புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 12 

கடவுளால் வாக்களிக்கப்பட்ட தேசம்-இஸ்ரúல், பாலஸ்தீனம் இஸ்ரேல் நாட்டின் வரலாறு கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது. தேராகு மகனாகிய ஆபிரகாம் என்பவர்
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 12 

கடவுளால் வாக்களிக்கப்பட்ட தேசம்-இஸ்ரúல், பாலஸ்தீனம் இஸ்ரேல் நாட்டின் வரலாறு கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது. தேராகு மகனாகிய ஆபிரகாம் என்பவர், ஊர் என்னும் கல்தேயருடைய பட்டணத்தை விட்டு தற்போது இஸ்ரேல் என்றழைக்கப்படுகிற கானான் தேசத்தை கி.மு. 2161- இல் வந்தடைந்தார். ஆபிரகாமின் மகன் ஈசாக்கு. ஈசாக்குக்கு இரண்டு மகன்கள்: ஏசா மற்றும் யாக்கோபு.
 ஈசாக்கின் இளைய மகன் யாக்கோபின்மேல் கடவுள் பிரியமாக இருந்தது மட்டுமன்றி அவனுக்கு இஸ்ரேல் என்றும் பெயரிட்டார். "அப்போது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் எனப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்."- ஆதியாகமம் 32:28
 யாக்கோபின் வம்சா வழியினர் இஸ்ரேலியர் என்று அழைக்கப்பட்டனர். இதில் யாக்கோபின் 12 மகன்களில் ஒருவராகிய யூதாவின் வம்சா வழியினர் யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். கானான் தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை அடுத்து இஸ்ரேலியர்கள் (எபிரேயர்கள்) கி.மு.1871-ஆம் ஆண்டில் எகிப்துக்குச் சென்றனர்.
 கிட்டத்தட்ட 430 ஆண்டுகள் எகிப்தில் அடிமைகளாக நடத்தப்பட்டனர். இதையடுத்து கி.மு.1441-ஆம் ஆண்டில் மோசே தலைமையில் சீனாய் வனாந்திரம் வழியாகச் சென்ற அவர்கள் 40 ஆண்டுகளுக்கு பின் கி.மு.1400-ஆம் ஆண்டில் யோசுவா தலைமையில் கானானுக்குள் சென்றனர். கானானியரை வெற்றி கொண்ட இஸ்ரவேலர் அத்தேசத்தில் குடியேறினர். கானான் தேசம் இஸ்ரேல் தேசம் என அழைக்கப்ப்பட்டது.
 தொடக்கத்தில் நியாயாதிபதிகளால் நிர்வகிக்கப்பட்ட இஸ்ரேல் தேசம், கி.மு.1020 முதல் ராஜாக்களால் ஆளப்பட்டது. இஸ்ரேல் ராஜாக்களில் மிக முக்கியமானவர்கள், முதல் அரசனான சவுல், இஸ்ரேலை வலிமை வாய்ந்த நாடாக மாற்றிய தாவீது மற்றும் தாவீதின் மகனும் மிகுந்த ஞானமுள்ளவருமான சாலமோன் ஆகியோர். ஜெருசலேம் ஆலயத்தைக் கட்டியவர் சாலமோன் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு இஸ்ரேல் நாடு இரண்டாகப் பிரிந்து சமாரியாவைத் தலைநகராகக் கொண்டு இஸ்ரேல் என்றும் ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு யூதேயா என்றும் இரு நாடுகளாக நிர்வகிக்கப்பட்டன.
 கி.மு. 722-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு சீரியர்களால் அழிக்கப்பட்டது மட்டுமன்றி அதன் குடிமக்களும் சிதறடிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்குப் பிறகு பாபிலோனால் (ஈராக்) யூதேயா பிடிக்கப்பட்டது. யூதேயாவின் குடிமக்கள் நாடு கடத்தப்பட்டனர். கி.மு. 586-இல் ஜெருசலேம் ஆலயம் பாபிலோனியர்களால் இடிக்கப்பட்டது.
 பெரும்பாலான யூதர்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு, பெர்சிய அரசர் சைரஸ், பாபிலோனியாவைக் கைப்பற்றினார். அவர் யூதர்களுக்கு மீண்டும் ஜெருசலேத்தை நிர்மாணிக்கும் அனுமதியை அளித்து, அதில் குடியிருக்கும் உரிமையையும் வழங்கினார்.
 கி.மு. 538-இல் கிட்டத்தட்ட 50 ஆயிரம் யூதர்கள் செருபாபேல் தலைமையில் இஸ்ரேலுக்குத் திரும்பினர். பின்னர் எஸ்ரா தலைமையில் இன்னொரு கூட்டமாக யூதர்கள் நாடு திரும்பினர். கி.மு. 520-515-இல் ஜெருசலேம் ஆலயம் இரண்டாவது முறையாகக் கட்டப்பட்டது. கி.மு.333-இல் அலெக்ஸாண்டரின் படைகளால் கைப்பற்றப்பட்ட இஸ்ரேல் கி.மு. 63 வரை கிரேக்கர்களின் பிடியில் இருந்தது.
 டைட்டஸ் தலைமையிலான ரோமப் படை கி.மு. 63- இல் ஜெருசலேம் நகரைப் பிடித்தது. கி.பி. 70 -இல் ஜெருசலேம் ஆலயம் ரோமானியர்களால் மீண்டும் இடிக்கப்பட்டது. ஜெருசலேம் நகரை ஏலியா கேபிடோலினா என்று பெயர் மாற்றிய ரோமர்கள், கி.பி.313 வரை இஸ்ரேலை ஆண்டனர். கி.பி. 313 முதல் 636 வரை பைசாண்டிய அரசால் ஆளப்பட்ட இஸ்ரேல் கி.பி. 636-இல் அரபியர்கள் வசம் வந்தது.
 பைசாண்டிய அரசர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காலிஃப் அப்டெல் மாலிக் ஆலயம் இடிக்கப்பட்ட இடத்தில் டோம் ஆஃப் தி ராக்-ஐ கட்டினர். இவ்வாறாக, யூதர்களின் ஆலயம் இருந்த இடத்தில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டது.
 கி.பி.1099 முதல் 1291 வரை சிலுவைப்போர் வீரர்கள் வசமும் கி.பி. 1291 முதல் 1516 வரை மம்லுக் அரசின் வசமும் இஸ்ரேல் நாடு இருந்தது. 1516 முதல் 1918 வரை ஓட்டோமான் அரசர்கள் இஸ்ரேலை ஆண்டனர். சுல்தான் சுலைமான் காலத்தில் (1520-1566) பழைய ஜெருசலேமின் சுவர்கள் மீண்டும் கட்டப்பட்டது. 1799- இல் ஃப்ரான்ஸின் நெப்போலியன் போனபார்ட் காசா நகரைக் கைப்பற்றி ஜெருசலேமை நோக்கி விரைந்தார். யூதர்களை ஃப்ரான்ஸ் படையினரின் உளவாளிகள் என்று சந்தேகித்த முகமதியர்கள் அவர்களை அழிக்கத் திட்டமிட்டனர். இதற்கிடையில் திடீரெனத் தன் திட்டத்தை மாற்றிய நெப்போலியன் ஜெருசலேமைத் தாக்காமல் திரும்பிச் சென்றார். யூதர்கள் இறைவனிடம் செய்த மன்றாட்டு தான் இதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
 - ஜெபலின் ஜான்
 (தொடரும்...)
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com