செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

அருளாட்சி புரியும் அன்னை வாசவி!

DIN | Published: 03rd May 2019 10:15 AM

ஆந்திர மாநிலம் "பெனு கொண்டா' நகரில் குசுமச் செட்டி, குசுமாம்பிகை தம்பதியர் தர்மநெறி தவறாமல் இல்லறத்தை நடத்தி வந்தனர். அவர்களுக்குக் குழந்தைப்பேறு இல்லாமல் போக, வேத வித்தகர்களின் ஆலோசனைப்படி, "புத்திர காமேஷ்டி' யாகம் செய்து "விருபாக்ஷன்' என்ற ஆண் மகவையும் "வாசவாம்பாள்' என்ற பெண் குழந்தையையும் பெற்றெடுத்தனர்.அவளை "வாசவி' என்று பிரியமாக அழைத்து மகிழ்ந்தனர். அவள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பேரழகு மிக்கவளாகத் திகழ்ந்தாள்.
 அச்சமயம், ராஜ மகேந்திரபுரியை விஷ்ணுவர்த்தனன் என்ற அரசன் நாடெங்கும் திக்விஜயம் செய்து வருகிறபோது, அழகிய வடிவம் கொண்ட வாசவியைக் கண்டு மனம் மயங்கினான். அவளைத் தனக்கு திருமணம் செய்து தரும்படி குசுமச் செட்டியைக் கட்டாயப்படுத்தினான்.
 அரசன் விஷ்ணுவர்த்தனனின் அந்தப்புர அழகுப் பதுமைகளுள் ஒருத்தியாக வாழ மறுத்தாள் வாசவி. வெகுண்ட அரசன் தொல்லைகள் பல தந்தான். இளம் வாசவியின் கருத்துக்கு 102 கோத்திர வைசியர்கள் ஆதரவளித்தனர். மற்ற 612 கோத்திர வைசியர்கள் அரசனுக்குப் பயந்து ஊரை விட்டு வெளியேறி நாட்டின் பல திசைகளுக்கும் சென்று வாழத்தொடங்கினர்.
 அந்த 102- கோத்திரப் பெரியவர்களும் வாசவியும் தங்கள் குலகுருவிடம் ஆலோசனை கேட்டு அனுமதி பெற்று, அவர் கூறியபடி, தங்கள் பொறுப்புகள் அனைத்தையும் தங்கள் மக்களிடம் ஒப்புவித்துவிட்டு, 102 ஹோம குண்டத்தை ஏற்படுத்தி, அதனை மும்முறை வலம் வந்து, மற்ற வைசிய சிறுவர்களுக்கு பல நல்லுபதேசங்களைக் கூறியபின், வாசவி உட்பட அனைவரும் ஹோம குண்டத்தில் குதித்து உயிர்த்தியாகம் செய்தனர். மன்னன் விஷ்ணுவர்த்தனின் சிரசும் ஆயிரம் சுக்கலாக வெடித்துச் சிதறி மாண்டு போனான்.
 வாசவி குதித்த ஹோம குண்டத்திலிருந்து பிரகாசமான பேரொளி ஒன்று தோன்றி மறையக் கண்ட வைசிய சிறுவர்கள் அன்றிலிருந்து வாசவியை "வாசவி கன்னிகா பரமேஸ்வரி' என்கிற பெயரில் தங்கள் குலதெய்வமாக வணங்கி வழிபட்டு வருகின்றனர்.
 தங்கள் குலப்பெண்ணிற்காக தங்கள் இன்னுயிரையும் துச்சமென மதித்துத் தியாகம் செய்துவிட்ட 102 -தம்பதியினரை நினைக்கும்போது வியப்பே ஏற்படுகிறது.
 இந்நிகழ்ச்சி, நடந்த பெனுகொண்டா நகரம், ஆந்திர மாநிலத்தில் "ரியாலி' என்னும் நகருக்கு அருகே உள்ளது. 102 குடும்பத்தார்களுக்காக ஹோம குண்டங்கள் வளர்க்கப்பட்ட இடங்களில் பெரிய தூண்கள் வைக்கப்பட்டு அந்தந்தக் கோத்திரத்தின் பெயரும் தம்பதிகள் பெயரும் அதில் பொறிக்கப்பட்டுள்ளன.
 இன்றும் வைசிய இல்லங்களில் பிறக்கும் குழந்தைக்குப் பெயர் சூட்டும்போது குழந்தையின் பெயருக்கு முன்னால் அவர்கள் வம்சத்தில் குண்டத்தில் இறங்கியவர்களின் பெயரின் முதல் இரண்டு எழுத்துகள் சேர்த்து வைப்பது வழக்கமாக உள்ளது.
 மனிதனாய் பிறந்து தெய்வமாக மாறிவிட்ட கன்னித்தெய்வம் "வாசவி கன்னிகா பரமேஸ்வரி'க்குத் தாங்கள் வாழும் இடங்களில் எல்லாம் அழகிய கோயில்கள் அமைத்து, அன்னையின் எழில்மிகு திருக்கோல வடிவத்தைப் பிரதிஷ்டைச் செய்து பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வருகிறார்கள். வருடந்தோறும் விழாக்காலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
 "அகில பாரத ஸ்ரீ வாசவி பெனுகொண்டா டிரஸ்ட்' என்ற அமைப்பினர் அன்னை வாசவிக்கு 185 அடி உயரத்தில் சதுர்புஜங்களோடு நின்ற திருக்கோலத்தில் அருளாட்சி புரியும் மாபெரும் சிலையொன்றை நிறுவியுள்ளனர். வேண்டியவருக்கு வேண்டிய வரம் அருளும் அன்னை வாசவியின் திருப்பாதம் பணிந்து நலம் பெறுவோம்.
 தொடர்புக்கு: 84382 68568.
 - டி.எம். இரத்தினவேல்
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆடிப் பௌர்ணமியில் அகிலாண்டேஸ்வரி தரிசனம்!
மலைக்க வைக்கும் மகோன்னத சிற்பங்கள்!
பொருநை போற்றுதும்!49 டாக்டர் சுதா சேஷய்யன்
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 16
நிகழ்வுகள்