தொழுகை அழைப்பு - அதான்

மாநபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்து குன்றுகள் சூழ்ந்த அந்த பாலைவன நகரில் பரவலாக பல்வேறு பகுதிகளில் குடியேறினர். குடிசைகள் கட்டி வாழ்ந்தனர்.
தொழுகை அழைப்பு - அதான்

மாநபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்து குன்றுகள் சூழ்ந்த அந்த பாலைவன நகரில் பரவலாக பல்வேறு பகுதிகளில் குடியேறினர். குடிசைகள் கட்டி வாழ்ந்தனர். அவர்கள் தொழுகை நேரம் அறிந்து கூடி தொழ கூடுவதற்கு ஏற்பாடு செய்ய நிர்ப்பந்தம் உண்டானது. நீதர் நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் ஆலோசனை சேட்டார்கள்.
 சில தோழர்கள் கொடியை நட்டு தொழுகை நேரத்தை நினைவு படுத்தலாம் என்றனர். கொடி நடப்பட்டிருப்பதைத் தேடி வந்து பார்ப்பது எளிதன்று என்று ஏற்கபடவில்லை. மணியடித்து அறிவிக்க சொன்ன ஆலோசனையும் கிறித்துவத்தில் கடைபிடிக்கப்படுவதால் நடைமுறையில் குழப்பம் ஏற்படுத்தும் என்று ஏற்கப்படவில்லை. சிலர் கொம்பு வைத்து குழலூதுவது போல் சங்கு ஊத உரைத்தனர். யூத முறை என்பதால் இதுவும் ஏற்படையதல்ல என்று தள்ளப்பட்டது. நெருப்பு மூட்டி நினைவுபடுத்துவது மஜூஸிகளின் வழக்கம் என்பதால் நிராகரிக்கப்பட்டது. உமர் (ரலி) உரைத்தபடி குரல் வளமுடைய பிலால் (ரலி) தெரு தெரு, பகுதி பகுதியாக சென்று மக்களைக் கூடி தொழ வருமாறு கூவி அழைத்தார். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸஈ. இதனை உறுதிபடுத்துகின்றனர் இமாம் நவவீ (ரஹ்) இமாம் இப்னு ஹஜர் (ரலி)
 ஒருநாள் இரவு உமர் (ரலி) அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரலி) முதலிய நபி தோழர்கள் இன்று சொல்வது போல் பாங்கு- அதான் அறிவிப்பதைக் கனவில் கண்டார்கள். அம்முறையே நடைமுறை படுத்தப்பட்டது. வைகறை- சுபுஹ் தொழுகை அழைப்பில் தூக்கத்தைவிட தொழுகை மேலானது என்னும் அதிக அழைப்பைச் சேர்த்து 17 சொற்றொடர்களும் மற்ற தொழுகை அழைப்புகளில் 15 சொற்றொடர்களும் மற்ற தொழுகை அழைப்புகளில் 15 சொற்றொடர்களும் சொல்லப்படும். இந்த தொழுகை அழைப்பிற்கு அரபியில் அதான் என்றும் பார்சியில் பாங்கு என்றும் பெயர். அதான் சொல்பவருக்கு முஅத்தின் என்றும் பெயர். அல்லாஹ்வின் பக்கம் அழைத்து நற்செயல் புரிந்தவரை விட அழகிய சொல்லுடையவர் யார் என்ற எழில் மறையின் 41-33 ஆவது வசனப்படி முஅத்தின் நற்சொல் கூறி அல்லாஹ்வைத் தொழ அழைத்து நற்செயல் புரிகிறார்.
 உளு இன்றி பாங்கு கூறுவது கூடாது என்று கோமான் நபி (ஸல்) அவர்கள் கூறியதை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- திர்மிதீ. பாங்கு சொல்பவர் ஈர்க்கும் இனிய குரலில் உரக்க பாங்கு உரைக்க வேண்டும். நேரம் அறிந்து உளு என்னும் உடல் தூய்மை செய்து பேணுதலோடு பேராளன் அல்லாஹ்வைப் பணிந்து பாங்கு சொல்ல வேண்டும்.
 அதான் குறித்து அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள் (1) பாங்கு ஒலித்து தொழுகைக்கு அழைப்பதில் உள்ள சிறப்புகளையும் சீரான ஏராளமான நன்மைகளையும் அறிந்தால் மக்கள் அதான் அழைப்பு கூற போட்டியிடுவர். நூல்- புகாரி, முஸ்லிம். (2) தொழுகைக்காக பாங்கு ஒலிக்கப்படும் பொழுதும் அதன்பின் கூட்டு (ஜமாஅத்) தொழுகை துவங்குவதற்கான இகாமத் கூறப்படும் பொழுதும் சாத்தான் புறமுதுகு காட்டி அவ்வொலிகள் அவன் காதில் விழாத தொலைவிற்கு ஓடி ஒளிகிறான். அதன்பின் தொழுபவர் உட்பட அனைவரின் அகத்திலும் அலைபாயும் ஊசலாட்டத்தை உண்டு பண்ணி உளைச்சலை உருவாக்குகிறான். நூல்- புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத் , நஸஈ. (3) நாங்கள் நந்நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்பொழுது பிலால் (ரலி) பாங்கு முழங்கினார்கள். பாங்கு முடிந்ததும் பாச நபி (ஸல்) அவர்கள் எவர் இவரைப் போல உறுதியுடன் பாங்கு முழங்குகிறாரோ அவர் சொர்க்கம் செல்வார். நூல்- நஸஈ. (4) பாங்கு ஒலிப்பவரின் ஒலி எவ்வளவு தொலைவு கேட்கிறதோ அவ்வளவு தொலைவு அளவிற்கு பாங்கு உரைப்பவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அத்தொலைவு அளவில் உள்ள பசுமையான உலர்ந்தன அனைத்தும் சாட்சி பகரும். நூல்- அபூதாவூத், நஸஈ. (5) ஒருவர் இருபது ஆண்டுகள் பாங்கு சொன்னால் அவரை அல்லாஹ் இப்ராஹீம் நபி அவர்களுடன் சொர்க்கத்தில் இருக்கச் செய்வான். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடு இரவுக்குப் பிறகு தொழும் தஹஜ்ஜுத் தொழுகைக்குப் பிலால் (ரலி) அவர்களும் வைகறை சுபுஹு தொழுகைக்கு இப்னு மக்தூம் (ரலி) அவர்களும் பாங்கு கூறினார். இன்றும் மதினாவிலும் மக்காவிலும் தஹஜ்ஜுத் தொழுகைக்குப் பாங்கு சொல்லப்படுகிறது.
 - மு.அ. அபுல் அமீன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com