வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

உத்தமன் உறையும் உபயவேதாந்தபுரம்!

DIN | Published: 03rd May 2019 10:12 AM

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்காவில் உள்ளது உபயவேதாந்தபுரம் எனும் திருத்தலம். 108 வைணவ திவ்ய தேசங்களில் திருக்கண்ணபுரத்திற்கும், திருச்சிறுபுலியூருக்கும் நடுவில் உள்ளதால் இதனை அபிமான தலம் என்று பெரியோர்களும் சான்றோர்களும் கூறுகிறார்கள். உபயவேதாந்தம் எனப்படும் வடமொழி வேதாந்தத்தையும், தமிழ்ழொழி வேதாந்தத்தையும் நடைமுறையில் கொண்டு திகழ்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு ஒரு காலத்தில் வசித்து வந்ததால் இவ்வூர் "உபயவேதாந்தபுரம்' என்று அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது. "உபயவேதாந்தி', "உபயவேதாந்தசாரியார்' போன்ற பட்டங்களை குறிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தும் வழக்கம் உருவானதற்கு, இவ்வூரும் ஒருவகையில் காரணம் எனலாம்.
 அருகிலுள்ள போலகம் என்ற கிராமத்திலிருந்து தமிழ் வித்வான்களும், வேதவித்துக்களும் உபயவேதாந்தபுரத்திற்கு வந்திருந்து இங்குள்ள இருவகை பண்டிதர்களுடன் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் உண்டு. செவிவழிச்செய்திகளின்படி, கவிகாலமேகப்புலவர், வியக்கியான சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை போன்றோர் இக்கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்கள். திருமங்கையாழ்வார் திருப்பாதம் பட்ட புண்ணிய பூமி. தமிழ் அறிஞர் உ.வே. சாமிநாத ஐயர், மு. ராகவ ஐயங்கார் ஆகியோர்கள் ஓலைச்சுவடிகள் தேடிக் கொண்டு இங்கு வந்திருக்கிறார்களாம். நூலகத் தந்தை எனப் புகழப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் இவ்வூரைச் சேர்ந்தவரே. இன்னும் பல தகவல்கள் இவ்வூரைப்பற்றி பேசப்படுகின்றது.
 இவ்வளவு புகழுடைய இந்த கிராமத்தில் உள்ளதுதான் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீவரதராஜப்பெருமாள் கோயில். ஒரு வைணவ ஆலயத்திற்கு உரிய அனைத்து சந்நிதிகளுடன், ஆழ்வார்கள், ஆசார்யர்கள் புடை சூழ புஷ்கரணி, தல விருட்சம் ஆகியவற்றுடன் கூடி பூஜைகள், விழாக்கள், வருடாந்திர பிரம்மோற்சவம் என எதிலும் குறைவில்லாமல் சென்ற நூற்றாண்டில் பிற்பகுதிவரை நடந்து வந்திருக்கிறது. வேத, திவ்ய பிரபந்தகளின் இசை முழக்கங்கள் எக்காலத்திலும் ஒலித்து கொண்டிருக்குமாம். "வரதராஜன்' என்ற பெயருக்கு ஏற்ப தன்னை அண்டியவர்களுக்கு எக்காலத்திலும் வரமளிப்பவராக இங்கு வீற்றிருக்கும் பெருமாள் அன்றும், இன்றும் திகழ்கின்றார். காஞ்சி மகாசுவாமிகள் இவரை தரிசிக்க வந்ததாகச் சொல்லப்படுவது உண்டு.
 கால சுழற்சியில் நிலைமைகள் மாறிவிட்டன. தற்போது இவ்வூர் கிராமவாசிகள் மற்றும் வெளியூருக்கு குடிபெயர்ந்தவர்கள் தங்கள் ஊரின் பெருமையை அறிந்தும், கேள்விபட்டும் பழைய நிலைக்கு ஆலயத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் போனது வந்ததுகளை சரி செய்து வர்ணங்கள் தீட்டி ஆலயத்தில் பூஜை வழிபாட்டினை தொடர மிகுந்த ஆவலில் அதற்கான முயற்சிகளில் முழு மூச்சாக இறங்கியுள்ளனர். 1951 -ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆலய சம்ப்ரோக்ஷணத்தை வரும் ஜூன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து செயல்களையும் திறம்பட நடத்துவதற்கு "உபயவேதாந்தபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் கைங்கர்ய சபா' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 இந்த விகாரி வருடம், எம்பெருமான் வரதனுக்கே உரிய வருடமாகும். ஆம், இந்த ஆண்டில்தான் 40 ஆண்டுகள் கழித்து காஞ்சியில் அத்திவரதர் குளத்திலிருந்து வெளிவந்து காட்சியளிக்க இருக்கின்றார். அவர் திரும்பவும் ஜலவாசத்திற்கு செல்லுமுன் அனைத்து ஆலயங்கள், மேம்படவும், உலகத்திற்கு நல்லது நடக்கவும் திருவுள்ளம் கொண்டு அருள்புரிய உள்ளார். எனவே, அதே திருநாமத்துடன் திகழும் உபயவேதாந்தபுரம் வரதராஜ கோயிலிலும் நல்லது நடக்கும் என நம்பிக்கை கொள்வோம். அதை நிறைவேற்றுவது திருமால் அடியார்களின் கடமை.
 உபயவேதாந்தபுரம் எனும் பாலூர் கிராமம் பேரளம். காரைக்கால் செல்லும் வழியில் மேனாங்குடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
 தொடர்புக்கு: சென்னை : 97910 89064 / 94455 38812/ உ.வே.புரம்: 94877 64156.
 - எஸ். வெங்கட்ராமன்
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அஷ்டமிக்கு ஏற்றம் தந்த அச்சுதன்!
கவலைகள் போக்கும் கண்ணாத்தாள்!
பொருநை போற்றுதும்!55 டாக்டர் சுதா சேஷய்யன்
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 22
உளமே உயர்வின் தளம்