வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

பொருநை போற்றுதும்! 39 டாக்டர் சுதா சேஷய்யன்

Published: 03rd May 2019 10:10 AM

பாவநாசத்திலிருந்து கிழக்காக ஓடிவருகிற பொருநையாள், அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சிப் பகுதிகளைத் தாண்டியதும், வடக்குமுகமாக வளைகிறாள். உத்தரவாஹினியாகப் பாய்ந்து, ரங்கசமுத்திரம், திருப்புடைமருதூர் பகுதிகளில் வலம் திரும்பி வளைந்து, கோடகநல்லூர் சேரன்மாதேவிப் பகுதிகளில் மீண்டும் கிழக்கு நோக்கிப் பயணிக்கிறாள்.
 பொருநையின் தென்கரை ஊர்களில், வீரவநல்லூரும் ஹரிகேசநல்லூரும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. வீரவநல்லூர் வேதாந்தம் (வி.வி.) சடகோபனால் (ஆரம்பகால நடிகர்) முன்னதும், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரால் (கதாகாலட்சேபம்) பின்னதும் பெயர் பெற்றவை.
 அட்டவீரட்டத்திற்கு அப்பாலொரு வீரட்டம்
 வீரவநல்லூரில் திருக்கோயில்கள் பல இருக்கின்றன. அருள்மிகு பூமிநாதர் கோயிலும் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் கோயிலும் அருள்மிகு திரெüபதியம்மன் கோயிலும் இவற்றுள் மிகுதியும் பிரசித்தி பெற்றவை. இந்த ஊரின் பெயருக்குக் காரணமே சாக்ஷôத் பூமிநாதர் எனலாம். பூமிநாதரான சிவபெருமான் வீரத்தால் அருள்புரிந்த இடம் என்பதால், வீரவநல்லூர் என்றழைக்கப்படுகிறது.
 மிருகண்டு முனிவருக்குச் சிவபெருமான் அருளால் மார்க்கண்டேயன் என்னும் மகன் பிறந்த கதை நினைவிருக்கிறதா? பதினாறு வயது மட்டுமே தனக்கு ஆயுசு என்னும் நிலையில், சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான் மார்க்கண்டேயச் சிறுவன். காலதூதர்கள் அவனைப் பற்ற முடியாமல் போக, காலதேவனான யமதர்மனே பாசக்கயிற்றை வீசியபடி வந்தான். தம்முடைய பக்தனைக் காலன் பிடிப்பதாவது என்னும் கோபத்தில், இடது காலால் காலனையே எட்டி உதைத்தார் சிவனார்; இதனால், "காலகாலன்' என்னும் திருநாமமும் பெற்றார். இவ்வாறு, யமனைச் சிவபெருமான் எட்டி உதைத்த தலம், திருக்கடவூர் என்பது வரலாறு. சிவபெருமானுடைய வீரம் செழித்த எட்டுத் திருத்தலங்களில் திருக்கடவூரும் ஒன்று என்பதால், அட்ட வீரட்டத் தலங்களில் (வீர ஸ்தானம் = வீரட்டானம் = வீரட்டம்) ஒன்றாகத் திருக்கடவூர் கொண்டாடப்படுகிறது.
 திருக்கடவூர் இருக்கட்டும்; மார்க்கண்டேயனுக்காகச் சிவபெருமானால் எட்டி உதைக்கப்பட்டு இறந்து வீழ்ந்தானே யமன், அவன் எங்கே போய் வீழ்ந்தான் தெரியுமா? பொருநைக் கரையில் வீரவநல்லூரில்!
 எப்படித் தெரியும் என்கிறீர்களா? பூமித்தாய் சொல்லித்தான் தெரியும். மார்க்கண்டேயக் கதையின் தொடர்ச்சி என்ன ஆனது என்று தேடினால் தெரியும்.
 யமன் வீழ்ந்துவிட்டான். யமனுடைய பணி நின்று போனது. வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் வாழும் இடமேது? பூமியின்மீது பாரம் ஏறத்தொடங்கியது. தவித்துப் போன பூமித்தாய், சிவனாரை வேண்டினாள். "இப்படியா செய்வீர்?' என்று வாதாடினாள். "யமன் எங்கே வீழ்ந்துகிடக்கிறானோ அங்கேயே சென்று வேண்டும்படி' சிவனார் பணிக்க, பொருநைக் கரையில் அவன் வீழ்ந்து கிடந்த இடத்தை அடைந்தாள். இறந்தவர் உடலின் அருகில் உற்றார் அழுது புரள்வதுபோல், இறந்துகிடந்த யமனின் சடலத் தருகே அமர்ந்து, சிவலிங்கம் பிடித்துத் துதித்தாள் பூமாதேவி. அவளின் கோரிக்கைக்குச் செவி சாய்த்த சிவனார், யமனை உயிர்ப்பித்தார். வீரத்தால் வீழ்த்தியவனுக்கு மீண்டும் வீரத்தால் உயிர் கொடுத்த இடம் என்பதாலும், உலகச் சமன்பாடு நன்னிலைக்குத் திரும்பக் காரணமான இடம் என்பதாலும் வீரவநல்லூர் ஆனது. யமதர்மனுக்கு உயிர் கிடைத்த இடம் என்பதாலும், லோக தர்மம் மீண்ட இடம் என்பதாலும் தர்மநல்லூர் என்றும் தர்மபுரம் என்றும் பெயர்கள் வழங்கியுள்ளன.
 பூமித்தாய் வழிபட்டதால், இவ்வூர்ச் சிவனார், அருள்மிகு பூமிநாதர் ஆகிவிட்டார். அம்பிகை அருள்மிகு மரகதாம்பிகை.
 பாண்டிய நாட்டின் பகுதியாக நெல்லைச் சீமை விளங்கிய காலத்தில், இளம்வழுதி மாறன் என்னும் பாண்டிய மன்னனைக் கொடியவன் ஒருவன், சூழ்ச்சியால் வென்று நாட்டையும் படைகளையும் தனதாக்கிக் கொண்டான். மனம் நொந்துபோன பாண்டியன், பொருநைக் கரையின் அடர்வனக் காடுகளில், தன்னுடன் வந்துவிட்ட சின்னஞ்சிறு படையுடன் மறைந்து வாழ்ந்துவந்தான். மனம் நெகிழ, எப்படியாவது தனது நாட்டை மீட்கவேண்டும் என்று இறைவனை இறைஞ்சியபடி வாழ்ந்தான்.
 மணிமுத்தாறு தாமிரவருணிக் கரைகளில் சிந்தனையுடன் திரிந்த மன்னனின் கண்களைக் கவர்ந்தது ஒரு காட்சி. வெள்ளைவெளேரென்று துள்ளிய சின்னஞ்சிறு முயலொன்று, காட்டு நாயை எதிர்த்து நின்றதுதான் அக்காட்சி. இப்படியும் வீரமா என்று அதிர்ந்துபோன பாண்டியன், தனக்கும் ஏதொவொரு செய்தி அதிலிருப்பதை உணர்ந்துகொண்டு, அருகிலுள்ள பகுதிகளில் அலைந்தபோது, பூமித்தாயால் பிரதிஷ்டை செய்யப்பெற்றிருந்த பூமிநாதச் சிவலிங்கத்தைக் கண்டான். சிவனாரின் திருமுன்அமர்ந்து மனமுருகிப் பிரார்த்தித்தான்.
 தர்ம நியாயத்திற்குக் கட்டுப்பட்டவன் என்பதால் பாண்டியனுக்கு உதவுவதற்குச் சிவனாரும் மனமிரங்கினார். அன்றிரவு அவனுடைய கனவில் தோன்றி, அவனிடமிருந்த சிறிய படைக்கு முறையாகச் சில நாட்கள் பயிற்சி கொடுத்து, பின்னர் ஆட்சியைப் பறித்துக் கொடுமை செய்திருந்த வகுளத்தாமனை எதிர்க்கும்படியும், அவ்வாறு எதிர்க்கும்போது தாமே உதவுவதாகவும் உரைத்தார். முயல் காட்டு நாயை எதிர்ப்பதுபோல், சின்னஞ்சிறு படை கொண்ட இளம்வழுதி மாறன், பெருஞ்சேனையைக் கட்டுப்படுத்தியிருந்த வகுளத்தாமனை வென்றான். வீரமாறன் என்னும் பெயரையும் பெற்றான்.
 வீரமாறன் வரலாற்றுக்குக் காரணமானதால், அந்த மன்னனின் பெயரால் வீரவநல்லூர் என்று இவ்வூர் அழைக்கப்படுவதாகவும் சிலர் சொல்வதுண்டு. நோய் நொடிகள் தீரவும், மரண பயம் நீங்கவும், இழந்த பதவி "செல்வம்' செல்வாக்கு ஆகியவற்றைத் திரும்பப்பெறவும் அருள்மிகு பூமிநாதருக்கு நேர்ந்துகொண்டால் நடக்கும் என்பது காலங்காலமாக உள்ள நம்பிக்கை. அருள்மிகு பூமிநாதர் கோயிலுக்குச் சற்று மேற்கே இருக்கும் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், காலத்தால் பிற்பட்டது. ஸ்ரீதேவி பூதேவி உடனாய சுந்தரராஜர், நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
 நல்லிசை முத்திரையான நல்லூர்
 வீரவநல்லூருக்கு வடக்கே ஹரிகேசநல்லூர். சமீப காலங்களில், ஹரிகேசவநல்லூர் என்று பலராலும் அழைக்கப்படுகிற ஊர்.
 "ஹரிகேசன்' என்பது சிவபெருமானுடைய பெயர். "பொன்னிற கேசத்தை உடையவர்' என்பதைக் குறிக்கும் பெயர். ஜடாமுடிதாரியான சிவனுடைய கேசம், செம்பட்டையாகத் தங்க நிறத்தில் தகதகக்கும். ஹிரண்யபாஹு (பொன்னிறத் தோளர்), ஹரிகேச(பொன்னிறக் கேசத்தார்) என்று சிவசஹஸ்ரநாமம் போற்றுகிறது. பொறிகளையும் புலன்களையும் கட்டுப்படுத்தியவர் என்பதாலும், "செந்தலையர்' என்னும் இப்பெயரைச் சிவனாருக்கு ரிக்வேதமும் வாஜஸனேய சங்கிதையும் தருகின்றன. பொன் கிரணங்களைத் தருவதால், சூரியதேவனுக்கும் இப்பெயர் சிலசமயம் உரியதாம்.
 - தொடரும்...
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அஷ்டமிக்கு ஏற்றம் தந்த அச்சுதன்!
கவலைகள் போக்கும் கண்ணாத்தாள்!
பொருநை போற்றுதும்!55 டாக்டர் சுதா சேஷய்யன்
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 22
உளமே உயர்வின் தளம்