வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

சோம யாகத்திற்கு வந்தருளிய பரமன்!

By  - எஸ். எஸ். சீதாராமன்| DIN | Published: 09th June 2019 11:00 AM

யஜுர்வேதத்தை முற்றிலுமாக கற்றபின்  அதன் அடுத்த நிலையைக் முற்றும் கற்றவர்; உலக நன்மைக்காக செய்யும் ஓர் ஒப்பற்ற யாகம் சோம யாகம். இந்த யாகத்தை வேதத்தில் வகுத்துள்ள முறைப்படி மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆறு நாள்கள் செய்யவேண்டும். இதில் வேதம் படித்த வேதவிற்பன்னர் ஒருவருக்கு மூன்று உதவியாளர்கள் என பதினாறு (16) வேதவிற்பன்னர்களை கொண்டு 6 நாள்கள் நடத்தப்படும் இதற்கு சோமயாகம் என்று பெயர். 

இந்த யாகம் செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு, துர்தேவதைகளால் ஏற்படும் இன்னல்கள் ஆகியவை அழிக்கப்பட்டு சத்தான நல்ல சக்தியை நம்மைச் சுற்றி இப்பூவுலகில் உண்டாக்குகிறது. இதில் மிக முக்கியமாக, சோமலதை என்ற மூலிகையைப் பிழிந்தால் கிடைக்கும் சோமரசம் என்ற ஓர் ஒளஷத பானம் இறையனாருக்கு நெய்வேத்யமாகப் படைக்கப்படுகிறது. 

நித்ய அக்னிஹோத்ரம் என்பது தினமும் சூரியனை முறையாக அழைத்து ஹோமம் செய்து வழிபடுதல் ஆகும். சோம யாகத்தை செய்பவர் நித்ய அக்னிஹோத்ரியாக இருக்க வேண்டும். இந்த சோம யாகத்தை செய்வதற்கு பெரும் பொருள்செலவு ஆகும். லாப நோக்கம் இல்லாத, விபரம் அறிந்த ஒரு நித்ய அக்னிஹோத்ரிக்கு, பெருந்தனக்காரர்கள் பலர் பொருளுதவி செய்து பேராதரவளித்தால் மட்டுமே இதை செய்ய முடியும். இந்த சோம யாகத்தை பலமுறை செய்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு முன் சோமயாஜி அல்லது சோமயாஜுலு என்ற அடைமொழியால் அழைக்கப்படுகிறார்கள். 

இப்படி செய்தவர்களில் முக்கியமானவரும், 63 நாயன்மார்களில் ஒருவருமான சோமயாஜி மாறநாயனார்; இவரை சோமாசி நாயனார் என்றும் அழைப்பர். இவர் அந்தணர் குலத்தில் உதித்தவர். பக்திக்கு ஒர் இலக்கணமாய் திகழ்ந்த இவருக்கு தான் செய்யும் இந்த சோமயாகத்தில் இறையனார் எம்பெருமான் மகாதேவனே நேரில் வந்து அவிர்பாகம் வாங்கி செல்ல வேண்டுமென்ற ஒர் ஆசை. அது ஒவ்வொரு முறையும் நடந்தேறாததால் மனக்கலக்கம் அடைந்தார். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு பெரும் கபம் ஏற்பட்டு அவதியுற்றார். 

இதை கேள்வியுற்ற சோமயாஜி நாயனார்; சுந்தரமூர்த்தி நாயனார் ஈசனின் உள்ளம் கவர் சீடன் என்பதால், அவருடன் நட்பை வளர்த்துக்கொண்டு; தொடர்ந்து அவருக்கு தூதுவளை பூ, காய், கீரையினை பக்குவம் செய்து கொடுத்து வர; சுந்தரருக்கு கபம் நீங்கி சுபமானார். இதற்கு கைமாறாக, தான் செய்யும் வேள்வியான சோமயாகத்திற்கு எம்பெருமான் திருவாரூர் தியாகேசனை அழைத்து வந்து; அவிர்பாகம் ஈசனே நேரில் வாங்கிக்கொள்ள வேண்டுமென்று வேண்டினார். 

சுந்தரரின் அன்புக்கு கட்டுப்படும் ஈசன்; புலயன் உருவில் நான்கு வேதத்தையும் நான்கு நாய்களாகக் கொண்டு, இறந்த கன்றினை தோளில் சுமந்து கொண்டு, குழந்தை உருவில் விநாயகரையும், முருகனையும் அழைத்துக் கொண்டு, அம்பிகையின் தலையில் மதுக்குடத்தை வைத்து தாரை தப்பட்டையுடன் சோமயாஜி நாயனாரின் யாகசாலைக்கு வர; அங்கிருந்தவர்களெல்லாம் பயந்து நடுங்கி ஓடினர். பின் அங்கிருந்த அச்சம்தீர்த்த விநாயகர்; வந்திருப்பது ஈசனே என்பதை சோமயாஜி நாயனாருக்கு உணர்த்த, மகாதேவனுக்கு அவிர்ப்பாகம் நேரில் தரப்பட்டது. 

இந்த நிகழ்ச்சி, வைகாசி மாசம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடந்தேறியது. ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு சோமயாஜி நாயனார் பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் உள்ள “கோவில் திருமாளம்’ என்ற ஊரில் மிகச்சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் யாகம் நடைபெறும்போது; உச்சிகால வேளையில் தியாகேசர் இங்கு வருவதாக ஐதீகம். இங்குள்ள இத்திருக்கோயில் சோழமன்னன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. 

இவ்வருடம் இந்த விழா ஜூன் மாதம் 5 -ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான இறைவனே நேரில் வந்து அவிர்பாகம் பெற்ற சோமயாகப் பெருவிழா, ஆயில்யம் நட்சத்திரம் வரும் உச்சிகால வேளையில் 8.6.2019 சனிக்கிழமை அன்று கோயில்திருமாளம் என்ற ஊரில் அருளாட்சி செய்துவரும் ஸ்ரீபயக்ஷயாம்பிகை சமேத ஸ்ரீமகாகாளநாத சுவாமி ஆலயத்திற்கு அருகில் நடைபெறுகிறது. ஜூன் 11 அன்று புஷ்பபல்லக்கு வைபவத்துடன் நிறைவுபெறுகிறது. 

இவ்வூர் கும்பகோணம் பூந்தோட்டம் பஸ் மார்க்கத்தில் உள்ளது. மயிலாடு துறையிலிருந்தும் இவ்வூருக்கு பேரூந்து வசதி உள்ளது. நாகதோஷம், பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலமாக இருப்பதால்; தனி நபரால் இது போன்ற பெரிய யாகங்கள் செய்வது மிகவும் கடினமான ஒன்றாதலால்; இக்கோயிலில் நடைபெறும் இந்த யாகத்தில் கலந்து கொண்டு நன்மையை முழுமையாகப் பெறுவோம். 

 தொடர்புக்கு: 04366-239909 / 94866 01401.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மன மாசு அகற்றும் மந்திரம்!
வெண்ணெய் கண்ணன்!
பொருநை போற்றுதும்! 54 டாக்டர் சுதா சேஷய்யன்
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 21
நிகழ்வுகள்