காலங்களுக்கு எட்டாத வரதன் தரிசனம்! 

தொல்பழங்காலத்தில் உலகெங்கிலும் இயற்கை வழிபாடு செழித்திருந்தது. இயற்கையோடு அமைந்த வாழ்வு என்பது வகுக்கப்படாத நியதியாகக் கருதப்பட்டு மரபு வழியாகப் பின்பற்றப்பட்டு வந்தது
காலங்களுக்கு எட்டாத வரதன் தரிசனம்! 

 அத்திகிரி - 2
 தொல்பழங்காலத்தில் உலகெங்கிலும் இயற்கை வழிபாடு செழித்திருந்தது. இயற்கையோடு அமைந்த வாழ்வு என்பது வகுக்கப்படாத நியதியாகக் கருதப்பட்டு மரபு வழியாகப் பின்பற்றப்பட்டு வந்தது என்பதை தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. மரம், செடி, கொடிகளை மக்கள் போற்றி வணங்கினர். கொடிநிலை, கந்தழி, வள்ளி என தொல்காப்பியரும் இலக்கணம் வகுத்து காட்டியுள்ளார். சங்க இலக்கியங்களில் மரங்களைவழிபட்டமை குறிப்பிடப்படுகின்றன.
 மரங்களை வழிபடுதல், மரத்தினடியில் இறையுருவங்களை வைத்து வணங்குதல், மரத்தினால் செய்த உருவங்களை சடங்குகளுக்கு உட்படுத்தல், ஊர் பொது இடத்தில் காவல் மரங்களை வைத்து வழிபடுதல் போன்றவை பழங்குடி மக்களால் இன்றும் பின்பற்றும் மரபாகும்.
 அரசர்கள் காவல் மரங்களை தங்கள் உயிரினும் மேலாகப் போற்றினர். மூவேந்தர்களுக்கும் பனை, வேம்பு, ஆத்தி மரங்களே குலச்சின்னங்களாக விளங்கின. சூரியன், சந்திரன், தாவரங்கள், ஆறுகள், நீர், நில வாழ்வன ஆகியவை குலக்குறியீடுகளாக அரசுருவாக்கக் காலத்தில் நாணயங்களிலும் செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
 ஒவ்வொரு இனமும் தன்னை ஒரு விலங்குடனோ. மரம் அல்லது தாவரங்களுடனோ தொடர்புபடுத்திக் கொள்கிறது. பிறகு, அந்தக் குறியீட்டைத் தன்னுடைய குலக்குறியாக அழைத்துக் கொள்கிறது. அந்த இனத்தைச் சேர்ந்த மூதாதையர்கள், தொடர்புடைய விலங்கு அல்லது தாவரத்தில் இருந்து தோன்றியவர்கள் என்று தங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்வர். பண்டைய காலத்தில் வெளியிடப்பட்ட முத்திரை நாணயங்களில் சூரியன், ஆறு போன்ற இயற்கைக் காட்சிகளோடு வேலியிடப்பட்ட மரம் ஒன்றும் காட்டப்படும். இம்மரத்தில் தெய்வம் உறைவதாகவும், அது குலத்தினைக் காப்பதாகவும் அதனை வழி படத்தொடங்கினர்.
 மரங்களில் தெய்வம் உள்ள செய்தி சங்க இலக்கியங்களில் விரிவாகக் காணப்படுகின்றது. மரத்தின் அடியிலும் தெய்வத்தை அமைத்து வழிபடுவதும் உண்டு. "கள்ளி நீழற்கடவுள் வாழ்த்தி (புறம்.260) என்ற செய்தி கள்ளி மரத்தின் அடியில் தெய்வம் இருந்ததைக் காட்டுகிறது. குளக்கரை, ஆற்றங்கரை, ஊரின் நடுப்பகுதி ஆகிய இடங்களில் மரங்களை நட்டுத் தெய்வமாக வழிபட்டனர். கந்துடை நிலை என்று அதனைக் குறிப்பிட்டனர்.
 கந்துடை நிலை, கந்துத் தறி என்பனவெல்லாம் தூண் வழிபாட்டைக் குறிப்பன. தூண் வழிபாடு வைணவத்தில் மிக இன்றியமையாத வழிபாடாகும் . தூணில் உறையும் நரசிம்மமூர்த்தி வழிபாடு தென்னகத்தின் குறிப்பிடத்தக்க வளமை வழிபாடாகும். இதனை ஸ்தானு நரசிம்மர் வழிபாடு எனக் குறிப்பர்.
 கற்றளிகள் உருவாவதற்கு முன்பு மரங்களில் கீழேயே கடவுளரை அமைத்து வழிபட்டனர் . காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் ஒற்றை மாமரத்தடியில் உமை மணல் லிங்கம் நிறுவி வழிபட்டதை இங்கு கருத்தில் கொள்ளலாம். பிற்காலத்தில் கோயில்கள் கட்டப் பெற்றபோது அம்மரங்கள் தலமரங்கள் ஆயின. புறநானூற்றுப் பாடல் ஒன்று தூணில் உறையும் கடவுளைப் பற்றிக் கூறுகின்றது. பொதியில் என்பது மன்றத்திலிருந்த ஒரு பகுதி. அங்கு தூண் நட்டு வழிபடும் வழக்கம் பண்டைய நாளிலிருந்தது. (புறம் 51:12-17).
 தமிழின் பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் மாயோன் மேய காடுறை உலகமும் என மரங்கள் நிறைந்த கானகத்தின் மேய்ச்சல் நில தெய்வமாக திருமால் வணங்கப்படுகிறார். முல்லை நிலக் கடவுள் திருமால். முல்லை நிலத்து மக்கள் மாயோனை வழிபடுவர். முல்லை நிலமானது காடும் காடு சார்ந்த நிலப்பரப்புமாகும். எனவே, மர வழிபாடு என்பது வைணவத்தில் தொன்று தொட்டு விளங்கி வரும் பண்பாட்டு மரபாகும். பழங்குடிகளின் தொல்மரபை வைணவம் அவ்வாறே ஏற்றுக்கொண்டு அனைவருக்குமான நெறியைக் காட்டி நின்றது.
 பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மரங்களில் நான் அரசமரம் என்று சொல்கிறார். அரசமரம் போன்றே அத்தி மரமும் இயற்கை மகத்துவம் வாய்ந்தது என்பதை மருத்துவநூல்கள் இயம்புகின்றன. சங்ககாலத்தில் இந்த மரத்தின் பெயர் அதவம். கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் அத்திமரம் சுக்ரனின் குணாதிசயங்களைக் கொண்டதாக சோதிட நூல்கள் கூறுகின்றன. அசுர குரு சுக்கிராச்சாரியார் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாக சதுர்மாசிய மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவைக் கிழித்துக் கொன்று வதம் செய்த பின்பு, பெருமாள் அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டாராம். தத்தாத்திரேயர் அத்தி மரத்திலே வாசம் செய்வதாக குரு சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
 காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு தொண்டை மண்டலத்தினை ஆட்சி செய்த பல்லவப் பேரரசர்கள் "காடவர்கள் கோன்' என்றழைக்கப்படுகின்றனர். காடழித்து நாடாக்கி விளைநிலம் பெருக்கி, பல்குடிகளை அங்கு குடியேற்றிய பல்லவ அரசர்களாகிய காடவர்கள் வைணவ மரபினைப் போற்றி பாதுகாத்தவர்கள். அக்காடவ அரசர்கள் முல்லை நில மாயோனுக்கு பல கோயில்களை எடுப்பித்துள்ளனர். இரண்டாம் நந்திவர்மன் கட்டிய வைகுண்டப் பெருமாள் கோயிலில் வரிசையாக காட்டப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்கள் பல்லவர்களின் குலம் விஷ்ணுவின் உந்தியிலிருந்து தொடங்குவதாக காட்டுகின்றன. இத்தகு சீர்மிகு பல்லவ மன்னர்கள் காலத்திய அத்திகிரி வரதரின் திருக்கோயிலானது பல்லவர்கள் ஆண்ட காஞ்சி மண்ணின் மணிமுடியில் விளங்கும் முத்தைப் போன்றதாகும்.
 வைணவ திவ்விய தேசங்களில் மலை என திருமலையையும், கோயில் என்றால் திருவரங்கத்தையும் பெருமாள் கோயில் என காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயிலையும் குறிப்பர். இத்திருக்கோயிலின் மூலவர் பிம்பங்கள் மூன்றும் மூன்று வகையால் உருவானவை. திருமலையில் சிலாபேரமாகவும் திருவரங்கத்தில் சுதாபேரமாகவும் காஞ்சியில் தாருபேரமாகவும் தொடக்கம் முதலே திருமால் எழுந்தருளியுள்ளார்.
 அத்தி மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியான அத்திகிரி என்றழைக்கப்படும் இத்திருக்கோயிலில் காலம் இது என உணர முடியாத காலத்திலேயே அத்தி மரத்திலே திருமால் உறைந்துள்ளார். அப்போதே வேண்டியதை வழங்கும் வளமை பொருந்திய அத்தி மரத்தில் இறைவன் உறைந்ததாலேயே வரதர் என்றழைக்கப்படுகிறார் காலம் குறிப்பிட முடியாத காஞ்சி வரதன் வழிபாடு என்பதால் அத்தியிலுதித்த வரதன் எப்போதும் அருளுவான் என்பது நாட்டு வழக்கு.
 - கோ . சசிகலா
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com