சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி!

சிவராத்திரி வழிபாடு ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வழிபாட்டு முறைகளால் மாறுபடுகிறது. சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் கல்குளம்,
சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி!

சிவராத்திரி வழிபாடு ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வழிபாட்டு முறைகளால் மாறுபடுகிறது. சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களுக்கு உட்பட்ட 12 சிவாலயங்களையும், 112 கி. மீ. தூரம் ஓடியும் நடந்தும் சென்று தரிசிக்கின்றனர். இதனை, "சிவாலய ஓட்டம்' என அழைக்கின்றனர். இந்த சிவாலய ஓட்டம் திருமலை மகாதேவர் கோயில், திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு மகாதேவர் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர்கோயில், பொன்மனை தீம்பிலாங்குடிமகாதேவர் கோயில், திருபன்னி பாகம்சிவன்கோயில், கல் குளம் நீலகண்ட சுவாமி கோயில், மேலாங்கோடு சிவன்கோயில், திருவிடைக்கோடு மகாதேவர் கோயில், திருவிதாங்கோடு சிவன் கோயில், திருபன்றிகோடு மகாதேவர் கோயில், திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில் ஆகிய 12 திருக்கோயில்களையும் தரிசனம் செய்வதாகும். மகாபாரதக் காலத்திலிருந்து இவ்வகை வழிபாடு நடந்தாலும் சுமார் 300 ஆண்டுகளுக்கு சான்றுகள் இருப்பதாக அறியப்படுகிறது.
பழம்பெருமை வாய்ந்த இந்த நிகழ்வு வரலாறு அடிப்படையானது. சிவ பக்தரான வியாக்ரபாத மகரிஷியே மனிதவடிவும், புலி வடிவம் கொண்ட புருஷாமிருகம் ஆனார். புருஷா மிருகம் விஷ்ணுநாமத்தை கேட்க விரும்பாத சிவமே சிந்தையுள் கொண்டது.
தர்மரின் ராஜசூய யாகத்திற்கு புருஷாமிருகத்தின்பால் தேவைப்பட்டது. தர்மர் பீமரிடம்12 ருத்ராட்ச கொட்டைகளைத் தந்து "நீ திருமால் பெருமையை பேசினால் புருஷாமிருகம் உன்னைத் துரத்தும். அவ்வாறு துரத்தும் போது ருத்ராட்சக் கொட்டைகளை வீசி எறிந்தால் அது லிங்கமாக ஸ்தாபிதமாகும். அங்கே சிவபூஜை செய்த பிறகே, மீண்டும் உன்னைத் துரத்தும். அந்த இறுதி கொட்டை எங்கே விழுகிறதோ அங்கே அரியும் அரனும் காட்சி தருவர்' என்றார்.
அவர் கொடுத்த ருத்ராட்ச கொட்டையுடன் காட்டிற்கு சென்றான் பீமன் புருஷாமிருகம் திருமலையில் ஒரு பாறையின் மீது அமர்ந்து சிவனை நோக்கி தவம் புரிந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பீமன் "கோவிந்தா, கோபாலா' என்று உரக்க கூறினார். தவம் கலைந்த புருஷாமிருகம் பீமனை துரத்தியது. அப்போது பீமன் ஒரு ருத்ராட்சத்தை தூக்கி எறிந்தான். அது சிவலிங்கமாக மாறியது. உடனே புருஷாமிருகம் சிவனை பூஜிக்க தொடங்கியது. அடுத்து திக்குறிச்சி உட்பட 10 இடங்களிலும் பீமனால் போடப்பட்ட ருத்ராட்சம் சிவலிங்கமாகியது. அங்கெல்லாம் பூஜை செய்தது. இறுதியாக நட்டாலம் என்னும் ஊரில் சென்று பீமன் "கோவிந்தா, கோபாலா' எனக்கூற அங்கு வீசிய ருத்ராட்சத்திலிருந்து சிவனும் திருமாலும் சங்கரநாராயணராகக் காட்சிதர, புருஷாமிருகமும் அரியும் சிவனும் ஒன்று என உணர்ந்து வழிபட்டு யாகத்திற்கும் பால் தந்தது.

இவ்வரலாற்று அடிப்படையில் சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் கோவிந்தா! கோபாலா!! கோஷத்துடன் மாசி மாதம் கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று மாலையணிந்து பக்தர்கள், கையில் விபூதியுடன்கூடிய மஞ்சள் பை மற்றும் பனைஓலை விசிறியுடன்12 சிவாலயங்களுக்கும் ஓடிச் சென்று இறுதியில் நட்டாலம் என்னும் ஊரில் சங்கரநாராயணரை வணங்கி ஓட்டத்தை நிறைவு செய்து அன்று இரவு முழுவதும் சிவநாமம் சொல்லி வழிபாடு செய்வது இந்தவிழாவின்சிறப்பம்சம் ஆகும்.
சிவாலயம் ஓடும் பக்தர்கள் ஏகாதசி விரதம் இருப்பவர்கள். இவர்கள் தீயினால் சுடப்பட்ட பொருள்களை சாப்பிட மாட்டார்கள். இளநீர், நுங்கு, வாழைப் பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவர். சிவன் கோயில்களில் பக்தர்கள் விஷ்ணுவின் நாமத்தை சொல்லி ஓடும் இந்த மகாசிவராத்திரி திருவிழா குமரிமாவட்டத்தில் மிகச் சிறப்பானது.
இது தொடர்பாக, மற்றொரு வரலாறும் மக்களின் வழக்கில் வழங்கி வருகின்றது.
ஒருமுறை சுண்டோதரனுக்கு அவன் கை காட்டி சுண்டினால் எதிரில் இருப்பவர் எரியக்கூடிய வரத்தை சிவபெருமான் அருளினார். வரத்தை பெற்ற சுண்டோதரன் சிவபெருமானிடமே அதனை சோதிக்க எண்ணினான். அவனைப் புரிந்து கொண்ட சிவபெருமான் 11 இடங்களில் ஓடி ஒளிந்து கொண்டார். 12-ஆவது இடத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சிவனிடம் விவரம் கேட்க, நடந்தது அறிந்து சிவபெருமானை ஒளித்துவிட்டு, கிருஷ்ணர் அழகான பெண் வேடத்தில் சுண்டோதரன் முன் தோன்றினார். அவன் அவளை திருமணம் செய்ய கேட்டான். அந்த பெண் தன்னைப் போல் நடனம் ஆடினால் திருமணம் செய்து கொள்வதாகக் கூறினாள் . இருவரும் நடனமாடினர். ஒரு கட்டத்தில் அந்த பெண் தன் தலை உச்சிக்கு நேராக கையை சுண்டினாள். சுண்டோதரனும் தான்பெற்ற வரத்தை மறந்து சுண்டுவிரலை தன் தலை உச்சியில் சுண்ட, எரிந்து சாம்பலானான். சிவனும், ஸ்ரீகிருஷ்ணரும் ஒன்றாக சேர்ந்து தோன்றி எரிந்த சுண்டோதரனை அதே நட்டாலம் என்னும் ஊரில் உயிர் பெறச் செய்தனர்.
சிவனும், விஷ்ணுவும் ஒரேஇடத்தில் தோன்றி அருள் அளித்ததால் சிவனாகிய சங்கரனும், விஷ்ணுவாகிய நாராயணரும் ஒன்றாகக் கலந்து சங்கரநாராயணராக 12-ஆவது சிவாலயமான திருநட்டாலத்தில் காட்சியளிக்கின்றனர். இந்த 12 சிவாலயங்களில் 11 சிவாலயங்களில் பக்தர்களுக்குத் திருநீறு வழங்கப்படும். 12-ஆவது திருக்கோயிலில் மட்டும் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்படுகிறது.
சிவாலய ஓட்டத்தில் பங்கு பெறுவோர் பீமனாக கையில் இருக்கும் பையில் ருத்ராட்சத்திற்கு பதிலாக விபூதியும் கொண்டு செல்கின்றனர். கும்பல் கும்பலாக பக்தர்கள் "கோபாலா கோவிந்தா' எனச் சொல்லிக் கொண்டு நடந்தும் ஓடியும் 112 கி. மீ. தொலைவைக் கடப்பது என்பது அற்புத நிகழ்வே. இவ்வாண்டு, மார்ச் 3 -ஆம் தேதி சிவாலய ஓட்டம் தொடங்கி மார்ச் 4 -ஆம் தேதி நட்டாலத்தில் முடிவடைகிறது.
தொடர்புக்கு: 70108 63361.
- எஸ். அஜீத்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com