பினாங்கு தண்ணீர்மலை முருகன்

தமிழர்களின் கோயில்கள், அயல்நாடுகளிலும் விரிந்து பரந்துள்ளன. தமிழர்கள் தாங்கள் குடியேறிய இடங்களில் எல்லாம் தங்களின் விருப்பமான தெய்வங்களுக்கு ஆலயம் எழுப்பி வழிபடத் தொடங்கினர்.
பினாங்கு தண்ணீர்மலை முருகன்

தமிழர்களின் கோயில்கள், அயல்நாடுகளிலும் விரிந்து பரந்துள்ளன. தமிழர்கள் தாங்கள் குடியேறிய இடங்களில் எல்லாம் தங்களின் விருப்பமான தெய்வங்களுக்கு ஆலயம் எழுப்பி வழிபடத் தொடங்கினர். அந்த வகையில், மலேசிய நாட்டின் புகழ்பெற்ற ஆலயமாகத் திகழ்வது, பினாங்கு மாநிலத்தில் உள்ள, தண்ணீர்மலை முருகன் திருக்கோயில் ஆகும்.

 பினாங்கு தீவு
 மலேசிய நாட்டின் பதின்மூன்று மாநிலங்களில் ஒன்றாக விளங்குவது பினாங்கு தீவு ஆகும். மாலாக்கா நீரிணையில் அமைந்த நிலப்பகுதி, 305 சதுர கி.மீ. பரப்புள்ளது. இங்கு 7 லட்சம் பேர் வசிக்கின்றனர். தமிழர்கள் அதிகம் வாழும் மாநிலமாக பினாங்கு திகழ்கின்றது. இதன் தலைநகரம் ஜார்ஜ் டவுன். இங்குதான் தண்ணீர்மலை முருகன் ஆலயம் உள்ளது.
 இயற்கை வளம் கொண்ட இந்த தீவில், தண்ணீர்மலை முருகன், பினாங்கு மலை, தேசிய பூங்கா, கேக் லோக் சி புத்தர் ஆலயம், செபராங் பிறை, ஜார்ஜ் டவுன் என பல்வேறு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.

 தமிழர்கள் குடியேற்றம்
 ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்காலம் முதல் தமிழர்களின் வரலாறு தொடங்குகிறது. கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என புகழப்படும் சோழமன்னன் புலி கொடி நாட்டி வென்ற கடாரம் என்ற ஊர், பினாங்குத்தீவின் அருகேயுள்ள, கிடா என்ற மாநிலத்தில் அமைந்துள்ளது.
 கி.பி. 1786 -இல் ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழர் குடியேற்றம் தொடங்கியது. 1802 -இல் தமிழகத்துப் போர்க் கைதிகள் இத்தீவை வளமாக்கும் விதமாக கப்பலில் நாடு கடத்தப்பட்டு தீவின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டனர். நிதி நிறுவனங்கள் அமைத்து நிதி நிர்வாகம் மேற்கொண்ட நகரத்தார் அதிகம் வாழும் பகுதியாகவும் பினாங்கு விளங்குகின்றது. பிறகும் ஏராளமான தமிழர்கள் கப்பல் மூலம் குடியமர்த்தப்பட்டனர். மருதுபாண்டியனின் மகன் துரைசாமி, பினாங்கு தீவிற்கு கடத்தப்பட்டதை வரலாறு கூறுகிறது.

 தண்ணீர்மலை முருகன்
 தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் அமைந்துள்ளதைப் போன்று, மலேசிய நாட்டிற்கு மூன்று படைவீடுகள் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன. அவை: பத்துமலை, தண்ணீர்மலை, கல்லுமலை ஆகும். பினாங்கு தண்ணீர்மலை முருகன்ஆலயத்தில் தைப்பூச விழாக் காலத்தில், தமிழர்கள் மட்டுமன்றி மலேயர்களும், சீனர்களும் அதிக அளவில் கலந்து கொண்டு வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது.

 தலவரலாறு
 கி.பி. 1810 -இல் நகரத்தார் நிதி நிறுவனங்கள் நடத்தி வந்தனர். இவர்கள் தங்களுக்கென தனி பாலதண்டாயுதபாணி ஆலயத்தை எளிமையாகத் தொடங்கி கி.பி. 1854- இல் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் தற்போதைய தண்ணீர்மலை அடிவாரத்தில் தனி ஆலயத்தை எழுப்பினர். இது தவிர, இவர்கள் காலத்தில் தண்ணீர்மலை அடிவாரத்தில் வழிபட்டு வந்த வேல், தண்ணீர்மலையின் உச்சியில் அமைந்து, ஆன்மிகப் புகழைப் பரவச் செய்து வருகிறது.

 தொடக்க காலத்தில் அமைச்சர்களுக்கு இணையாகப் புகழ்பெற்று வந்த செல்வந்தரான ஆறுமுகம் பிள்ளை, தண்ணீர் மலை முருகன் ஆலயத்திற்குத் திருப்பணி செய்துள்ளார். இதே போல, பினாங்கு மலையுச்சியின் கொடிமலை முருகன் ஆலயமும் இவரால் அமைக்கப்பட்டது.

 என்றாலும், தண்ணீர்மலை முருகன், கி.பி. 1991 -ஆம் ஆண்டிற்குப் பிறகே வெளியுலகிற்குப் பெரிய அளவில் தெரியவந்தது. அதற்கு முன்பு, பாலதண்டாயுதபாணி இளைஞர் குழுவின் மூலம் நில அளவையாளர் குவனராஜீ, டத்தோ இராஜ சிங்கம் மூலமாக குடமுழுக்கு செய்யும் பணி தொடங்கியது. இதற்கு இந்து அறப்பணி வாரியமும், புதிய கோயில் எழுப்ப முன்வந்தது. இதற்கு இம்மாநில துணை முதல்வர் டாக்டர். இராமசாமியும் உதவிபுரிந்தார்.

 மலையின் இடைப்பகுதியில் இருந்த முருகன் ஆலயம், புதிய முயற்சியின் பயனால், மலையுச்சி தேர்வு செய்யப்பட்டது. சமன்படுத்தப்பட்ட அங்கே 513 படிகளைக் கொண்ட பிரம்மாண்ட ஆலயம், சுமார் 400 அடி உயரத்தில் ஏழுநிலை ராஜகோபுரமும் கொண்டு அமைக்கப்பட்டது. இம்மலையின் இடைப்பகுதியில் ஐயப்பன் ஆலயமும் அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்டது.

 எளிதாக மலையேற சிறுசிறு படிகள் அமைந்துள்ளன. இடையிடையே தண்ணீர் ஊற்றுகள் ஓடிக் கொண்டிருக்கின்றது. மலையடிவாரத்தில் கணேசர் ஆலயம் நம்மை வரவேற்கிறது. பினாங்கில் வாழும் தமிழர்களின் காவல் தெய்வமாகவும் , தமிழர்களின் இஷ்டதெய்வமாகவும் விளங்குவது இந்த முருகனின் சிறப்பை உணர்த்துகிறது.

 தண்ணீர்மலை
 பினாங்கு நகரின் உயரமான மலையே தண்ணீர் மலையாகும். தண்ணீர் ஊற்றுகள் நிறைத்துள்ளதால் இம்மலைக்கு இப்பெயர் உண்டானது. உச்சியில் உள்ள முருகப்பெருமான் நின்ற கோலத்தில் எழிலான வடிவில் திருச்செந்தூர் முருகனை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளார்.

 மலேசியாவில் தைப்பூசத்தன்று இக்கோயிலுக்கு கோலாலம்பூர் கூட்டரசு, சிலாங்கூர், பேராக், பினாங்கு, ஜொகூர் ஆகிய மாநிலத்தற்கு அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. இசுலாமிய நாட்டில் அமைந்துள்ள அரசுகள், இந்து சமயத்திற்குத் தரும் மரியாதையாக இது போற்றப்படுகிறது. தைப்பூசத்தன்று பல்லாயிரக்கணக்கான மக்கள், ஜாதி மத பேதமின்றி கூடி வழிபடுவது, கண்கொள்ளாக் காட்சியாகும்.

 அமைவிடம்: மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூர் நகரில் இருந்து வடமேற்கே 295 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நல்ல சாலை வசதி உள்ளது. பன்னாட்டு வானூர்தி நிலையமும் உள்ளது.
 - பனையபுரம் அதியமான்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com