முக்கண்ணன் அமைத்த முத்துப்பந்தல் 

பட்டீஸ்வரம் என்ற பெயரைச் சொன்னால் உடன் நம் எண்ண அலைகளில் ஓடுவது அந்த அருட்கடல் துர்க்கை அம்பிகையை நோக்கியே
முக்கண்ணன் அமைத்த முத்துப்பந்தல் 

பட்டீஸ்வரம் என்ற பெயரைச் சொன்னால் உடன் நம் எண்ண அலைகளில் ஓடுவது அந்த அருட்கடல் துர்க்கை அம்பிகையை நோக்கியே. இவள் எப்படி இங்கே வந்தாள்? சோழர்களின் பெரிய வளர்ச்சி என்பது இங்கிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள பழையாறை என்ற நகரத்தில் தன் தலைநகரை வைத்துக் கொண்டது வரை இருந்தது.
 ராஜராஜ சோழன் காலத்திற்குப் பின்தான் தஞ்சை தலைநகரமாயிற்று. அதுவரை பழையாறை பெரும் வரலாற்று நிகழ்வுகளை சந்தித்தது. ஒவ்வொரு முறை போருக்கு செல்லும் போதும் அரண்மனை வாயிலில் குடி கொண்டிருந்த காக்கும் தேவதையான கொற்றவை தெய்வத்திற்கு களபலி கொடுத்து விட்டு தான் போருக்குச் செல்வார்கள். எப்போதும் வெற்றிமுகம் தான். காலம் மாறியது. தலைநகர் மாறியது. அரண்மனை அழிந்து மண்மேடாய் ஆனது. அந்த கொற்றவை தெய்வமும் மண்ணோடு மண்ணாய் புதைந்தாள்.
 நடமாடும் தெய்வம் என்று நம் எல்லோராலும் அழைக்கப்படும் காஞ்சி மாமுனிவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இந்த பகுதியில் ஒருமுறை சாதுர்மாஸ்ய விரதம் இருந்தபோது, இதன் சரித்திரச் சிறப்பை உணர்ந்து தேடியதில் இந்த கொற்றவை தெய்வம் புதைந்து கிடந்ததாகவும், அவரது பெருமுயற்சியால் இங்கே தெற்குக் கோபுரவாசலில் நிர்மாணம் செய்யப்பட்டதாகவும் ஒரு செய்தி உலா வருகிறது. இந்த கொற்றவை தெய்வம் தான் எட்டு கரங்களைக் கொண்டு சாந்தமான விஷ்ணு துர்க்கையாக இங்கு அருளாட்சி செய்து வருகிறாள். பரந்து விரிந்த பிரம்மாண்டமான இக்கோயில், சோழர், பாண்டியர், பல்லவ மன்னர்களால் பல சமயங்களில் கட்டப்பட்டதாகும். 16- ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் விரிவு படுத்தப்பட்டதுமான இந்த பாடல் பெற்ற தலம் இப்போது சிறப்பாய் இருப்பதற்கு அம்பிகை துர்க்கையே காரணமாய் இருக்கிறாள்.
 குடந்தையிலிருந்து தாராசுரம் வழியாக 6 கி.மீ. தூரத்தில் உள்ளது பட்டீஸ்வரம். இத்தல வரலாற்றின்படி, பராசக்தி தவம் செய்வதற்கு ஏற்ற இடமாக இவ்வூரை தேர்வு செய்தாள். அவளுக்கு உதவுவதற்கு காமதேனு தன் மகளான பட்டியை உடன் அனுப்பி வைத்தாள். தேவியின் தவத்தில் மகிழ்ந்த சிவனார், தரிசனம் தந்து தேனுபுரீஸ்வரர் ஆனார். உடனிருந்த பட்டியும் உமையவளுடன் கூடவே தவமிருந்து இந்த ஈசனை வழிபட்டுக் கொண்டு வந்தாள். அவளது தவத்தையும் மெச்சி, அவளுக்கும் அருளியதால் அவளது பெயரிலேயே பட்டீஸ்வரம் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது. உமையவளுக்கு ஞானாம்பிகை என்றும் பெயர்.
 தீவிர சிவ பக்தனுமான ராவணனை, ராமன் கொன்றதால் ஏற்பட்ட மூன்று தோஷத்தில் மூன்றாவதான சாயாஹத்தி தோஷம் தீர, இங்கு ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, இதனருகில் ஒரு கிணற்றினை ஏற்படுத்தி, அதில் தனுஷ்கோடியிலிருந்து கொண்டு வந்த நன்னீரை ஊற்றி, இந்த சிவலிங்கத்தை ராமன் வழிபட்டதாக ஒரு வரலாறு உண்டு. இதனருகில் ஓர் ஆஞ்சநேயர் அதற்கு சாட்சியாக இருக்கிறார்.

சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் தன் அடியார்களுடன் அருகிலுள்ள திருச்சக்திமுத்தம் வந்து அங்குள்ள கோயிலில் இறைவனை வழிபட்டு பின் அங்கிருந்து தேனுபுரீஸ்வரரைக் காணப் புறப்பட்டார். வரும் வழியில் வெயிலின் தாக்கம் அதிகமானதால் சம்பந்தர் சூடு தாங்காமல் தவித்தார். தன் தேவியால் ஞானப்பால் கொடுக்கப்பட்ட புதல்வன் சிரமப்படுவதைப் பார்த்து தந்தையான ஈசன் தன் தொண்டன் படும் வேதனை தாங்காமல் சிவகணங்களை ஏவிவிட்டு முத்தினால் ஆன பந்தல் ஒன்று போடச்செய்து, ஒரு குளிர்ச்சியான சூழ்நிலையை சிவனார் ஏற்படுத்தினார்.
 இதில் மகிழ்ந்த ஞானசம்பந்தர் பல்லக்கிலிருந்து இறங்கி நடந்து வந்தார். தான் கொடுத்த பொற்றாளத்துடன் (ஜால்ரா) பாடிக்கொண்டு வரும் தன் ஞானக்குழந்தை அசைந்தாடி நடந்து வரும் அழகை மூலஸ்தானத்திலிருந்து பார்ப்பதற்கு இடையூராக இருந்த நந்தியை, "சற்றே விலகியிரும் நந்தி பகவானே, அவன் நடந்து வரும் அழகை பார்க்க வேண்டும்' என்றாராம். அதனால் நந்தி பகவான் தேனுபுரீஸ்வரருக்கு எதிரில் இல்லாமல் சற்று விலகியுள்ளதை இன்றும் பார்க்கலாம்.
 இந்த நிகழ்வை நினைவு கூறுமுகமாக ஒவ்வொரு வருடமும் தமிழ் ஆனி மாதம் முதல் தேதியன்று இந்த முத்துப் பந்தல் உற்சவம் இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அருகிலுள்ள திரு சக்தி முத்தம் என்ற பாடல் பெற்ற தலத்திலிருந்து ஞானசம்பந்தர் புறப்பட்டு இத்திருக்கோயிலை அடைவார். இந்த வருடம் ஜூன் 16 -ஆம் தேதி இந்த விழா நடைபெறுகிறது.
 - எஸ். எஸ். சீதாராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com