வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

சகோதர பாசத்தின் முன்னோடிகள்

DIN | Published: 03rd May 2019 09:34 AM

21- 48 ஆவது வசனம் சத்தியம் அசத்தியம் நன்மை தீமைகளைப் பிரித்தறிந்து இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வரும் முத்தன்மைகளை உடைய தவ்ராத் வேதத்தை மூசாநபி ஹாரூன் நபி ஆகிய இரு சகோதரர்களுக்கு அருளியதை அறிவிக்கிறது. சகோதரர்களுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும். ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதை இந்த இறையருள் நிகழ்ச்சி நினைவுறுத்துகிறது. 23-48 ஆவது வசனமும் இச்சகோதர நபிமார்களுக்குத் தெளிவாக அதிகாரங்களையும் அத்தாட்சிகளையும் அளித்ததாக அறிவிக்கிறது.
 இள வயதில் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பொறுப்பேற்று வளர்த்த பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் வயது முதிர்ந்து வணிகமும் மந்தமான நிலையில் கலங்கியபொழுது அபூதாலிபின் சகோதரி ஆத்திகா (ரலி) சகோதரரின் மகன் மாநபி (ஸல்) அவர்களை அரேபிய பெரும் வணிக பெண்மணி கதீஜா (ரலி) அவர்களிடம் அழைத்துச் சென்று பணியில் அமர்த்தினார்கள்.
 அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் மகள்களான ஆயிஷா (ரலி) அஸ்மா (ரலி) இருவரும் சகோதர பாசத்திற்கும் பரிவிற்கும் அன்பு பரிமாற்றத்திற்கும் எடுத்துக்காட்டானவர்கள். அவர்களின் தந்தை அபூபக்கர் சித்தீக் (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் சென்ற பொழுது வீட்டிற்கு வந்து பேத்திகளை விசாரித்த தந்தையின் தந்தை பாட்டனார் அபூகுஹாபா சகோதரிகளின் உணவிற்கு உரியதை வைக்காது சென்ற மகளைக் கண்டித்தார். தந்தையை கண்டித்த தாத்தாவிற்கு சகோதரிகள் இருவரும் சாமர்த்தியமாக பதில் கூறி சாதுர்யமாக பேசி பாட்டனாரைச் சமாளித்ததும் சகோதர பாசம் சாதிக்கும் என்பதைச் சாற்றும் சான்றுகள்.
 அல்வலீத் இப்னு வலீத் (ரலி) அவரின் சகோதரர் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களுக்கு ஒரு மடல் எழுதினார். அதில் சகோதரரின் உண்மையான உயர்வு எதில் இருக்கிறதோ அதனை அந்த உயர்விற்காகவும் அதன் வெற்றிக்காகவும் அந்த வெற்றியின் நன்மையான விளைவைத் துய்க்கவும் துஆ செய்தார்கள். இம்மடலைப் படித்ததும் காலித் இப்னு வலீத் (ரலி) வள்ளல் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இஸ்லாத்தை ஏற்று ஏற்றதின் ஏற்றத்தைச் சகோதரர் அல்வலீத் இப்னு வலீத் (ரலி) அவர்களுக்குப் பதில் எழுதினார்கள். சகோதரர்களுக்குள் ஆலோசனை பரிமாறுகையில் அக்கறையோடு அனுபவ முதிர்ச்சியோடு தக்க அறிவுரையை மிக்க கவனத்துடன் கூற வேண்டும். முயற்சிகளின் முடக்கமின்றி முன்னேற தேவையான தகவல் பரிமாற்றம் தடையின்றி நடைபெற வேண்டும்.
 தந்தைக்கு அடுத்து மூத்த சகோதரனை முன்னிலைப் படுத்த வேண்டும். தம்மினும் மூத்த சகோதரர்களை மதித்து நடக்காதவன் நம்மைச் சார்ந்தவன் இல்லை என்று இயம்பினார்கள் நயமிகு நாகரிகத்தை நமக்குக் கற்பித்த நபி (ஸல்) அவர்கள். இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்களின் பெயரன்களில் ஒருவர் ஹதீஸ் (நபி மொழி) கலையில் மிக்க வல்லுநர். எனினும் எக்கேள்விக்கும் பதில் அளிக்கும் முன் அக்கலையில் அவரைப் போல தேர்ச்சி பெற்ற அவரின் அண்ணனுக்குக் கண்ணியமும் மரியாதையும் கொடுத்து அவரிடம் கலந்து ஆலோசிப்பார்.
 தம்பிகளைக் கருணையோடு அரவணைத்து செல்வது அண்ணனின் பொறுப்பாகும். தம்பிகளின் வளர்ச்சியில் தளர்ச்சியில்லாத பாசத்தோடு கவனம் செலுத்த வேண்டும். குறைநிறைகளைக் கவனித்து நிறைவான செயல்களை நிறை மனதுடன் பாராட்ட வேண்டும்; குறை களைய அறிவுரை கூறி கூறியபடி நடப்பதைக் கண்காணிக்க வேண்டும்; நடக்காவிடில் கண்டித்து திருத்த வேண்டும். தம்மினும் இளைய சகோதரர்களிடம் கருணை காட்டாதவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தது அபூதாவூத் நூலில் உள்ளது.
 சகோதரர்களிடையே சகிப்பு தன்மை வேண்டும். விட்டு கொடுக்கும் மனப்பான்மை சகோதர பாசம் தொட்டு தொடர துணைபுரியும். கருத்து வேறுபாடு ஏற்பட்டாலோ வாக்குவாதம் முற்றினாலோ மனக்கசப்பு சண்டை உருவானாலோ அன்றே சமரசம் செய்து இணக்கமாகி விட வேண்டும். உரிமையோடு சகோதர உறவைப் புதுப்பித்து கொள்ள வேண்டும். விவகாரத்தால் விரிசல் ஏற்பட விடக் கூடாது. பகையை வளர்த்து குடும்பம் நகைப்புக்கு உள்ளாகும் நலிவை உண்டாக்க கூடாது. குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற சகோதர பாசமும் பரிவும் ஒற்றுமையும் அவசியமான அடிப்படை.
 ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பாக அளித்த ஆடையை உமர் (ரலி) அவர்களின் சகோதரருக்கு அன்பளிப்பு செய்தார்கள்.
 ரத்த உறவுகளோடு இணக்கமாக வாழ்வோம். வணக்கம் புரியும் வல்லோன் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அஷ்டமிக்கு ஏற்றம் தந்த அச்சுதன்!
கவலைகள் போக்கும் கண்ணாத்தாள்!
பொருநை போற்றுதும்!55 டாக்டர் சுதா சேஷய்யன்
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 22
உளமே உயர்வின் தளம்