நற்குர்ஆன் நவிலும் நல்வாழ்வு

அற்பமான உலக வாழ்வை அற்புதமாய் பொற்புடன் பொன்னாய் மிளிர நற்குர்ஆன் நவிலும் முறையில் நல்வாழ்வு வாழவேண்டும். மனிதன் நல்வழியில் நடப்பதற்கு
நற்குர்ஆன் நவிலும் நல்வாழ்வு

அற்பமான உலக வாழ்வை அற்புதமாய் பொற்புடன் பொன்னாய் மிளிர நற்குர்ஆன் நவிலும் முறையில் நல்வாழ்வு வாழவேண்டும். மனிதன் நல்வழியில் நடப்பதற்கு நற்குர்ஆனை நபிகள் (ஸல்) அவர்கள் மூலம் நமக்கு வழங்கினான்.
 அல்லாஹ் நம்பிக்கை உடையோருக்கு மெய்யாகவே அருள்புரிந்தான். ஒரு தூதரையும் அனுப்பினான். அத்தூதர் மனிதர்களுக்கு அல்லாஹ்வினுடைய வசனங்களை ஓதி காட்டி மனிதர்களைப் பரிசுத்தப் படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அம்மனிதர்கள் வழிகேட்டில் இருந்தனர் என்று எழில்மறை குர்ஆனின் 3-164 ஆவது வசனம் கூறுகிறது.
 இறைவனுக்கு இணை வைத்து, பாலியல் பாதகம், திருட்டு, கொள்ளை, கொலை முதலிய கொடூர செயல்களைச் சரியானது என்று கற்பனை செய்து கொண்டு அற்பர்களாய் வாழ்ந்த அக்கால அரபிகளை வழிகேட்டில் வாழ்ந்தவர்கள் என்று வர்ணிக்கிறது இந்த வசனம். இறைதூதர் இனிய நபி (ஸல்) அவர்கள் கனிவாய் கண்ணிய குர்ஆன் வசனங்களை ஓதி பாதக வழியில் வாழ்ந்தவர்களை வல்ல அல்லாஹ்விற்குப் பணிய வைத்து பண்பாய் வாழ செய்த நபியை மனிதர்களிலிருந்தே உருவாக்கினான் அல்லாஹ்.
 இந்த வசனம் குறிப்பிடும் வேதம் என்பது சங்கை மிகுந்த குர்ஆன்; மதிநுட்பம் நிறைந்த ஞானம் என்பது ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் காட்டிய வழிகளையும் அவர்களின் வழிகாட்டலையும் குறிக்கும்.
 முன்னுள்ள தூதர்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் அனுப்பினோம். அவ்வாறே, இந்த குர்ஆனை உங்களுக்கு இறக்கி வைத்தோம். மனிதர்களுக்கு இதைத் தெளிவாக எடுத்து காட்டுங்கள். அவர்கள் கவனித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது குர்ஆனின் 16-44 ஆவது வசனம்.
 மக்கத்தில் வாழ்ந்த நபித்துவத்தை ஏற்காத இஸ்லாமிய எதிரிகள் இறைதூதர் மனிதராகத்தான் இருக்க வேண்டுமா? வானவராக இருக்கக்கூடாதா? என்ற கேலி பேசுவோரின் வாயை அடைக்கும் மூல வசனம் இது என்று காஜின் என்ற நூலில் இறுதி தூதர் முஹம்மது மனிதர்கள்தான்; மலக்குகள் (வானவர்கள்) அல்ல என்பதை இவ்வசனம் உறுதிபடுத்துகிறது.
 குர்ஆன் மிக பெரிய அத்தாட்சி. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னிச்சையாக எதையும் கூறவில்லை. இறைதூது (வஹி) மூலம் அறிவிக்கப்பட்டதையே அறிவிக்கிறார்கள் என்று உறுதிபடுத்துகிறது உத்தம குர்ஆனின் 53- 3,4 ஆவது வசனங்கள். அந்த குர்ஆன் கூறுகிறபடி நன்மை செய்பவர்களையும் பிறருக்கு உதவுவோரையும் அல்லாஹ் நேசிப்பதைக் கூறுகிறது 2-195 ஆவது வசனம்.
 நற்குர்ஆன் நவிலும் முறையில் இறை கட்டளைகளை ஏற்று நற்செயல்கள் நாளும் தாழாது தளராது செய்து நாடி வருவோருக்கு நாடும் உதவிகளையும் நாடாதோரையும் தேடிச் சென்று தேவையான உதவிகளை ஆவலோடு ஏவாது செய்து மேவும் இறைவனின் மேலான அருளைப் பெறுவோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com