்ணியபோது, ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர் இருந்தார்கள். அந்த நாள்களில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள் சேர்க்கப்படவில்லை. முதல் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட இடமும் சினாய் மலை தான்.
 விவிலியத்தில் ஜோர்தான் தேசம்
 ஜோர்தான் தேசம், தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். ஜோர்தானியர்கள் பேசுவது அரபு மொழி. இந்நாட்டின் நாணயம் ஜோர்தான் தினார். இதன் வடக்கில் சிரியாவும், வடகிழக்கில் ஈராக்கும், மேற்கில் இஸ்ரேலும், மேற்குக் கரையிலும் தெற்கிலும் கிழக்கிலும் சவுதி அரேபியாவும் எல்லைகளாக இந்த நாடு கொண்டுள்ளது. இந்நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உள்ள அக்கபா குடாவினதும், சவக் கடலினதும் கரைகள் ஜோர்தானுக்கும் இஸ்ரேலுக்கும் பகிரப்பட்டுள்ளன.
 இந்நாட்டின் தலைநகர் அம்மான். தமிழகத்தில் இருந்து செல்லும் புனித பயணிகள் துபாய் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புனித தேசங்களுக்கு செல்ல இரு வழிகள் உள்ளன. ஒன்று துபாயில் இருந்து அம்மான் (ஜோர்தான்) சென்று அங்கிருந்து தரை வழிமார்க்கமாக இஸ்ரேல், பாலஸ்தீனம், எகிப்து வழியாக கெய்ரோவில் இருந்து மீண்டும் துபாய் வர வேண்டும். இல்லையெனில் துபாயில் இருந்து கெய்ரோ (எகிப்து) சென்று அங்கிருந்து தரைவழிமார்க்கமாக இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்தான், அம்மான் விமான நிலையத்தில் இருந்து துபாய் திரும்ப வேண்டும்.
 விவிலியத்தின்படி ஜோர்தான் தேசம், யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு முக்கியமான புனித தேசமாக கருதப்படுகிறது. சவக்கடல், இயேசு கிறிஸ்து ஞானஸ்தானம் (திருமுழுக்கு) பெற்ற ஜோர்தான் ஆறு, இஸ்ரேல் தேசத்தை மோசேவுக்கு கடவுள் காண்பித்த நோபா மலை, மடபா நகரில் 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்த புனித ஜார்ஜியார் தேவாலயம் (புனித தேச வரைபடம் கண்டெடுக்கப்பட்ட ஆலயம்) ஆகியவை புனித பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களாக உள்ளன. எகிப்தில் அடிமைகளாக இருந்த எபிரேயர்களை 40 ஆண்டுகள் வழிநடத்தி வந்த மோசே இறந்ததும் ஜோர்தான் நாட்டில் உள்ள நோபா மலை தான். ஆபிரகாமின் சகோதரனான லோத்து குடியிருந்தது ஜோர்தானில் உள்ள சமவெளியான பகுதிகள் தான் (ஆதியாகமம் 13.11).
 ஜோர்தானில் பாலைவனம் இல்லையென்றாலும், ஜோர்தான் ஆற்றை ஒட்டிய பகுதிகள்தான் வளமான நிலங்களாக உள்ளன. ஜோர்தான் தேசத்தில் பைன் மரங்கள், ஒலிவ மரங்கள், கோதுமை வயல்கள் அதிகமாக உள்ளன.
 ஜோர்தான் பள்ளத்தாக்கு பகுதியில் ஆரஞ்ச், மாதுளை, திராட்சைத் தோட்டங்கள் அதிகமாக காணப்படுகின்றன. தமிழகத்தில் கோடைகாலங்களில் உதகை, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளுக்கு செல்வது போல கோடை காலங்களில் ஜோர்தானியர்கள் இந்த பள்ளத்தாக்கை நோக்கிதான் அதிகமாக பயணம் செய்கின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 200 அடி கீழே உள்ள பகுதி இது.
 மடபா ஜார்ஜியார் தேவாலயம்: மடபா நகரில் உள்ள புனித ஜார்ஜியார் தேவாலயம் கட்டப்பட்டது. பாரசீகர்களின் படையெடுப்பின்போது கிறிஸ்தவ தேவாலயங்கள் தரைமட்டப்பட்டன. அப்போது தரைமட்டமாக்கப்பட்ட தேவாலயங்களில் இதுவும் ஒன்று. இந்த தேவாலயம் சரித்திர முக்கியத்துவம் பெற்றது. புனித தேசங்கள், வாக்களிக்கப்பட்ட தேசம் குறித்த வரைபடம் கண்டுபிடிக்கப்பட்டது இந்த தேவாலயத்தின் தான்.
 தொல்பொருள் ஆய்வாளர்களால் இந்த வரைபடம் இந்த தேவாலயத்தின் தரைதளத்தில் ஜோர்தானில் 250 ஆண்டுகளுக்கு முன்பு நில நடுக்கம் ஏற்பட்டபோது இந்த தேவாலயத்தின் தரைதளத்தில் இந்த வரைபடம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வரைபடத்தை தூரத்தில் இருந்து பார்த்தால் குதிரை போன்ற உருவம் போல காட்சி அளிக்கும்.
 புனித தேசங்கள் எவை, எருசலேம் கோட்டைச்சுவர், அதில் உள்ள வாசல்கள், ஜோர்தான் ஆறு, கலிலேயா கடல், சவக்கடல், 3 மாத குழந்தையாக இருந்த மோசே நாணல் பெட்டியில் வைக்கப்பட்டு வீசப்பட்ட நைல் நதி, இயேசு பிறந்த பெத்லஹேம், இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் உள்ளிட்ட விவரங்கள் இந்த வரைபடத்தில் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் வரைபடம் அழியாமல் இருக்கும் வகையில் மொசைக் கற்களால் வரைபடம் வேயப்பட்டுள்ளது.
 - ஜெபலின் ஜான்
 (தொடரும்...)
 
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நலம் தரும் அஸ்திர ஹோமம் - சோடச லட்சுமி யாகம்
பொருநை போற்றுதும்! 59
கொன்றைப்பூ விசேஷம்!
மண்ணில் தோன்றிய மாலோலன்!
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 26