22 செப்டம்பர் 2019

குரங்குகள் வழிபடும் குண்டலகர்ணேஸ்வரர்!

DIN | Published: 17th May 2019 02:12 PM

இறைவனை யானை, சிலந்தி, எறும்பு, ஆடு, பசு, பாம்பு , நண்டு போன்ற உயிரினங்கள் இறைவனை வழிபட்டு பேறுபெற்றதை நாம் அறிவோம். அதே போன்று குரங்குகளும் இறைவனை வழிபட்ட அற்புதமும் நடக்கிறது!
 ஆன்மா பாசத்தால் கட்டுண்டு அறியாமை இருளில் மூழ்கியுள்ளது. இந்த துன்ப இருளிலிருந்து இன்பமயமான ஞானவெளிச்சத்துக்கு கொண்டுவர வகை செய்யும் தலம்; தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 28 -ஆவது தலம்; காவிரி வடகரைத் தலங்களில் அப்பரால் பாடப்பட்ட பெருமைவாய்ந்த தலம்; அதிசயத்தின் அடிப்படையில் குரங்குகள் பூஜித்துப் பேறுபெற்ற திருத்தலம்தான் திருக்குரங்குக்கா!
 இங்குள்ள இறைவன் குண்டலகர்ணேஸ்வரர் எனவும் இறைவி ஏலாசெளந்தரி அம்பிகை எனவும் அழைக்கப்படுகின்றனர். சிறப்பு மூர்த்தியாக சிவபக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
 திருக்குரக்குக்கா தற்போது திருக்குரக்காவல் என வழங்கப்பெறுகிறது. இத்தலத்தில் செங்கழனி விநாயகர் அமைந்து அருள்கிறார். தலவிருட்சம் -அசோக மரம் மற்றும் வில்வ மரம். இங்குள்ள தீர்த்தம் - கணபதி நதி ஆகும்.
 திரேதாயுகத்தில் ராமபிரான் சிவபக்தனான ராவணனையும் பல அரக்கர்களையும் கொன்ற பாவம் தீர ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய எண்ணி, கயிலையிலிருந்து சிவலிங்கம் எடுத்துவருமாறு ஆஞ்சநேயரிடம் கூறினார். அதன்படி கயிலை சென்ற அனுமன் சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு வரும் வழியில், சுருட்டப்பள்ளி தலத்தில் சுயம்புலிங்கம் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். தன் கையிலிருக்கும் சிவலிங்கத்தை ஓர் அந்தணரிடம் கொடுத்துவிட்டு சுயம்புலிங்கத்தை தரிசிக்கச் சென்றார். அந்தணர் வேடத்தில் இருந்த பைரவர் அந்த சிவலிங்கத்தை ராமகிரி என்னும் இடத்தில் பிரதிஷ்டை செய்துவிட்டுச் சென்றுவிட்டார்.
 தரிசனம் முடிந்து அனுமன் திரும்பி வந்தபோது தான் கொணர்ந்த சிவ லிங்கம் பிரதிஷ்டையாகிவிட்டதைக் கண்டார். மறுபடியும் கயிலை சென்று சிவலிங்கம் கொண்டுவர நேரமில்லை என்பதால், காசிக்குச் சென்றார். அங்கே ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அதை எடுக்க முயன்றபோது, காசியின் காவல்தெய்வமான காலபைரவர் அனுமதி மறுத்துத் தடுத்தார். அதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் அனுமனின் வருகைக்காகக் காத்திருந்த ராமபிரான், குறித்த காலத்தில் அனுமன் வராததால் அகத்தியர் கூறியபடி சீதை செய்த மணல் லிங்கத்தைக் கொண்டு சிவபூஜை செய்துமுடித்தார்.
 அதன்பிறகு வந்த அனுமன் சிவபூஜை முடிந்துவிட்டதை எண்ணி சினம் கொண்டு, அந்த மணல் லிங்கத்தை அகற்ற முயன்று தோல்வி கண்டார். உடனே தனது வாலை லிங்கத்தின்மேல் கட்டி இழுக்க,அதுவும் முடியாமல் போனது. அப்பொழுது அங்கு தோன்றிய ஈசன், "அனுமனே, நீ சிவஅபசாரம் செய்தவனாகிறாய். அதனால் உனது பலத்தை இழந்துவிட்டாய். உனது தோஷம் நீங்க வடதிசைநோக்கி சிவத்தல யாத்திரை செய்வாயாக. இறுதியாக உனது சாபம் நீங்கும் தலம் உன் பெயரால் வழங்கப் படும்' என கூறி மறைந்தார்.
 அதன்படி, பல சிவத்தலங்களை வழிபட்ட அனுமன் திருக்கருப்பறியலூர் இறைவனையும் வழிபட்டு வரும் வழியில், அழகான நதியையும் அசோக விருட்சத்தையும் பூஞ்சோலைகளையும் கண்டார். அங்கேயே அமர்ந்து ஈசனை மனதில் நினைத்து தவம்செய்தார். அப்பொழுது ஓர்அசரீரி, "அனுமனே, உனக்கு சாப விமோசனம் கிடைக்க இங்கேயே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துவா' எனக் கூறியது. அவ்வாறே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து தொடர்ந்து சிவபூஜை செய்துவந்தார்.
 அனுமனை சோதித்து அருள்புரிய எண்ணிய இறைவன், அனுமன் பூஜை செய்யும்பொழுது அவரது காதிலிருந்த குண்டலத்தை மறையச் செய்தார். அதனைக் கண்ட அனுமன், "நம் குண்டலம் நம்முடன் ஒட்டியே பிறந்ததாயிற்றே; இதனைக் கழற்றமுடியாதே. இறைவன் நம்மை சோதனை செய்கிறார்' என்றெண்ணி, மற்றொரு குண்டலத்தை இறைவனிடம் சமர்ப்பணம் செய்தார். இதனைக் கண்டு மகிழ்ந்த இறைவன் அனுமனின் முன்னே தோன்றி முன்பிருந்த அனைத்து சக்திகளையும் கொடுத்து திருவருள் புரிந்தார். "அனுமனே, இவ்வூர் உனது பெயராலே திருக்குரங்குக்கா (திருக்குரக்காவல்) என்றே அழைக்கப்படும். நீ இங்கேயே இருந்து பக்தர்களுக்கு அனுக்ரக மூர்த்தியாய் நின்று குறைகளைத் தீர்ப்பாயாக! உன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட எம்மை வணங்குபவர்கள் தங்கள் பாவ வினைகள் நீங்கி, சகலசம்பத்துகளையும் பெற்று சுகமுடன் வாழ்வார்கள்' எனக்கூறி மறைந்தார் இறைவன் .
 இவ்வூரையடுத்து பத்து கி.மீ. சுற்றளவில் குரங்குகள் நடமாட்டமே கிடையாது. ஆனால் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இரண்டே இரண்டு குரங்குகள் சித்திரை அல்லது தை மாதத்தில் இங்கு வரும். இவை எங்கிருந்து வருகின்றன, எப்படி வருகின்றன என்பது யாருக்கும் தெரியாது.
 அந்த இரண்டு குரங்குகளும் இத்தலத்திலேயே இரண்டு நாள்கள் தங்கும். கணபதி நதியில் நீராடியபின் ஒரு குரங்கு வில்வ மரத்தில் ஏறி இலைகளையும் பூக்களையும் பறித்துப்போடும். மற்றொரு குரங்கு அதை சேகரித்துக்கொண்டு கருவறையில் உள்ள ஸ்ரீகுண்டலகர்ணேஸ்வரர்மீது சாற்றி வழிபாடு செய்யும். இது இன்றளவும் ஆண்டுக்கொரு முறை நடக்கும் அதிசயமாகும்.
 அமைவிடம்: வைத்தீஸ்வரன் கோயில் - மணல்மேடு பேருந்து தடத்தில் பட்டவர்த்தியில் உள்ளது.
 தொடர்புக்கு: 77088 20533.
 - அறந்தாங்கி சங்கர்
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நலம் தரும் அஸ்திர ஹோமம் - சோடச லட்சுமி யாகம்
பொருநை போற்றுதும்! 59
கொன்றைப்பூ விசேஷம்!
மண்ணில் தோன்றிய மாலோலன்!
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 26